என் மலர்
நீங்கள் தேடியது "இணை செயலாளர் படுகொலை"
- மர்ம கும்பலின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவர் ஓட முயன்றார்.
- கொலை செய்யப்பட்ட பார்த்திபன் அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வந்தவர் ஆவார்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். 53 வயதான இவர் பாடியநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார்.
பாடியநல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திடலில் பார்த்திபன் தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை 6 மணி அளவில் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை சுற்றி வளைத்தது.
அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. நாலா புறம் சூழ்ந்து கொண்டு பார்த்திபனை அவர்கள் சரமாரியாக வெட்டினர்.
மர்ம கும்பலின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவர் ஓட முயன்றார். அதற்குள் 4 பேரும் பார்த்திபனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். பார்த்திபனை வெட்டிக்கொன்ற கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதுவிட்டனர்.
கொலை செய்யப்பட்ட பார்த்திபன் அ.தி.மு.க.வில் தீவிரமாக கட்சி பணியாற்றி வந்தவர் ஆவார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் மர்ம நபர்கள் பார்த்திபனை வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பார்த்திபன் அப்பகுதியில் பிரபலமானவர் ஆவார். தற்போது பாடியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவராக இவரது அண்ணன் நடராஜனின் மனைவி ஜெயலட்சுமி இருந்து வருகிறார். பார்த்திபன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பார்த்திபனின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக பாடியநல்லூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பார்த்திபனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றி விவரங்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராவை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலமாக கொலையாளிகள் யார்? என்பதை அடையாளம் காணும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். கொலையுண்ட பார்த்திபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டராகவும், இன்னொருவர் வக்கீலாகவும் உள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.






