என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
    • பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்காலிக ஆசிரியராக மோகன்(36) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று மாணவரிடம் ஆசிரியர் மோகன் சொன்னதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்றுகாலை மாணவனின் கை, காலில் வீக்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மோகனி டம் விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவா தத்தில் அவர்கள் ஆசிரியர் மோகனை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ஆசிரியர் மோகனை மீட்டனர். தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மோகன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர் குறுக்கிட்டு சந்தேகம் கேட்டதாலும் அறிவியல் பாடத்தில் குறிப்பு எடுக்க சொன்னபோது புரியவில்லை என்று கூறியதாலும் மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் வைலட்மேரி இசபெல்லா தலைமையில் கல்வி அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை கிராமமக்கள் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக பள்ளியில் விசாரணை நடந்து வருகிறது. விசார ணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    திருவள்ளூர்:

    ஆடிக்கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை யொட்டி இன்று அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    பக்தர்கள் அதிக அளவு குவிந்ததால் மலைக்கோவில் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை, முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதில் திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து 240 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாகாசாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி ஆறுமுகசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது.

    சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம், பால் காவடி, பன்னீர் காவடியுடன் பக்தி கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்தனர். சிறப்பு வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு உறுப்பினர் டி.லட்சுமி நாராயணன் பங்கேற்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் சிறுவாபுரி முருகன் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு பகுதியில் உள்ள முத்துக்குமரன்சுவாமி கோவிலில் ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அன்னதானம், சாமி ஊர்வலம் நடை பெற்றது.

    சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12 மணி வரை சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 5மணி முதல் அபிஷேகம் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    அடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய கோவில் முன்பு குவிந்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் "கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா" என்று பக்தி கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வெயிலின் தாக்கமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரிசையில் காத்து நின்று செல்லும் வழி முழுவதும் 'அரேபியன் டென்ட்' அமைக்கப்பட்டு உள்ளது .மேலும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் 3 இடங்களில் குடி தண்ணீர் பந்தல், தற்காலிக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. வாகனம் நிறுத்து வதற்கு தனி இடமும் ஒதுக்கீடு செய்து இருந்தனர்.

    இன்று இரவு வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. இரவு 11மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், வாலாஜாபாத் அருகே உள்ள இளைஞனார் வேலூர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    • கணேசன், ஜெய்பார்வதி வழக்கை போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • வேறு யாருடனும் மோதல் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈ.வி.பி. டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது83). இவரது மனைவி ஜெய் பார்வதி (72). இவர்கள் தங்களது ஒரே மகன் சக்தி வேலுடன்(45) வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வெளியில் சென்று இருந்த சக்திவேல் வீட்டுக்கு திரும்பி வந்தபோது அங்குள்ள அறையில் தந்தை கணேசன், தாய் ஜெய்பார்வதி ஆகியோர் இறந்து கிடந்தனர். கணேசனின் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்து இருந்தது. ஜெய் பார்வதி நாக்கை கடித்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணேசன், ஜெய்பார்வதி வழக்கை போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்களது மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே கணேசன், ஜெய்பார்வதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் இருவரும் கழுத்தை நெரித்தும், மூச்சை திணறடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் தாக்கப்பட்டும் உள்ளனர்.

    இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கொலையுண்ட கணேசன், ஜெய்பார்வதி தம்பதியினரின் சொந்த ஊர் சேலம் ஆகும். அங்கு அவர்களுக்கு சொந்தமாக ரைஸ்மில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல் சினிமாதுறையில் படம் தயாரிக்க பணத்தை செலவு செய்து உள்ளார். இதற்காக தம்பதியினர் சொந்த ஊரில் உள்ள ரைஸ்மில்லை விற்று பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் சக்திவேல் தற்போது வீடுகட்டி விற்கும் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. இதிலும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சக்திவேல் திருமணமான 15 நாட்களிலேயே மனைவியை பிரிந்து உள்ளார்.

    இந்த நிலையில் சக்திவேலின் பெற்றோரான கணேசன், ஜெய்பார்வதி கொலை செய்யப்பட்டு உள்ளனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இன்னும் போலீசுக்கு துப்பு கிடைக்கவில்லை.

    எனினும் தற்போது அவர்களது மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கணேசன், ஜெய்பார்வதி தம்பதிக்கு வேறு யாருடனும் மோதல் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    அவர்கள் வசிக்கும் பகுதி வீடுகள் நிறைந்த இடம் ஆகும். வெளிநபர்கள் வீட்டுக்குள் வந்து கொலை செய்து விட்டு செல்ல வாய்ப்பு இல்லை என்றே போலீசார் கருதுகிறார்கள்.

    வயதான தம்பதி வீட்டுக்குள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மின்கசிவு காரணமாக கமலம்மாளின் வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கமலம்மாள். இவர் பூட்டிவிட்டு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கமலம்மாளின் வீடு தீடீரென தீப்பற்றி எரிந்தது.

