என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்.
    • உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற வகையில் ரத்தக் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், தங்களது கோரிக்கையான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும் என்றும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலை படியுடன் வழங்க வேண்டும், பத்து வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவிகிதம் முன்னுரிமை அளித்து பணியில் சேர்த்திட வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் இன்று உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற வகையில் ரத்தக் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் வெ.தா.சிவலிங்கம் தலைமை தாங்கினார். ரவி, மலர்கொடி, மாரிமுத்து, சுப்பிரமணி, விஜயகுமார், துரை,பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயலாளர் தினேஷ் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜாஜி ரத்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் சிவா சிறப்புரை ஆற்றி பேசினார். முன்னதாக, அனைவரையும் கல்பனா வரவேற்றார்.

    முடிவில், காந்திமதி நன்றி கூறினார். இந்தப் போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், சரக பொறுப்பாளர்கள், அனைத்து அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.
    • சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில்,நேற்று இரவு இப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல்வெளியில் விழுந்து கிடந்தது. இன்று காலை வழக்கம் போல் புதுப்பாளையம் கிராமம், முருகர் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மோகன் பாபு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பார்க்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கியதால் கூக்குரல் இட்ட வண்ணம் அலறி துடித்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.

    ஆனால்,அதற்குள் அவர் இறந்து போனார். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான மோகன் பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.
    • மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணாநதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.

    இதனை ஏற்று கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. மே 3-ந் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,584 டி எம். சி. தண்ணீர் வந்து உள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 30.09 அடியாக பதிவாகியது. 1,760 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வினாடிக்கு 220 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 54 சதவீதம் மட்டும் நிரம்பி உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 70 சதவீதமாக உள்ளது. எனவே குடிநீர் ஏரிகளில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மொத்தம் 6,866 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது(மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மி.கன அடி ஆகும். சென்னை யின் குடிநீர் தேவைக்காக தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை வருகிற நவம்பர், டிசம்பர் மாதம் தீவிரம் அடையும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை குடிநீரை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்யும் வகையில் கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற தமிழக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 220 கன அடி மட்டுமே வருகிறது. கடந்த வாரத்தில் தண்ணீர் வரத்து 100 கனஅடிக்கும் கீழ் குறைந்தது. ஆந்திர விவசாயிகள் தங்களது விவசாயத்துக்கு அதிக அளவு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    • நேற்று இரவும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பலத்த மழை கொட்டியது.

    இந்தநிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டியது. ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது.

    இதேபோல் ஆர்.கே.பேட்டை, ஆவடி, தாமரைப்பாக்கம், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 6.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பொன்னேரி, மீஞ்சூர் வேண்பாக்கம், சோழவரம், பழவேற்காடு, தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக இரவு 9 மணி முதல் 10 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

    திருத்தணி- 59 மி.மீட்டர்

    பொன்னேரி- 36 மி.மீட்டர்

    ஆர்.கே. பேட்டை - 33 மி.மீட்டர்

    திருவள்ளூர் - 27 மி.மீட்டர்

    திருவாலங்காடு - 21 மி.மீட்டர்

    ஆவடி - 19 மி.மீட்டர்

    தாமரைப்பாக்கம் - 17 மி.மீட்டர்

    கும்மிடிப்பூண்டி - 16 மி.மீட்டர்

    சோழவரம் -16 மி.மீட்டர்

    பள்ளிப்பட்டு - 10 மி.மீட்டர்

    செங்குன்றம் - 6 மி.மீட்டர்

    பூண்டி - 2 மி.மீட்டர்.

    • மர்ம கும்பலின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவர் ஓட முயன்றார்.
    • கொலை செய்யப்பட்ட பார்த்திபன் அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வந்தவர் ஆவார்.

    செங்குன்றம்:

    சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். 53 வயதான இவர் பாடியநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார்.

    பாடியநல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திடலில் பார்த்திபன் தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை 6 மணி அளவில் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை சுற்றி வளைத்தது.

    அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. நாலா புறம் சூழ்ந்து கொண்டு பார்த்திபனை அவர்கள் சரமாரியாக வெட்டினர்.

    மர்ம கும்பலின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவர் ஓட முயன்றார். அதற்குள் 4 பேரும் பார்த்திபனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். பார்த்திபனை வெட்டிக்கொன்ற கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதுவிட்டனர்.

