என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆவடி பகுதியில் ரவுடிகள் மாமூல்கேட்டு மிரட்டினால் '7305735666' எண்ணில் புகார் செய்யலாம்- போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
- மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- விபரங்களை தனிப்படை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் அப்பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து பணிகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயபிரகாசை மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்னை வியாசர்பாடிக்கு கொண்டு சென்று மாமூல் கேட்டு மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து மாதந்தோறும் மாமூல் தரவேண்டும் என்று கூறி மிரட்டி விடுவித்ததாக தெரிகிறது.
இது குறித்து ஜெயபிரகாஷ் மீஞ்சூர் போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு தொடர்பாக வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்அஸ்வத்தாமன், பட்டமந்திரி அண்ணாநகரை சேர்நத அச்சுதன், கொண்டக் கரையை சேர்ந்த புகழேந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, 7 தோட்டாக்கள், கத்தி, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுபோல் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நிறுவனங்களில் ரவுடித்தனம் செய்து மாமூல் வசூல் வேட்டை செய்து வருபவர்களின் விபரங்களை 73057 35666 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து தொழிற்சாலை, மற்றும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்த விபரங்களை தனிப்படை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.






