என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வயதான தம்பதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டனர்: பிரேத பரிசோதனையில் தகவல்
- கணேசன், ஜெய்பார்வதி வழக்கை போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- வேறு யாருடனும் மோதல் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
பூந்தமல்லி:
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈ.வி.பி. டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது83). இவரது மனைவி ஜெய் பார்வதி (72). இவர்கள் தங்களது ஒரே மகன் சக்தி வேலுடன்(45) வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வெளியில் சென்று இருந்த சக்திவேல் வீட்டுக்கு திரும்பி வந்தபோது அங்குள்ள அறையில் தந்தை கணேசன், தாய் ஜெய்பார்வதி ஆகியோர் இறந்து கிடந்தனர். கணேசனின் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்து இருந்தது. ஜெய் பார்வதி நாக்கை கடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணேசன், ஜெய்பார்வதி வழக்கை போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்களது மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே கணேசன், ஜெய்பார்வதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் இருவரும் கழுத்தை நெரித்தும், மூச்சை திணறடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் தாக்கப்பட்டும் உள்ளனர்.
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொலையுண்ட கணேசன், ஜெய்பார்வதி தம்பதியினரின் சொந்த ஊர் சேலம் ஆகும். அங்கு அவர்களுக்கு சொந்தமாக ரைஸ்மில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல் சினிமாதுறையில் படம் தயாரிக்க பணத்தை செலவு செய்து உள்ளார். இதற்காக தம்பதியினர் சொந்த ஊரில் உள்ள ரைஸ்மில்லை விற்று பணம் கொடுத்ததாக தெரிகிறது.
இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் சக்திவேல் தற்போது வீடுகட்டி விற்கும் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. இதிலும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சக்திவேல் திருமணமான 15 நாட்களிலேயே மனைவியை பிரிந்து உள்ளார்.
இந்த நிலையில் சக்திவேலின் பெற்றோரான கணேசன், ஜெய்பார்வதி கொலை செய்யப்பட்டு உள்ளனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இன்னும் போலீசுக்கு துப்பு கிடைக்கவில்லை.
எனினும் தற்போது அவர்களது மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கணேசன், ஜெய்பார்வதி தம்பதிக்கு வேறு யாருடனும் மோதல் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
அவர்கள் வசிக்கும் பகுதி வீடுகள் நிறைந்த இடம் ஆகும். வெளிநபர்கள் வீட்டுக்குள் வந்து கொலை செய்து விட்டு செல்ல வாய்ப்பு இல்லை என்றே போலீசார் கருதுகிறார்கள்.
வயதான தம்பதி வீட்டுக்குள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






