search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்றத்தூர் அருகே கருணாநிதிக்கு சிலை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
    X

    குன்றத்தூர் அருகே கருணாநிதிக்கு சிலை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

    • இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
    • பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த பெரியபணிச்சேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் தொடக்க விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கருணாநிதியின் வெண்கல உருவ சிலை மற்றும் புதிய படிப்பகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் திறந்து வைக்கும் கலைஞர் கருணாநிதியின் 2-வது சிலை இதுவாகும். ஏற்கனவே கடந்த ஜூலையில் திருவண்ணாமலையில் நான் முதல் சிலையை திறந்து வைத்தேன்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாங்கள் ஒரு பேனாவையும், பேப்பரையும் அவரிடத்தில் கொடுத்து, உங்களுக்கு பிடித்தமான பெயர்களை எழுதுங்கள் என்று கூறினோம்.

    முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் சுற்றி நின்று தங்களது பெயர்களை கலைஞர் எழுத மாட்டாரா என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

    ஆனால், அந்த நேரத்தில் கூட அவர் எழுதியது "அண்ணா" என்ற பெயரை தான். இதிலிருந்து கருணாநிதி பேரறிஞர் அண்ணா மீது எந்த அளவிற்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

    கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் தலைமுறை தலைமுறையாக தமிழக மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

    கலைஞருடைய திட்டங்களில் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை இருந்தது. கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் சமூக பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் திட்டங்களாக இருந்தது. 3 கிலோ மீட்டருக்கு ஒரு அரசு பள்ளியை நிறுவினார்.

    மாணவர்களுக்கு வாரந்தோறும் சத்துணவுடன் முட்டையும் வழங்கினார். உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். கலைஞர் வழியில் தற்போதைய நமது முதலமைச்சரும் மத்திய அரசாங்கமே திரும்பிப் பார்க்கும் வகையில், பல நல்ல திட்டங்களை மக்களுக்காக செயலாற்றி வருகிறார்.

    கலைஞர் நம்மிடம் இருந்தால் என்னென்ன நல்ல திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருப்பாரோ அதைத்தான் தற்போது தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார். குறிப்பாக இல்லந்தோறும் கல்வி, பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்ட திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அத்துடன் பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    நமது திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது. அதுதான் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம். என்றுமே தி.மு.க. மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் அதானி 2-ம் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். தற்போது இந்தியாவில் அதானி விமான நிலையம், அதானி ரெயில் நிலையம், அதானி ஹார்பர் ஆகியவை வந்து உள்ளது.

    இதற்கெல்லாம் காரணம் அவர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதாலே. மோடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போதெல்லாம் விமானி இல்லாமல் கூட பயணம் செய்வார்.

    ஆனால் "அதானி" இல்லாமல் ஒரு நாள் கூட பயணம் செய்ததில்லை. இது குறித்த ஆதாரங்களை புகைப்படத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியபோது தான் அவர் மீது வழக்கு பதிவு செய்து, பாராளுமன்றத்திற்கு வர முடியாமல் செய்தார்கள்.

    ஆனால் உச்சநீதிமன்றம் அவர்களது தலையில் சரியான கொட்டு கொட்டி, ராகுல் காந்தி மீது விதித்த தடையை ரத்து செய்தது.

    இதுவே பல்வேறு கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" அமைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

    இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தமிழகத்தில் கற்க விடாமல் தி.மு.க. எதிர்த்து வருவதாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை கற்பதற்கு நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை. மாறாக இந்தி திணிப்பை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

    உங்களது பா.ஜ.க. அலுவலகம் சென்னை தியாகராஜ நகரில் தான் உள்ளது. அதன் அருகிலேயே இந்தி பிரச்சார சபா உள்ளது. நீங்கள் அங்கே சென்று தாராளமாக இந்தி கற்றுக்கொள்ள வேண்டியது தானே, உங்களை யார் தடுத்தார்கள். மணிப்பூரில் 5 மாதங்களுக்கும் மேலாக வன்முறை கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிகிறது.

    அதனை தடுக்க பா.ஜ.க. அரசிற்கு துப்பில்லை. பா.ஜ.க. அரசிற்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டணியால் இந்தியா என்ற வலுவான அமைப்பு உருவாகி உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை தெளிவாக முடிவெடுத்து சிந்தித்து நாம் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும் திருபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.வுமான க.சுந்தர், மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி, இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை, மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தி.க.பாஸ்கரன், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா.சுதாகர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×