என் மலர்
திருவள்ளூர்
- இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது.
- பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று அது 1684 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் பூண்டி மற்றும் ஆந்திரா பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.
இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான் சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான் 3645 மி.கனஅடியில் 2860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2237 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- ஏராளமான அடியார்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
- மாலையில், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை அம்பத்தூர் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில்களில் உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருக்கோவில்களின் தூய்மை, கோவில்களின் வளர்ச்சி, கோவில் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான அடியார்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு கோவிலிலும் உட்பிரகாரங்கள், வெளிபிரகாரங்கள், கோசாலை, திருக்குளம் நந்தவனம், பக்தர்கள் தங்கும் விடுதி, அன்னதானக் கூடம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது.
பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடப்பட்டன. மாலையில், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அருணாச்சலம் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற நிறுவனர் ச.கணேசன் செய்திருந்தார்.
- கார்த்திக் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.
- தற்கொலை குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை திரூரைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜீவிதா(வயது22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜீவிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
- திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடியோவில் அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார்.
- போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த பரணிபுத்தூரை சேர்ந்தவர் ரூபன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர்.
ரூபன் பைனான்சில் ஆட்டோ வாங்கி இருந்தார். இதற்கான பணம் ரூ. 3 லட்சம் வரை திருப்பி கட்ட முடியவில்லை என்று தெரிகிறது.
இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசில் ரூபன் மீது புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரூபன் செல்லவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 2-வது மனைவியான லீலாவதி வீட்டுக்கு சென்ற ரூபன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக ரூபன் தனது செல்போனில் வீடியோ ஒன்று பேசி பதிவு செய்து உள்ளார். அதில், அம்பத்தூர் போலீசார் ஒரு தலைபட்சமாக விசாரித்து தன்னை கைது செய்து விடுவதாக மிரட்டுகின்றனர் என்று கூறுகிறார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் என்று கூறி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரூபன் மீது வேறு சில வழக்குகளும் உள்ளதாக தெரிகிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன ரூபன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் மிரட்டியதால் ஆட்டோ டிரைவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் நேற்று ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவும் திருவள்ளூர் மற்றும் ஆந்திரா பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நேற்று 1520 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று மேலும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி ஆகும். இதில் 2823 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 630 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. உபரி நீர் திறப்பும் 1684 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 3.5 டி.எம்.சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளது. கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தொடர்ந்து இருக்கும் என்று தெரிகிறது.
பூண்டி ஏரியில் இருந்து உபரி நீராக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரி நிரம்பி உள்ளதால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 1284 கனஅடியாக உள்ளது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2799 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 20.78 அடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரிக்கு 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2217 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மொத்த உயரமான 21 அடியில் 15.98 அடிக்கு தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு 93 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் மொத்த கொள்ளவான 1081 மி.கனஅடியில் 165 கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
- அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார்.
- பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது26). இவர் சொந்தமாக மருந்துகடை நடத்தி வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அதனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று அய்யப்பன், அய்யத்தூரில் உள்ள தனியார் கல்லுாரி பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த அய்யப்பன் யார்? யாரிடம்? இருந்து பணம் வாங்கினார்? அவருக்கு யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- கவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
மீஞ்சூரை அடுத்த மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை (27-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர், மேலூர்,வல்லூர் பட்டமந்திரி, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அரியன்வாயல், புங்கம்பேடு, கே.ஜி.எல். பிரபு நகர், சூர்யா நகர், லட்சுமி நகர்,முரளி நகர், நாலூர், கேசவபுரம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், மடியூர், ராமாபுரம், வழுதிகைமேடு, 400 அடி ரோடு , முல்லைவாயல், கே ஆர் பாளையம், பள்ளிப்புரம், மீஞ்சூர் நியூ டவுன், வள்ளுவர் நகர், அன்பழகன் நகர், கொண்டக்கரை, ஆகிய பகுதி களில் மின் வினி யோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மீஞ்சூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
- மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக்(வயது47). கொத்தனார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மதுபோதையில் கார்த்திக் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி பிரியாணி சமைத்து வைத்து இருந்தார். அதனை கணவருக்கு கொடுத்த போது சூடாக இல்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், பிரியாணி சூடாக இல்லை எனக்கூறி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்க சென்று விட்டனர்.
இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனவேதனையில் இருந்த கார்த்திக் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர்.
- பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் அங்குள்ள கடைக்கு பழச்சாறு குடிக்க சென்றனர். அவர்களுக்கு கடைக்காரர் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்தார்.
பழச்சாறில் கலப்பதற்காக அவரிடம் ஐஸ் கட்டி இல்லை. எனவே ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் காணப்பட்ட சிலிக்கா ஜெல்லை பழச்சாறில் கலந்தார்.
இந்த பழச்சாறை குடித்த 13 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிலிக்கா ஜெல் நச்சுத் தன்மையற்றது என்றாலும் அது கடுமையான வாந்தி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 13 பேரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழச்சாறு குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தவறான ஐஸ் பயன்படுத்தியதால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது. ஆனாலும் பீதியடைய தேவையில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் வெளியில் பழச்சாறு உட் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் 4 பிரீசர் பெட்டிகள் உள்ளன. பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்கப்படும். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் இருந்து ரத்த வங்கி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொன்னேரி அரசு மருத்துவனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளது. ஆனால் அதுபற்றி அறியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இதுபற்றி அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கர்ப்பிணிகள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு கூடுதல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பொன்னேரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது, கொரோனா தொற்றின் போது இறந்த நர்சுகளின் குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.
- முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மாணவர்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆலோசனைகளை சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் கந்தசாமி கலந்துகொண்டு கல்வி வேலை வாய்ப்பு தொழில் வழிகாட்டி குறித்து ஆலோசனை வழங்கினார்.
முகாமில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் முதுநிலை மேலாளர் ஆனந்த நாராயண பிரசாத் சென்னை மாவட்ட தொழில் முனைவோர் பயிற்சியாளர் சசிகுமார் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன் வழக்கறிஞர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் யாபேஸ், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், வெற்றிச்செல்வன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
- திருவேற்காடு நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 31). மத்திய உளவுத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வைஷாலி. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நேற்று மாலை மனோஜ்குமார், தனது நண்பர் ஒருவரது குடும்ப விழாவில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். பருத்திப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவடியில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே காரில் இருந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். விபத்து பற்றி அறிந்ததும் ஆவடி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பலியான மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






