என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மாதவரம்:

    ஆந்திராவில் இருந்து மாதவரம் பஸ் நிலையம் நோக்கி நேற்று மாலை ஆந்திரா அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30 பயணிகன் இருந்தனர். புழல், சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

    பஸ்சில் இருந்து புகை வந்ததும் பயணிகளை டிரைவர் சாமர்த்தியமாக உடனடியாக கீழே இறங்க கூறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • மணவாளநகர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகை, செல்போன், ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

    திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, செல்போன், ரூ. 12 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    • மின்வாரியம் தோண்டிய அந்த பள்ளத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்தில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர் என்று அறிவித்து உள்ளனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மெட்ரோ ரெயில் மற்றும் மழைநீர்கால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

    இதேபோல் பூந்தமல்லி, பெங்களூர் நெடுஞ்சாலை, குமணன்சாவடி, சென்னீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரியம் சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அவ்வழியாக ராட்சத புதைவட மின்கம்பி புதைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்காக அந்த பள்ளத்தில் கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட்டும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மின்வாரியம் தோண்டிய அந்த பள்ளத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், படப்பைகாடு பகுதியை சேர்ந்தவர் ரமகுணா (வயது 22), இவர் நண்பரான மதிவாணன்(24) என்பவருடன் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று இரவு நண்பர்கள் இருவரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்னீர்குப்பம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு சர்வீஸ் சாலையில் மின் வாரியம் சார்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு இருந்த பள்ளத்திற்குள் விழுந்தனர்.

    இதில் அங்கு கான்கிரீட்டுக்காக கட்டப்பட்டு இருந்து கம்பிகள் மீது விழுந்ததில் ரமகுணாவும், மதிவாணனும் பலத்த காயம் அடைந்தனர். தலையில் படுகாயம் அடைந்த ரமகுணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதிவாணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்து அவ்வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பலியான ரமகுணா மற்றும் மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி வெளியேகொண்டு வந்து மீட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மதி வாணனை மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உயிர்பலி ஏற்பட்ட மின் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் அந்த தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் வாலிபர் இறந்து போனார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்படும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வாலிபர் விழுந்து பலியான இடத்தில் மின்வாரியம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதற்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக மின்வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், "பூந்தமல்லி அருகே தடுப்புகள் அமைத்தே மின்வாரியம் சார்பில் புதைவட கம்பி பதிப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்தன. விபத்தில் சிக்கிய வாலிபர்கள் மது குடித்து இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர் என்று அறிவித்து உள்ளனர்.

    • விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர் கடைகளை அமைத்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இம்மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி இன்று முதல் 16-ம் தேதி வரையில் பெரியபாளையத்தில் உள்ள சுற்றுலாத்துறை வளாகத்தில் நடைபெறுகிறது.

    இந்த விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி கலந்து கொண்டு விற்பனை மற்றும் கண்காட்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதன்பின்னர், கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனையை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினர் கடைகளை அமைத்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் வட்டார இயக்க மேலாண்மை அலகு நிர்வாகிகள் அபிராமி, நாகராஜ், உஷாராணி, மாலா, ஜெயசித்ரா, வனிதா, உமாவதி, காஞ்சனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியபோது புழல் ஏரிக்கரையில் மணிகண்டன், விஷ்ணுவின் ஆடைகள் இருந்தது.
    • இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி சோலையம்மன்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வந்தார். இவரது மகன் விஷ்ணு(10) அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தந்தை-மகன் இருவரும் பம்மது குளம் பகுதியில் புழல் எரிக்கரையில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விஷ்ணு தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மகனை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

    இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியபோது புழல் ஏரிக்கரையில் மணிகண்டன், விஷ்ணுவின் ஆடைகள் இருந்தது.

    இதைத்தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் இரவு வரை அவர்களை புழல் ஏரியில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது புழல் ஏரியில் அவர்கள் குளித்த இடம் அருகே மணிகண்டன், விஷ்ணுவின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் கதறி துடித்தனர். செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு நேரங்களில், தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி துணை மின் நிலையத்தில் இருந்து தடப்பெரும்பாக்கம், பொன்னேரி, உத்தண்டி கண்டிகை, வேம்பாக்கம், அனுப்பம்பட்டு, எலவம்பேடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு நேரங்களில், தொடர்ந்து அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மிக்சி, கிரைண்டர், மின்மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாததால் தினமும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரத்திலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புழுக்கத்தால் தூங்க முடியாமல் வயதானவர்களும், நோயாளிகளும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தினமும் காற்றுக்காக வீட்டின் மொட்டைமாடியில் தூங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, பொன்னேரியை சுற்றி உள்ள சுமார் 50 கிராமங்களில் தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்தடை உள்ளது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் மின் தடை ஏற்படுகிறது என்றனர்.

    • நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அங்குள்ள அறைகள் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு அலறியடித்து வெளியேறினர்.

    தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் அருகில் இருந்த சுவற்றை உடைத்து அதன்வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தெர்மாகோல் மற்றும் அதன் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் ககுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் நண்பர்களுடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.
    • ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த ஆர்.கே. பேட்டை, ஆதிபராபுரம் காலனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது26). கூலித் தொழிலாளி.

    இவர் நண்பர்களுடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது சிவா தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை சேர்ந்தவர் அமுதா(43). பூவியாபாரி. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பொம்மை நாயக்கன்பாளையம் ஆகும். இவர் திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அமுதா பூ வியாபாரம் முடித்து வீட்டு திரும்பினார். அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவுக்காரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் நடைமேடை 4-ல் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென அமுதாவிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை அமுதா கண்டித்து தன்னிடம் பூ அறுக்க வைத்திருந்த கத்தியை காட்டி எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் திடீரென அந்த கத்தியை பறித்து அமுதாவின் கழுத்தை அறுத்தார். மேலும் அவரது கை, மற்றும் இடுப்பில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவரை பிடிக்க போலுசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் பெண்பூவியாபாரியின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • கவுரி சங்கரின் மனைவியை, பிராங்கிளின் கேலி செய்தார்.
    • தலைமறைவாக உள்ள கவுரிசங்கர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் அருகே கடந்த 7-ந் தேதி இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை சம்பந்தமாக 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த கும்பல் பிராங்கிளினை வெட்டி கொன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று சேலம் வழியாக செல்லும் தன்பாத் ரெயிலில் சேலத்திற்கு தப்பிய கொலையாளிகள் சென்னை ரெட்கில்ஸ் வ.உ.சி. தெருவை சேர்ந்த லோகேஷ்வரன் (28), மணலியை சேர்ந்த கார்த்தி (28) ஆகியோரை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து பிராங்க்ளின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட்ரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த ராகுல் (வயது 22), திவாகர் (21), அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (24), புளியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வா (25), அம்மனூர் பகுதியை சேர்ந்த தர்மேஷ் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பிராங்கிளின் மற்றும் சென்னையை சேர்ந்த அவரது நண்பர் கவுரிசங்கர் ஆகியோர் சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் கவுரி சங்கரின் மனைவியை, பிராங்கிளின் கேலி செய்தார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது. கவுரி சங்கர் சென்னையிலேயே ஜான் பிராங்ளினை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இதனை அறிந்த பிராங்கிளின் சென்னையில் இருந்து தப்பி வந்து கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கிருந்தார்.

    இதனை அறிந்து கொண்ட கவுரி சங்கர் கூட்டாளிகளான எங்களுக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் சேர்ந்து பிராங்கிளினை வெட்டி சாய்த்தோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.

    மேலும் தலைமறைவாக உள்ள கவுரிசங்கர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமம் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது53). பழ வியாபாரி. இவர் கடந்த 7-ந்தேதி அதிகாலை பழம் வாங்க கோயம்பேடு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். இந்த நிலையில் அய்யம்பெருமாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடோன் வாசலில் இறந்து கிடந்தார். திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது விலா எலும்பு முறிந்திருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அங்கு தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் ஜா(45) என்பவர் அய்யம்பெருமாளை கொசுவலை தகராறில் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனில்ஜாவை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று அதிகாலை அய்யம் பெருமாள் பழம் வாங்க கோயம்பேடு செல்லாமல் அனில்ஜா பயன்படுத்தும் கொசுவலையை எடுத்து போர்த்திக்கொண்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியில் தூங்கி உள்ளார். இதனை கவனித்த அனில்ஜா கொசுவலையை எடுத்தது தொடர்பாக அய்யம் பெருமாளிடம் மோதலில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவரை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் அய்யம்பெருமாள் இறந்து போனதால் பயந்து போன அனில்ஜா எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அய்யம்பெருமாள் அடிக்கடி மதுபோதையில் இருப்பதால் முதலில் அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×