என் மலர்
திருவள்ளூர்
- வீட்டில் இருந்த தர்ஷினிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு புதிய காலனியை சேர்ந்தவர் சபாபதி. இவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவியரசி. இவர்களது மகள் தர்ஷினிதா (வயது 15). பண்ணூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கூழ் ஊற்ற வேண்டும் என்பதால் வெளியே விளையாட செல்லாமல் வீட்டை சுத்தம் செய்யுமாறு தர்ஷினிதாவை தாய் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தர்ஷினிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாதவரம் பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
- மின்கம்பங்கள் சாயந்தாலோ மின்கம்பம் அருந்து விழுந்தாலோ உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாதவரம்:
மாதவரம் அருகே உள்ள தபால் பெட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். இந்த சாலையில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், கோவில் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களாக உள்ளன.
மாதவரம் பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அவை எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விடும் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கின்றன. இதுபற்றி பொது மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் சேதமான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தபால் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து துகள்கள் கொட்டி வெற்றிடமாக உள்ளது. இதன் அடிப்பகுதி பலம் இல்லாமல் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் சரியும் நிலை காணப்படுகிறது.
இதேபோல் வடபெரும்பாக்கம்-மாதவரம் செல்லும் சாலை, கொசப்பூர்- மாதவரம் சாலை, வட பெரும்பாக்கம்-மாதவரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே மற்றும் புழல் அருகே உள்ள மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து இது குறித்து சமூக ஆர்வலர் சுனில் என்பவர் கூறும்போது, மாதவரம், வடபெரும்பாக்கம், கொசப்பூர், புழல், மாதவரம் பால்பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவிலான சேதமான மின்கம்பங்கள் உள்ளன.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த மின்கம்பங்கள் பல மாதங்களாக இப்படியே உள்ளது. மின்கம்பங்கள் அருகே பள்ளி குழந்தைகளும் வயதானவர்களும் பெண்கள் என பல தரப்பினர் சென்று வருகின்றனர். பிரதான சாலைகளில் உள்ள சேதமான மின்கம்பங்கள் சாயந்தாலோ மின்கம்பம் அருந்து விழுந்தாலோ உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாதவரம் மண்டலம், 33-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் செங்குன்றம்-வில்லிவாக்கம் சாலையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 15 லட்சம் லிட்டர் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டும் பணி தொடங்கியது. தற்போது பணி முடிந்து விட்ட நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என லட்சுமிபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் கூறும்போது, மாதவரம் லட்சுமிபுரம் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வராததால் லட்சுமிபுரம் , ஆசிரியர் காலனி, ஸ்டார் விஜய் நகர், சரஸ்வதி நகர், சப்தகிரி நகர், செல்வம் நகர், ரமணி நகர், செகரட்டரி காலனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது என்றார்.
- மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
- கடந்த இரண்டு வருடமாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் லோடு ஏற்றி செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூர் பகுதியை சுற்றியுள்ள அத்திப்பட்டு, வல்லூர், கொண்டக்கரை, காட்டுப் பள்ளி, வடசென்னை, உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும், அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இந்தியன் ஆயில் நிறுவனம், துறைமுகம், நிலக்கரி முனையம் தனியார் தொழிற் சாலைகள், நிறுவனங்கள் உள்ளன.
இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணலி சாலை, வண்டலூர் சாலை, பொன்னேரி சாலை, எண்ணூர் கடற்கரை சாலை வழியாக பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றன.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலைகளில், நீண்ட தூரத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை சாலையின் ஓரத்தில் டிரைவர்கள் நிறுத்தி சமையல் செய்து சாப்பிட்டும், ஓய்வெடுத்தும் செல்வது வழக்கம். இவ்வாறு சாலையின் ஓரத்தில் நிற்கும் லாரிகளை குறிவைத்து மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் அத்திப்பட்டு நிலக்கரி முனையத்தில், லோடுமேன் ஆக வேலை செய்து வரும் எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் இரவு வேலை முடித்துவிட்டு நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்றதால் பாலசந்தரை கொள்ளை கும்பல் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இதனால் மீஞ்சூரை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வந்து செல்லவே லாரிடிரைவர்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, மீஞ்சூரை சுற்றி உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை குறிவைத்து அடிக்கடி நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் லாரி டிரைவர்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. காமராஜர் துறை முக சாலையில் இருந்து, நிலக்கரி முனையத்திற்கு 1.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை பயன்படுத்தி லாரிகள் சென்று வருகின்றன.
கடந்த இரண்டு வருடமாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் லோடு ஏற்றி செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை என்றனர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை.
- கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவிலலை.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ்நிலையத்தில் இளம்பெண்ணின் கணவர் புகார் செய்தார். விசாரணையில் மாயமான இளம்பெண் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- விபரங்களை தனிப்படை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் அப்பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து பணிகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயபிரகாசை மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்னை வியாசர்பாடிக்கு கொண்டு சென்று மாமூல் கேட்டு மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து மாதந்தோறும் மாமூல் தரவேண்டும் என்று கூறி மிரட்டி விடுவித்ததாக தெரிகிறது.