    கொலை செய்யப்பட்ட பார்த்திபன் அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வந்தவர் ஆவார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் மர்ம நபர்கள் பார்த்திபனை வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்த்திபன் அப்பகுதியில் பிரபலமானவர் ஆவார். தற்போது பாடியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவராக இவரது அண்ணன் நடராஜனின் மனைவி ஜெயலட்சுமி இருந்து வருகிறார். பார்த்திபன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பார்த்திபனின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக பாடியநல்லூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பார்த்திபனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றி விவரங்கள் தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராவை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலமாக கொலையாளிகள் யார்? என்பதை அடையாளம் காணும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். கொலையுண்ட பார்த்திபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டராகவும், இன்னொருவர் வக்கீலாகவும் உள்ளனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • மூலவர் வீரராகவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஆடி மாத தொடக்கமான கடந்த 17-ந்தேதி அன்றே அமாவாசை வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் மற்றும் குளக்கரையில் இரவு தங்கி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவில் குளக்கரை மற்றும் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அமைந்துள்ள ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் மூலவர் வீரராகவரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    ஆடி மாத தொடக்கமான கடந்த 17-ந்தேதி அன்றே அமாவாசை வந்தது. ஆடி மாதத்தில் இன்று 2-வது அமாவாசை என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி தண்டனை சிறையில் இருக்கும் கைதி ஒருவரை சந்திக்க, சென்னை, அண்ணாநகரை சேர்ந்த நவீன் குமார்(24) என்பவர் வந்தார். அப்போது அவர் தின்பண்டங்களை பையில் கொண்டு வந்தார். சந்தேகம் அடைந்த சிறை போலீசார் அந்தப் பையை சோதனை செய்தனர். அதில் 10 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நவீன் குமார் அந்த கஞ்சாவை தண்டனை சிறையில் இருக்கும் நண்பரான கோபி நாத் என்பவருக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புழல் சிறையில் சிறை காவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது உயர் பாதுகாப்பு பிரிவு அறை அருகே கேட்பாரற்று கிடந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்கில் கைதாகி 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திவசந்தகுமார் என்பவரிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி என்ற கைதியிடம் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஜெயிலுக்குள் கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சவுந்தரராஜன் அங்குள்ள கூவம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அவர் இறந்தார்.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது52). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சவுந்தரராஜன் அங்குள்ள கூவம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். வெள்ளவேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரெய்லர் லாரி ஒன்று இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பேங்க் ஆப் பரோடா வங்கி எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற டிரெய்லர் லாரி ஒன்று இன்று காலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது.

    மேலும்,பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி ஒன்று பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்று விட்டது. இதனால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.

    இதே போன்று பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையிலும், பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. இதனால் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுதந்திர தின விழாவை கொண்டாட அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த ஒன்றிய குழு உறுப்பினர்களும் சாலை ஓரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று மதியம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பெரியபாளையம் கோவில் அருகே இருந்த பழுதான லாரியை பொதுமக்களும்,போலீசாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.மேலும், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளான டிரெய்லர் லாரியையும் பொதுமக்களும்-போலீசாரும் கிரேன்மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர்,வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இன்று அரசு விடுமுறை மற்றும் சுதந்திர தின விழா,கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் முக்கிய நாள் என்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
    • கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிவித்து சிரித்து மகிழ்ந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1991-93 ம் ஆண்டு வரை படித்த பிளஸ் 1 பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் ஒருங்கிணைப்பாளர் ந.சபஸ்டின் தலைமையில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகத்துடன் முன்னாள் பள்ளியில் நடைபெற்ற சுவாரசியங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டு ஆசிரியர்களுடன் மாணவர்களுடன் கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிவித்து சிரித்து மகிழ்ந்தனர். பின்னர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இனிப்பு வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். இதில் மாணவர்கள் பாலகிருஷ்ணன், சாமிநாதன் வெங்கடேசன், பாபு, ஜெய்கணேஷ், சீனிவாசன்,செந்தில்குமார், ரகுநாத, சுதாகர்,மணிமாறன்,ரமேஷ்,பாஸ்கர, ரகு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

    • கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது.
    • பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.

    அம்பத்தூர் பால் பண்ணையில் கடந்த மாதம் 17-ந் தேதி தேசிய பசுமை தீர்ப் பாயம் உத்தரவின் பேரில் தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. அப்போது ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் அடைத்து பயன்படுத்திய பிளாஸ்டிக் பெட்டிகள், வெண்ணெய்டப்பாக்கள், பால் பாக்கெட்டுகள், சேத மடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஐஸ்கிரீம் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சுமார் 150 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பால் பண்ணை வளாகத்துக்குள் 4 இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த மற்றும் அகற்றப்பட்ட கழிவுகளின் விவரங்கள் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை கையாளுவதில் பிளாஸ்டிக் சப்ளையர்கள் வைத்துள்ள திட்ட விவரங்களையும் கேட்கும்படி கோரப்பட்டு இருந்தது.

    பால்பண்ணையில் 4 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் மூடிய கழிவு சேகரிப்பு கிடங்கு கிடப்பதாகவும் 5 ஆயிரம் சதுர அடி திறந்தவெளி பரப்பளவில் கழிவுகள் சேமிக்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தரப்பில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை நவீன முறையில் தினமும் கையாள்வதற்கு பேலிங் போன்ற முறைகளை கடைபிடிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடியற்காலை முதல் இரவு வரையில் வந்து நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை பக்தியுடன் வணங்குவர். இதனால் பக்தர்களுக்கு வீடு,நிலம், திருமணம், பிள்ளை பேரு, உத்தியோகம் உள்ளிட்டவை சிறப்பாக அமைவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள திருக்குளத்தை ரூ.3.14கோடி செலவில் சீரமைக்கும் பணியை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை துவக்கி வைத்தார்.

    இந்நிலையில், அதனை வரவேற்கும் வகையிலும்,ரூ.2.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் என மொத்தம் ரூ.3 கோடியே16 லட்சத்து 30 ஆயிரம் செலவிலான வளர்ச்சிப் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி தலைமை தாங்கினார். சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்மீக நூல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தனர். இதன் பின்னர், திருக்குளத்தை சீரமைக்கும் பணியின் பூஜையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பார்த்தசாரதி, ஒப்பந்ததாரர் விஜயகுமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் இ.ஜெகன்உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் திருக்கோவிலின் பணியாளர்களும், ஊழியர்களும், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×