    அருகில் உள்ளவர்கள் வீட்டில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க சார்பில் ஆகஸ்ட் 9 ம் தேதி வெள்ளையனே வெளியேறு நாளில் கார்ப்பரேட் கம்பெனிக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து பெருந்திரள் தொடர் அமர்வு போராட்ட விளக்க கூட்டம் எண்ணூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 14 அம்சகோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுவதை முன்னிட்டு மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு , ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிஐடியு விநாயகமூர்த்தி, கதிர்வேல், ஏ ஐ டி யு சி பார்த்திபன், பாலன், ஐ என் டி யு சி, தாமோதரன், சி ஐ டி யு, பாண்டியன், ஆகியோர் விளக்க உரையாற்றினர் சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் விஜயன், ஏ ஐ டி யு சி, மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.
    • ஆவடி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.

    கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முடிவடையாமலேயே உள்ளன.

    இதற்கிடையே ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ள உலக வங்கியிடம் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளன. விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 182.55 லட்சம் குடிநீர் திட்டப்பணிக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.269 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காக சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.

    ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தரணிதரன் கூறும்போது, அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பொதுமக்கள் ஏற்கனவே டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர். அந்த தொகைக்கு வட்டி தர வேண்டும், அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பட்டாபிராமை சேர்ந்த ஜெயக்குமார் கூறும்போது, குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு நான்தான் முதலில் பணம் கட்டினேன். அதற்கான பலனை நான் இன்னும் பெறவில்லை. இந்த பணத்தை வங்கியில் கட்டியிருந்தால் வட்டியாவது கிடைத்திருக்கும் என்றார். இந்த கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் பலர் ஆவடி நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் குக்கிராமங்களில் வாழ்வது போன்று வாழ்கிறோம் என்று குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் கூறும்போது, ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து சலுகை அளிக்க முடியுமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

    ஆவடி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
    • சர்வீஸ் சாலையிலும் மின்விளக்குகள் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தில் இருந்து ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வரை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு சாலையின் ஓரங்களில் தெரு மின்விளக்குகள் உள்ளன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த தெருவிளக்குகள் எரியாமல் தேசிய நெடுஞ்சாலை இருட்டாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மின்விளக்குள் எரியாமல் உள்ளதால் வாகன விபத்துக்கள் அதிகரித்து உள்ளதாக கனரக வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகள், பொது மக்கள் கூறும்போது, மின்விளக்குகள் எரியாததால் நல்லூர் டோல்கேட் அருகில் தினமும் விபத்து ஏற்படுவதாகவும், சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் சர்வீஸ் சாலையிலும் மின்விளக்குகள் இல்லை என்று குற்றம் சாட்டினர்.இதில் ஊராட்சி தலைவர்கள், ஜெகநாதபுரம் மணிகண்டன், ஆத்தூர் சற்குணம், புதிய எருமை வெட்டிபாளையம் கோதண்டம், பழைய எருமை வெட்டிபாளையம் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, இரண்டு வாரங்களில் நெடுஞ்சாலை துறை, டோல்கேட் நிர்வாகம், போலீசாருடன் இணைந்து அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.
    • இன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா நேற்று ஆடி அஸ்வினி நட்சத்திரத்துடன் தொடங்குகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    இன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. நாளை ஆடிக்கிருத்திகை முதல் நாள் தெப்ப உற்சவம் மாலை 7 மணி அளவில் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்தில் நடக்கிறது.

    காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையொட்டி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் பொன்னி, திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன், குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.
    • வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 142 கிளை கழகங்களிலும் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக பண்டிக்காவனூர் ஊராட்சியில் உள்ள ஆனந்த இல்லம் என்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்து. சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன், குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தச்சூர் ரவி , பண்டிக்காவனூர் ராமமூர்த்தி மற்றும் அண்ணா நகர் கிளை சுதாகர் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன் , ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேஷ், ஞாயிறு சுதாகர், ஒன்றிய சமுக வளைதள பொறுப்பாளர் மாளிவாக்கம் மகேஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சோழவரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 142 கிளை கழகங்களிலும் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் அடுத்த பூண்டியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை அகற்றி 1944ல் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டி திறக்கப்பட்டது.

    இந்த நீர்த்தேக்க பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், பல்வேறு அணைக்கட்டு மாதிரிகள் இடம் பெற்ற நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மையம் ஆகியவையும் இங்குள்ளன.

    மேலும் நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு பூண்டி பஸ் நிலையம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த அணையில் நீர்வற்றும்போது பழமையான ஊன்றீஸ்வரர் கோவிலைக் காணலாம்.

    இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குவதால், நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து குழந்தைகள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. பரப்பளவு 121 சதுர கி.மீ ஆகும்.

    பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொசஸ்தலை ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது.