இது குறித்து ஜெயபிரகாஷ் மீஞ்சூர் போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்அஸ்வத்தாமன், பட்டமந்திரி அண்ணாநகரை சேர்நத அச்சுதன், கொண்டக் கரையை சேர்ந்த புகழேந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, 7 தோட்டாக்கள், கத்தி, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுபோல் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நிறுவனங்களில் ரவுடித்தனம் செய்து மாமூல் வசூல் வேட்டை செய்து வருபவர்களின் விபரங்களை 73057 35666 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து தொழிற்சாலை, மற்றும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்த விபரங்களை தனிப்படை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
- புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.சி.என்.கண்டிகை காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அருந்ததி காலனி அருகே உள்ள மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் பொதுக்குழாயில் குடிநீர் வந்துள்ளது. அதில் புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
- மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 4-வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 50,000 டன்னிற்கும் மேலாக இமயமலை போல் குப்பைகள் உயர்ந்து உள்ளது. அந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என நகராட்சி நிர்வாகத்தினர் தரம் பிரிக்காமல் அங்கே கொட்டி வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நாள்தோறும் 1 டன்னுக்கு மேலாக லாரிகளில் மருத்துவக் கழிவுகள் எடுத்து வந்து தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப் பட்டதால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருகின்றது. திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பல்வேறு சிகிச்சைக்கு 500 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியின் படுக்கையில் இருந்து நாளொன்றுக்கு ஒரு கிலோ வரை கழிவுகள் சேருகின்றன.
இந்த மருத்துவக் கழிவுகள் 4வது வார்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை அருகே உள்ள தலக்காஞ்சேரி குப்பை மேட்டில் கொட்டி வருகின்றனர். அதில் பல்வேறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முக கவசம் போன்ற மருத்துவக் கழிவுகளை மூட்டை மூட்டையாக நகராட்சி சார்பில் கொட்டி எரித்து சென்றனர்.
4-வது வார்டை சுற்றி தலக்காஞ்சேரி, எடப்பாளையம், சின்ன ஈக்காடு உள்ளிட்ட பகுதியில் 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் முதியவர் மற்றும் குழந்தைகள் வசிக்கின்றன.
மேலும் பெரும்பாலானோர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். அந்த கால்நடைகள் மற்றும் பறவைகள் மருத்துவக் கழிவுகளை தின்பதால் நோய் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அப்பகுதியில் வசித்து வரும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்காமலும், கயிறு கட்டாமலும் இருந்தது.
- ஆமை வேகத்தில் நடை பெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி தச்சூர் சாலை எம்.ஜி.ஆர். நகர் அருகில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்காமலும், கயிறு கட்டாமலும் இருந்தது. அவ்வழியாக வந்த பொன்னேரி வள்ளலார் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (48) இருசக்கர வாகனத்துடன் அந்த 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவ ழைக்கப்பட்டு கயிறு கட்டி அவரை மேலே தூக்கி எடுத்தனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை திட்டப் பணி ஆமை வேகத்தில் நடை பெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
- குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு அனாதினம் நிலம் 100 ஏக்கர் உள்ளது.
- மினி ஓலிம்பியாட் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலையத்துக்குட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு அனாதினம் நிலம் 100 ஏக்கர் உள்ளது.
இந்த அரசு நிலத்தில் மினி ஓலிம்பியாட் விளையாட்டு மைதானம் அமைக்க ஏதுவாக இருக்குமா என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மினி ஓலிம்பியாட் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் ஊர்வலம் இக்கோவிலில் நடைபெறும்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலை மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவரங்க செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-ம் ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் ஊர்வலம் இக்கோவிலில் நடைபெறும்.
இதன்படி இக்கோவிலில் இன்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக பெருமாள் கோவிலில் இருந்து அருள்மிகு திருவரங்க செல்லியம்மனுக்கு தாய் வீட்டு சீதனமான மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல், இனிப்பு, காரம், புது துணி உள்ளிட்டவை கொண்டு வந்து செலுத்தும் நிகழ்ச்சியாக ஸ்ரீதேவி-பூதேவி சமேத அருள்மிகு அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் பஜனை கோவிலை வந்து அடைந்தது.
இதையடுத்து பால் குடத்துடன்-தாய் வீட்டு சீதனத்தையும் பக்தர்கள் இந்த ஊராட்சியில் உள்ள மாட வீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று அருள்மிகு திருவரங்க செல்லியம்மன் ஆலயத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலை மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவருக்கு அலங்காரம் மகா தீபராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை கிராம மக்களும், விழா குழுவினர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.
- நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
- பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 22 வார்டுகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.54 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 22 வார்டுகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நகராட்சி ஆணையர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணியை முடிக்காத பொன்னேரி நகராட்சியை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரியும் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் அண்ணா சிலை அருகே பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் துலுக்காணம்,மோகன், அரவிந்த்,சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் மாசிலா மணி, முன்னாள் மாநில துணைத் தலைவர் துரை ஜெயவேல், இளைஞர்அணி செயலாளர் சுதாகர், மகளிரணி கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பஞ்செட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பொன்னேரி:
பஞ்செட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து தச்சூர் கூட்டு சாலை ஆண்டார்குப்பம் கீழ்மேனி, பெரவள்ளூர் அழிஞ்சிவாக்கம் அத்திப்பேடு, சென்னிவாக்கம், மாதவரம், போரக்ஸ், கே.பி.என். நகர், வேலம்மாள் ரெசிடென்சி, சத்திரம், ஆலாடு, ஏ.ஆர்.பாளை யம், தேவதாணம், ஆலாடு, அனுப்பம்பட்டு, பொன்னரி,
ஏலியம்பேடு, வெள்ளோடை, சின்னகாவனம், பெரியகாவனம், உப்பளம், லட்சுமிபுரம், பெரும்பெடு, காவல்பட்டி வேண்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அறிவித்து உள்ளார்.






