என் மலர்
நீங்கள் தேடியது "Blood signature protest"
- சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்.
- உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற வகையில் ரத்தக் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தங்களது கோரிக்கையான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும் என்றும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலை படியுடன் வழங்க வேண்டும், பத்து வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவிகிதம் முன்னுரிமை அளித்து பணியில் சேர்த்திட வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் இன்று உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற வகையில் ரத்தக் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் வெ.தா.சிவலிங்கம் தலைமை தாங்கினார். ரவி, மலர்கொடி, மாரிமுத்து, சுப்பிரமணி, விஜயகுமார், துரை,பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் தினேஷ் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜாஜி ரத்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் சிவா சிறப்புரை ஆற்றி பேசினார். முன்னதாக, அனைவரையும் கல்பனா வரவேற்றார்.
முடிவில், காந்திமதி நன்றி கூறினார். இந்தப் போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், சரக பொறுப்பாளர்கள், அனைத்து அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






