என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • 10 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பிஞ்சலார் தெருவில் வசித்து வருபவர் வசந்தி(வயது36) கூலித் தொழிலாளி ஆவார். இவர் நேற்று இரவு தனது மகன்கள் பாலாஜி, பார்த்தசாரதி ஆகியோருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிலிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் திடீரென அவர் அலறி அடித்து எழுந்தார். தனது மகன்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ மள, மளவென வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தேர்வாய் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 10 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேன், துணிகள் உள்ளிட்ட சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயிக்கு இறையானது. இச்சம்பவம் குறித்து வசந்தி இன்று காலை ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது கேஸ் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது? காரணமா! என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    • தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு இங்குள்ள 1வது அலகில் டர்பன் ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டர்பனில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அனல் மின் நிலையத்திற்குள் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக 1வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது திடீரென தீ பற்றியது.
    • தீயை அணைக்க முயற்சி செய்த வினோத்திற்கு கை மற்றும் தலை முடி ஆகியவை பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    ஆவடி திருமலை ராஜபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் (45) இவர், வீட்டின் கீழ்த் தளத்தில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார்.கடையின் மேலே இவரது முதல் மாடியில் வினோத் மற்றும் அவரது தாய் சாந்தி தேவி (72) வசித்து வருகின்றனர்.

    வினோத்துக்கு திருமணம் ஆகாத நிலையில். இன்று காலை வழக்கம் போல் தன் தாய்க்கு சமையல் செய்ய சமையலறை சென்ற பொழுது எரிவாய் கசிவை கவனிக்கவில்லை. வழக்கம்போல் கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது திடீரென தீ பற்றியது. அதிர்ச்சியடைந்த வினோத் உடனடியாக கீழே இருந்த கோணியை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். கோணியில் ஈரம் இல்லாததால் கோணியும் திபுதுவென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயற்சி செய்த வினோத்திற்கு கை மற்றும் தலை முடி ஆகியவை பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் சமையலறை சென்று தீயை அணைத்து பின்னர் வினோத்தை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமையல் செய்ய முற்பட்டபோது கேஸ் கசிவால் வினோத் என்பவர் தீ விபத்தில் சிக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவ தாகவும் சேதப்படுத்தும் நெற்பயிர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் எனவும் ஏரியில் மணல் எடுப்பதை தடுக்கவும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதில் வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • கடிதத்தில் அவர் என்ன எழுதி உள்ளார் என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் சண்முகபுரம் அருகே புழல் ஏரியின் கரைப்பகுதியில் வாலிபரின் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பிணமாக கிடந்தவர் அம்பத்தூர் சிவப்பிரகாசம் நகரை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பது தெரிந்தது. பி.டெக் பட்டப்படிப்பை முடித்து விட்டு பல ஆண்டுகளாக இவர் வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காத விரக்தியில் நண்பருடன் சேர்ந்து பழல் ஏரி பகுதியில் நேற்று சுற்றி திரிந்தார். அப்போது அவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே அவர் வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாக தெரிய வந்தது. அந்த கடிதத்தில் அவர் என்ன எழுதி உள்ளார் என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    • தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவள்ளூர்:

    சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி சேஷாராம் என்பவரை திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை அருகே வழிமறித்து அரிவாளால் வெட்டி 1 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக சரவணன், ஆதித்யா என்கிற 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எழிலரசன் என்ற வாலிபர் 3-வதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கண்காட்சி போல் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    • இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
    • பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த பெரியபணிச்சேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் தொடக்க விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கருணாநிதியின் வெண்கல உருவ சிலை மற்றும் புதிய படிப்பகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் திறந்து வைக்கும் கலைஞர் கருணாநிதியின் 2-வது சிலை இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூலையில் திருவண்ணாமலையில் நான் முதல் சிலையை திறந்து வைத்தேன்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாங்கள் ஒரு பேனாவையும், பேப்பரையும் அவரிடத்தில் கொடுத்து, உங்களுக்கு பிடித்தமான பெயர்களை எழுதுங்கள் என்று கூறினோம்.

    முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சுற்றி நின்று தங்களது பெயர்களை கலைஞர் எழுத மாட்டாரா என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

    ஆனால், அந்த நேரத்தில் கூட அவர் எழுதியது "அண்ணா" என்ற பெயரை தான். இதிலிருந்து கருணாநிதி பேரறிஞர் அண்ணா மீது எந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

    கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் தலைமுறை தலைமுறையாக தமிழக மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

    கலைஞருடைய திட்டங்களில் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை இருந்தது. கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் சமூக பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் திட்டங்களாக இருந்தது. 3 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளியை நிறுவினார்.

    மாணவர்களுக்கு வாரந்தோறும் சத்துணவுடன் முட்டையும் வழங்கினார். உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். கலைஞர் வழியில் தற்போதைய நமது முதலமைச்சரும் மத்திய அரசாங்கமே திரும்பிப் பார்க்கும் வகையில், பல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயலாற்றி வருகிறார்.

