search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே சென்னை நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் கொள்ளை- 2 பேர் சிக்கினார்கள்
    X

    திருவள்ளூர் அருகே சென்னை நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் கொள்ளை- 2 பேர் சிக்கினார்கள்

    • சேஷாராம் நகை-பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.
    • தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே சென்னை நகை வியாபாரியை வெட்டி கொள்ளைகும்பல் ஒருகிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

    சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள நகைகடைகளில் ஆர்டர் பெற்று நகைகள் விற்று வந்தார். அவரே மோட்டார் சைக்கிளில் நகைகளை எடுத்து சென்று கொடுத்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை சேஷாராம் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் நகைகளை விற்பனை செய்துவிட்டு மோட்டார் சை்ககிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் வைத்திருந்த கைபையில் மேலும் 1 கிலோ தங்கம் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் இருந்தது.

    மாலை 5 மணி அளவில் திருவள்ளூர் அருகே சென்னை-ஆவடி நெடுஞ்சாலையில் தொழுவூர் வளைவில் திரும்பிய போது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் திடீரென சேஷாராமை வழிமறித்தனர். அவர்கள் அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி நகை-பணத்தை கொடுக்கும் படி மிரட்டினர். ஆனால் சேஷாராம் நகை-பணத்தை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளைகும்பல் சேஷாராமை கத்தியால் வெட்டிவிட்டு சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் சேஷாராம் வைத்திருந்த ஒருகிலோ தங்கம், ரூ.5 லட்சம் இருந்த பையை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேலும்ட சேஷாராம் வந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம கும்பல் பறித்து விட்டு ஓட்டிச்சென்று விட்டனர்.இந்த தாக்குதலில் சேஷாராமின் இடது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    நகை-பணம் கொள்ளைபோனதால் அதிர்ச்சி அடைந்த சேஷாராம் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்த வந்து விசாரணை நடத்தினர். மேலும் செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அருகில் உள்ள மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே வெள்ளக்குளம் அருகே நகை-பணத்துடன் கொள்ளையர்கள் தப்பி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென பழுதானது. அதனை 2 கொள்ளையர் சரிசெய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மற்ற 6 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட கொள்ளையர்கள் இருவரும் ஓதிக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன்(21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. அவர்களிடம் சேஷாராமிடம் இருந்து பறித்துச் சென்ற 1 கிலோ தங்கம் ரூ.5 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேஷாராம் நகை-பணத்துடன் வந்து செல்வதை அறிந்து கொள்ளையர் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். ஆனால் நகை-பணத்துடன் சென்ற கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் பழுதானதால் அவர்கள் சிக்கியதுடன் நகை-பணமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் தப்பி செல்லும் வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.அதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×