search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொசஸ்தலை-ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 3 தரைப்பாலங்கள் மூழ்கின: போக்குவரத்து பாதிப்பு
    X

    கொசஸ்தலை-ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் 3 தரைப்பாலங்கள் மூழ்கின: போக்குவரத்து பாதிப்பு

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×