    மேலும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால் பேபி கால்வாய் மற்றும் பிரதான இணைப்பு கால்வாய் மூலம் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

    வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

    இங்குள்ள பூங்காவில் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை இருந்தன. எனினும் இப்பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

    அதனால் இனி வருங்காலத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்த பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.

    இதுபோன்று செய்வதன் மூலம் வருங்காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்காக இப்பகுதியைத் தோண்டியபோது கிடைத்த பழங்காலப் பொருள்களைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம். இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த அருங்காட்சியகத்தில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழி போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பூண்டிக்கு அருகிலுள்ள கொசஸ்தலை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியிலும் அதையடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

    இதைக் கருத்தில்கொண்டு பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் வகையில் தொல் பழங்கால அகழ்வைப்பகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அகழ்வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள் நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய ஈமப்பேழை கல்மரம், நிலவியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரிக்கரை மீது சேதமடைந்த பூங்காவை தரம் உயர்த்தும் வகையிலும், சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்கள், டைனோசர், செல்பி பாயிண்ட், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும் ரூ.80 லட்சம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்த்தேக்க வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் சத்தியமூர்த்தி திருவுருவச்சிலையுடன் அறிவியல் பூங்கா சிறுவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்தது.

    இங்கு சிறுவர்கள் பொழுது போக்கும் வகையில் அறிவியல் உபகரணங்கள், குடை ராட்டினம், ஏற்ற இறக்கம் மற்றும் சம விளையாட்டு, குதிரை சவாரி ராட்டினம், ஊஞ்சல் விளையாட்டு, பூங்கா நீருற்று, இருக்கைகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்தது.

    அதனால் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் இருந்தது. ஆனால், திறந்த வெளியில் இருந்ததால், போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புகலிடமாகவே மாறியது. அதோடு, கால்நடைகளும் புகுந்து விடுவதால் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகள் சேதமடைந்தது.

    இந்த நிலையில் பூங்காவை சீரமைத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு அறிவியல் பூங்காவை நவீன முறையில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.80 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற் கொண்டனர். ஆனால் இதுவரை அறிவியல் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    தற்போது இந்த அறிவியல் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சேதமடைந்த நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சீரமைக்கப்படும். அதேபோல், நவீன முறையில் குழந்தைகள் அறிவுபூர்வமாக கற்றதை நேரடியாக செயல் விளக்கம் மூலம் பெறும் நியூட்டன் இயக்க விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் டைனோசர், பூங்காவிற்கு வந்து செல்வோர் நினைவாக சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி பாயின்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் பூண்டி நீர்த் தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான பணிகளை மேம்படுத்தினால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • மங்கள வாத்தியம், வானவேடிக்கை மற்றும் பேண்ட் வாத்தியத்துடன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில்,காப்பு கட்டி விரதம் இருந்த 148 பக்தர்கள்

    நேற்று இரவு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவிலில் இருந்து கரகம் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும்,மண்ணடியில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சியும், கும்பம் போடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வியாழக்கிழமை கிராம தேவதையான பொன்னியம்மனுக்கு ஊர் மக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்,வியாழக்கிழமை குமாரி மக்கள் எனப்படும்

    பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும்,தெரு கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், பூ கரகம் புறப்பாடு, அலகு பானை நிற்கவைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த குமாரி மக்கள் நேற்று மாலை

    ஈஸ்வரன் கோவில் அருகே புனித நீராடினர். பின்னர்,அவர்களை பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதன் பின்னர், கோவிலின் அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் நேற்று இரவு ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர், மங்கள வாத்தியம், வானவேடிக்கை மற்றும் பேண்ட் வாத்தியத்துடன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும்,விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பெற்ற குழந்தையை கல் மீது வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

    திருவள்ளூர்:

    ஆந்திரா மாநிலம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(25), இவரது மனைவி அஞ்சலி(23). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்பட மொத்தம் 4 குழந்தைகள் இருந்தனர்.

    சுரேஷ் தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி திருவள்ளூர் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பெரியகுப்பத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கீழ் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுரேசின் 2 மாத பெண் குழந்தை தொடர்ந்து அழுதது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குழந்தைக்கு பால் கொடுக்ககோரி மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்தது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ் தனது 2 மாத குழந்தையை அருகில் சமையல் செய்ய வைத்திருந்த கல் மீது வீசினார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை மயங்கி சரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சலி அலறி துடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான சுரேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவும் அவர் அதிக போதையில் இருந்து உள்ளார். குழந்தை தொடர்ந்து அழுததாலும், குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்து மனைவி தகராறில் ஈடுபட்டதாலும் ஆத்திரம் அடைந்த அவர் குழந்தையை கல்மீது வீசி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    பெற்ற குழந்தையை தரையில் வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கணவரை இழந்த பெண் குழிக்குள் வீசி கொலை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×