என் மலர்
திருவள்ளூர்
- 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
- பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தடபெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம், திருவாயர்பாடி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் குற்ற செயல்களும் குறைந்து இருந்தன. இந்நிலையில் இந்த கண்காணிப்பு காமிராக்களில் பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.
எனவே கண்காணிப்பு காமிராக்களை சீரமைத்து குற்றச்செயல்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
- பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 25-ந்தேதி ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது.
இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 27-ந்தேதி 2500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தற்போது 1000 கன அடியாக குறைந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
- மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
பொன்னேரி:
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையில் இருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
அதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி ஆய்வாளர் சின்னத்துரை மீஞ்சூர் டிராபிக் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடை பெற்றது.
- 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடை பெற்றது.
இதில் கடந்த 15 நாட்களில் ரூ.65 லட்சத்து 48 ஆயிரத்து 194 ரொக்கப்பணம் மற்றும் 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.
இதேபோல் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 469 காணிக்கை செலுத்தி உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிறை மணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.
- இன்றுமுதல் வருகிற 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்.
பூந்தமல்லி:
திருவேற்காட்டில் உள்ள சிறப்பு பெற்ற தேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறை மணி காட்சி நடைபெறும்.
பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்றும் இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் புரட்டாசி பவுர்ணமி நாளான இன்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை மற்றும் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிறைமணி காட்சியாக பந்தல் முழுவதும் தொங்கவிடப்பட்டது.
இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. சுமார் 5 டன் அளவிலான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நிறை மணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.
இந்த நிறைமணி காட்சி இன்றுமுதல் வருகிற 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடை பெறுகிறது. இதனை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம். நிறைமணி காட்சியின் கடைசி நாளில் தொங்கவிடப்பட்டு உள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும். பின்னர் அவை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
முன்னதாக இன்று காலை மூலவர் தேவி கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் நிறை மணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படமாகவும், செல்பியாகவும் எடுத்து மகிழ்ந்தனர்.
- குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
- சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி. ஏரியில் 1081 மில்லியன் கனஅடி (1.08 டி.எம்.சி.) மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை 25 ஆயிரம் மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை 18.86 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஏரியை ஆழப்படுத்தி தற்போதைய கொள்ளளவை விட 3 மடங்கு அதிகரிக்கப் பட உள்ளது. தற்போது சோழவரம் ஏரியில் 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே (1081 மி.கனஅடி) தேக்கி வைக்க முடியும். இது 3 டி.எம்.சி. ஆக உயர்த்தப்பட இருக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியில் நீர் இருப்பை 3 டி.எம்.சி. ஆக அதிகரிக்க திட்டம் உள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பணிக்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றனர்.
- தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் இருந்து 3210 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- அதிக அளவு தண்ணீர் வந்ததால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 2840 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியில் முழு கொள்ளளவான 35 அடியில் 34 அடிக்கு தண்ணீர் வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் இருந்து3210 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்கிறது.
இந்த உபரி நீர் மெய்யூர், ராஜபாளையம் தரைப்பா லத்தை முழ்கடித்து தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதிக்கு வந்தது. அதிக அளவு தண்ணீர் வந்ததால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் திருக்கண்டலம், இருளிப்பட்டி, ஜெகநாதபுரம், வன்னியம்பாக்கம், வல்லூர் அணைக்கட்டு, சுப்பாரட்டி பாளையம், பள்ளிபுரம், வெள்ளிவாயல் நாப்பாளையம் மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் வழியாக சென்று எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலந்து வருகிறது.
பொன்னேரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில், 90 ஏரிகள் உள்ளன. பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் பொதுப்பணித் துறை பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் தாசில்தார் மதிவாணன் பொதுப்ப ணித்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், மற்றும் அதிகாரிகள் , ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பொன்னேரி அடுத்த திருப்பா லைவனம், ஆண்டார் மடம் பேரிடர் கால புயல் பாதுகாப்பு மையம் கட்டிடத்தினை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா பார்வையிட்டார். ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ஆய்வு செய்து ஊத்து க்கோட்டை பொன்னேரி கவரப்பேட்டை மீஞ்சூர் ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறையினர் 15 ஆயிரம் மணல் மூட்டைகள் , சவுக்கு கம்புகள் கயிறுகள் 20ஆயிரம் காலி சாக்கு பைகள், ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பருவ மழையை யொட்டி தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக பொன்னேரி உதவி செயற் பொறியாளர் வெற்றிவேலன் கூறினார்.
- வடிவேல் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
- அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
திருவள்ளூர்:
பூண்டி, புஷ்பகிரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது அவரது 3 மாடுகள் வயல்வெளி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றன.
அந்த நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டதால் 3 பசுமாடுகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
- ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.
மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.
இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைமறைவான வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள ஆலத்தூர் கிராமம், அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் அர்ஜுனன் (வயது58). இவர் கீழானூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த அர்ஜுனன் மூலக்கரையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த வேன் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.
- குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
- காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் பஜார் வீதி, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களை கமிஷனர் சங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பழுதான கேமராக்களை அகற்றி புதிய கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் காணப்படுவதால் அதிகமாக விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதால் முதலாவதாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு பின்னர் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜராபர்ட், போக்குவரத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபிதாஸ்,மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் உடன் இருந்தனர்.
- டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவேற்காடு நகர் மன்ற தலைவர் மூர்த்தி ஆலோசனையின்படி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மேற்பார்வையில் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா கூறும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியில் இருந்து 105 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நூம்பல் பகுதியில் தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் பள்ளியில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் ஒரே நாளில் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றார்.






