என் மலர்
திருவள்ளூர்
- கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது.
- சம்பவ இடத்திலேயே முத்தரசனும், செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.
செங்குன்றம்:
தஞ்சை மாவட்டம் திருவுடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தரசன்(வயது34), செந்தில் குமார்(45). இருவரும் லாரி டிரைவர்கள். இவர்கள் சோழவரத்தில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் இருவரும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
சோழவரம், ஜி.என்.டி, சாலையில் செங்காலம்மன் கோவில் அருகே சென்ற போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முத்தரசனும், செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 10 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
பொன்னேரி:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் அத்திப் பட்டு ஜி. ரவியின் தாயார் அலமேலு அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் "என்னால் முடியும் என்ற தன்னம்பி க்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சி "நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா டி. ஜே. கோவிந்தராஜன் எம். எல்.ஏ. தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்க தொகை, நலிந்த மாணவ ர்களுக்கு உதவி தொகை, மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், ஏழைகளுக்கு சலவை பெட்டி, தொழில், வியாபாரம் செய்ய உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துரை சந்திரசேகர் எம். எல். ஏ. , சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் தர்மலிங்கம், கௌதம் சிவராமன், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பேரூர் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் சௌரிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் விட்டு விட்டு நீடித்த மழை இரவு பலத்த மழையாக பெய்தது.
விடிய விடிய கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 2698 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடி வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 1700 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 70 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 1955 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 190 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 189 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு பஸ் நிலையம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
- தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.
- சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்க வாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமி இறந்து விட்டார். இவர்களுக்கு ஆதிசேஷன் என்ற மகன் உள்ளார். சுப்பிரமணியின் 2-வது மனைவி வசந்தா. இவர்களுக்கு ராமமூர்த்தி (45) என்ற மகன்,ஒரு மகள் உள்ளனர். சுப்பிரமணி 2-வது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சுப்பிரமணி வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணி அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியின் 2-வது மனைவியின் மகன் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று இரவு ராமமூர்த்தி சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தை சுப்பிரமணியை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. சுப்பிரமணி தனது முதல் மனைவியின் மகன் ஆதிசேஷனுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த தகராறு கொலையில் முடிந்து உள்ளது. தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.
இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆழமான பகுதிக்கு சென்ற யுகேந்திரன் தண்ணீரில் மூழ்கினார்.
- ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுகேந்திரன் (வயது 26). இவர் நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூலைமேனி கிராமத்தில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு அனைவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்தனர்.
அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற யுகேந்திரன் தண்ணீரில் மூழ்கினார். அவரை நண்பர்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் யுகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
- லாரியின் சக்கரத்தில் சிக்கிய பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர், பூங்கா நகர், கனக்காம்பரம் பூ தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது65). இவரது மகன் கார்த்திகேயன். இவரது மனைவி சுதானா(38). இவர் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை பச்சையப்பன், மருமகள் சுதானாவை மோட்டார்சைக்கிளில் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார். உழவர் சந்தை அருகே சென்றபோது பின்னால் வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதானா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் டவுன் போலீசார் சுதானாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளதை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இக்கிராமத்துக்கு ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார சப்ளை நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இக்கிராமத்துக்கு குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அடிக்கடி மின்தடையும் ஏற்படுகின்றதாம்.
அறிவிக்கப்படாத இந்த மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறைந்த அழுத்த மின் சப்ளையால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச மின் மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளதை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தேவையான தண்ணீரை ஊராட்சி மன்றம் சார்பாக சப்ளை செய்ய இயலவில்லையாம். இதனால் கடந்த ஒரு மாத காலமாக போதிய அளவு குடிநீர் சப்ளை செய்யாததால் இக்கிராம பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு இக்கிராமத்துக்கு தேவையான மின்சாரத்தை போதிய அளவு சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
- அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
திருத்தணி:
பள்ளிப்பட்டு அடுத்த விஜயமாம்பாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் நரசிம்மலு நாயுடு. கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அப்பகு தியில் உள்ள விவசாய நிலத்தில் உறவினர்கள் புதைத்தனர்.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து 130 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தோண்டி எடுக்கப்பட்ட முதியவர் உடல் பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
- பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித,விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுமார் 5 அடி முதல் 20 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படும்.
இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
பொன்னேரியை அடுத்த சயனாவரம், வெள்ளோடை, கிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பாகுபலி விநாயகர், கல்வெட்டு விநாயகர், ராஜ விநாயகர், தர்பார் விநாயகர், செண்டு வாகன விநாயகர், மூல வாகன விநாயகர், ஆதியோகி சிவன் விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித,விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பெருபாலான சிலைகளை வடிவமைக்கும பணிகள் முடிந்து உள்ளன. அதில் அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவை பார்வைக்காக பொன்னேரி தச்சூர் சாலை, சயனாவரம் ,கிருஷ்ணாபுரம் சாலை அருகே வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது,
விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரித்து வருகிறோம். இதற்காக கிழங்கு மாவு, தேங்காய் நார், பேப்பர்கூழ், ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல மாடல்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படும். இன்னும் சில நாட்களில் சிலைகளில் வர்ணம் பூசும் வேலைகள் முடிந்து விற்பனைக்கு தயாராகி விடும் . சிலைகள் வாங்க பல கிராமங்களில் இருந்து முன்கூட்டியே அட்வான்ஸ் செய்து புக்கிங் செய்து உள்ளனர். ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன என்றார்.
வெள்ளோடை பகுதியில் விநாயகர் சிலை செய்து வரும் பிரபு என்பவர் கூறும்போது, ராஜ விநாயகர் கற்பக விநாயகர் பாம்பே மாடல்விநாயகர், தர்பார் விநாயகர் மற்றும் பல மாடல்களில் சிலைகள் செய்து வருகிறோம் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என்றார்.
- ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
- பிரேத பரிசோதனை அறிக்கையில் முதியவர் சுப்பிரமணி வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர்:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்காவாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மூலம் ஒரு மகனும், 2-வது மனைவி மூலம் ஒரு மகனும் உள்ளனர்.
சுப்பிரமணி 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டின் வெளியே சென்ற போது சுப்பிரமணி தவறி விழுந்து இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் முதியவர் சுப்பிரமணி வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து 2வது மனைவியின் மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவத்தன்று இரவு சுப்பிரமணிக்கும், 2-வது மனைவி மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
பூந்தமல்லி:
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் நடந்து சென்ற 4-ம் வகுப்பு மாணவியை மாடு ஒன்று முட்டி தூக்கியது. இதில் அந்த சிறுமி பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது குறித்து நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவேற்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடைகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. தெருக்களில், சாலைகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் திரிய விடக்கூடாது. மீறினால் பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத்தினை செலுத்தி மீட்காத உரிமையாளரின் கால்நடைகள் பிடித்த 3 நாளில், பகிரங்க பொது ஏலம் விடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
- நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர்:
தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2023 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 1207 பேருக்கு முதல் தவணையில் ரூ.10 ஆயிரம் வீதமும், இரண்டாவது தவணையில் 297 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம்,3-வது தவணையாக 13 பயனாளிகளுக்கு ரூ.50ஆயிரம் வீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 742 விண்ணப்பங்கள் வங்கிகளிடமிருந்து திரும்ப பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்களை மீண்டும் கடன்பெறும் வகையில் தயார் செய்ய திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் வங்கிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமுதாய அமைப்பாளர் சாந்தி-7010270560, சமுதாய வளபயிற்றுனர்கள் நாகேஷ்வரி-8608242774, சகிலா-7397133219 ஆகியோரின் எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று மீண்டும் பதிவேற்றம் செய்ய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.இதில் மகளிர் உதவி திட்ட அலுவலர், பெரியநாயகம். நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சுகாதார அலுவலர்கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