    கலைஞர் நம்மிடம் இருந்தால் என்னென்ன நல்ல திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருப்பாரோ அதைத்தான் தற்போது தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார். குறிப்பாக இல்லந்தோறும் கல்வி, பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அத்துடன் பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    நமது திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது. அதுதான் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம். என்றுமே தி.மு.க. மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் அதானி 2-ம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். தற்போது இந்தியாவில் அதானி விமான நிலையம், அதானி ரெயில் நிலையம், அதானி ஹார்பர் ஆகியவை வந்து உள்ளது.

    இதற்கெல்லாம் காரணம் அவர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதாலே. மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போதெல்லாம் விமானி இல்லாமல் கூட பயணம் செய்வார்.

    ஆனால் "அதானி" இல்லாமல் ஒரு நாள் கூட பயணம் செய்ததில்லை. இது குறித்த ஆதாரங்களை புகைப்படத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியபோது தான் அவர் மீது வழக்கு பதிவு செய்து, பாராளுமன்றத்திற்கு வர முடியாமல் செய்தார்கள்.

    ஆனால் உச்சநீதிமன்றம் அவர்களது தலையில் சரியான கொட்டு கொட்டி, ராகுல் காந்தி மீது விதித்த தடையை ரத்து செய்தது.

    இதுவே பல்வேறு கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" அமைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

    இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை கற்பதற்கு நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை. மாறாக இந்தி திணிப்பை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

    உங்களது பா.ஜ.க. அலுவலகம் சென்னை தியாகராஜ நகரில் தான் உள்ளது. அதன் அருகிலேயே இந்தி பிரச்சார சபா உள்ளது. நீங்கள் அங்கே சென்று தாராளமாக இந்தி கற்றுக்கொள்ள வேண்டியது தானே, உங்களை யார் தடுத்தார்கள். மணிப்பூரில் 5 மாதங்களுக்கும் மேலாக வன்முறை கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிகிறது.

    அதனை தடுக்க பா.ஜ.க. அரசிற்கு துப்பில்லை. பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டணியால் இந்தியா என்ற வலுவான அமைப்பு உருவாகி உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை தெளிவாக முடிவெடுத்து சிந்தித்து நாம் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும் திருபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.வுமான க.சுந்தர், மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை, மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தி.க.பாஸ்கரன், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா.சுதாகர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக சுரேஷ் மார்க்கஸ், மின்னி பிரிசில்லா கலந்துகொண்டனர்.
    • பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பொன்னேரி:

    பொன்னேரி எல்.இ.எப். ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா, பொன்னேரி அடுத்த சின்ன காவனம் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுரேஷ் மார்க்கஸ், மின்னி பிரிசில்லா ஆகியோர் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும்,, சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர். மேலும், பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சுகந்தாமணி, பள்ளியின் முதல்வர் தங்கமணி மற்றும் பாஸ்டர் ஜேம்ஸ் பள்ளி மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் மற்றும் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.
    • தங்க நகை, வெள்ளி பொருட்கள், 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கிகாவனூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன்(வயது56) விவசாயி ஆவார்.இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் இங்கு வசித்து வருகிறார். இத்தம்பதியரின் மூத்த மகன் சரவணன்(வயது30) ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் பரந்தாமன்(வயது28) ஷிப்பிங் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

    திருமணமான இரண்டு மகன்களும் பணி நிமித்தமாக செங்குன்றத்தில் வசித்து வருகின்றனர். தயாளன் விவசாய நிலத்தை பராமரித்துக் கொண்டு தனது மனைவியுடன் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.இந்நிலையில், தயாளனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவியுடன் சென்னை,செனாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு சென்று இருந்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற கால தாமதம் ஏற்பட்டதால் நேற்று இரவு செங்குன்றத்தில் மகன்கள் வீட்டில் தயாளன் தனது மனைவியுடன் தங்கி இருந்தார்.இன்று காலை தனது மனைவியுடன் அத்தங்கிகாவனூருக்கு வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் மற்றும் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும், கம்மல், வளையல், செயின், ஜிமிக்கி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட சுமார் 40 சவரன் தங்க நகைகளும், சுமார் 3 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பொருட்களும், ரொக்க பணம் ரூ.4 லட்சம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். ஊத்துக்கோட்டை துணைபோலிஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டார். மேலும், விவசாயி தயாளன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய்

    ராக்சி வரவழைக்கப்பட்டது.

    • இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார்.
    • சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூரில் மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் ரவி, ஆவடிகுமார், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி,எஸ்.சங்கர், ஹேமேந்திரன், பிரகாஷ், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், வக்கீல் பார்த்தசாரதி, சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சேஷாராம் நகை-பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.
    • தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை நகை வியாபாரியை வெட்டி கொள்ளைகும்பல் ஒருகிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள நகைகடைகளில் ஆர்டர் பெற்று நகைகள் விற்று வந்தார். அவரே மோட்டார் சைக்கிளில் நகைகளை எடுத்து சென்று கொடுத்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை சேஷாராம் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்துவிட்டு மோட்டார் சை்ககிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் வைத்திருந்த கைபையில் மேலும் 1 கிலோ தங்கம் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் இருந்தது.

    மாலை 5 மணி அளவில் திருவள்ளூர் அருகே சென்னை-ஆவடி நெடுஞ்சாலையில் தொழுவூர் வளைவில் திரும்பிய போது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் திடீரென சேஷாராமை வழிமறித்தனர். அவர்கள் அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி நகை-பணத்தை கொடுக்கும் படி மிரட்டினர். ஆனால் சேஷாராம் நகை-பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளைகும்பல் சேஷாராமை கத்தியால் வெட்டிவிட்டு சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் சேஷாராம் வைத்திருந்த ஒருகிலோ தங்கம், ரூ.5 லட்சம் இருந்த பையை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேலும்ட சேஷாராம் வந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம கும்பல் பறித்து விட்டு ஓட்டிச்சென்று விட்டனர்.இந்த தாக்குதலில் சேஷாராமின் இடது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    நகை-பணம் கொள்ளைபோனதால் அதிர்ச்சி அடைந்த சேஷாராம் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்த வந்து விசாரணை நடத்தினர். மேலும் செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அருகில் உள்ள மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே வெள்ளக்குளம் அருகே நகை-பணத்துடன் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென பழுதானது. அதனை 2 கொள்ளையர் சரிசெய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட கொள்ளையர்கள் இருவரும் ஓதிக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன்(21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவர்களிடம் சேஷாராமிடம் இருந்து பறித்துச் சென்ற 1 கிலோ தங்கம் ரூ.5 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேஷாராம் நகை-பணத்துடன் வந்து செல்வதை அறிந்து கொள்ளையர் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். ஆனால் நகை-பணத்துடன் சென்ற கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் பழுதானதால் அவர்கள் சிக்கியதுடன் நகை-பணமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் தப்பி செல்லும் வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.அதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.
    • காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியில் மொத்தம் 46 ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தினந்தோறும் காலை முதல் மதியம் வரை தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து வருகின்றனர். இதனால் காலை 6 மணிக்கே அவர்கள் வேலைக்காக வீட்டில் இருந்து புறப்படும் நிலை உள்ளது. இதன்காரணமாக பலர் காலை உணவை சமைத்து கொண்டு வரமுடியாமலும், பலர் சரிவர காலைஉணவு சாப்பிடாமலும் இருந்தனர்.

    இதனை அறிந்த 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கவீ. கணேசன் தூய்மை பணியாளர்களின் பசியை போக்க ஏற்பாடு செய்து உள்ளார். தூய்மை பணியா ளர்கள் 46 பேருக்கும் தினமும் இலவசமாக காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், வடை வழங்கப்படுகிறது. இதற்காக அவர் காலடிப்பேட்டையில் உள்ள தனது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் ஏற்பாடு செய்து உள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் இருந்து டிபன் கொண்டு வரப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை காலை உணவை சாப்பிட 46 தூய்மை பணியாளர்களும் சுழற்சி முறையில் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். காலை உணவுக்காக தினமும் ரூ.1800 செலவு செய்து வருகிறார்.

    மேலும் காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் டீ, காபி குடிக்க அங்கேயே ஸ்டவ் அடுப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாலும் வழங்கப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் தினமும் மகிழ்ச்சியுடன் பசி இல்லாமல் தங்களது பணியை முழுமனதோடு செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கவுன்சிலர் கவீ. கணேசனிடம் கேட்ட போது, தொலைதூர இடங்களில் இருந்து வரும் தூய்மை பணியாளர்கள் காலை உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் பலர் காலை உணவு சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு காலை உணவைச் செய்யவோ, வாங்கவோ போதிய பணம் இல்லை.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை உணவாக இட்லி, பூரி, வடகறி, பொங்கல், வடை மற்றும் காபி போன்றவற்றை சொந்த செலவில் வழங்கி வருகிறேன். வார்டு அலுவலகத்தில் காலையில் டீ அல்லது காபி தயாரிப்பதற்காக அவர்களுக்கு கியாஸ் ஸ்டவ் மற்றும் டம்ளர் உள்ளது.

    ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு காலை உணவை வழங்குவதில்லை. தொழிலாளர்களுக்கு கட்டாயமாக காலை உணவை வழங்க வேண்டும், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று நான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசி உள்ளேன். தூய்மை பணியாளர்களின் பசியாற உணவு வழங்குவது மன நிறைவை தருகிறது என்றார்.

    ×