search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "footbridge"

    • கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
    • கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாதம்மன் கோவில் பகுதிக்கு வருவதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் ஒன்று உள்ளது. இந்த தரை பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், சந்திராபுரம், மங்களம், பாலேஸ்வரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருவார்கள்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையின் காரணமாக பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் காரணி-அஞ்சாதம்மன் கோவில் இடையில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும், ஆரணி சமுதாயக் கூடம் எதிரில் இருந்து மங்களம் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாதையும் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் இப்பகுதியில் ஆபத்தையும் உணராமல் கிராம மக்கள் சிலர் கடந்து சென்று வருகின்றனர்.

    பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீசார் இப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.

    இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் வழியாக சென்று வருகின்றனர்.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருமங்கலம் அருகே நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் தரைப்பாலம் மூழ்கியது.
    • வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக டி.புதுப்பட்டி, சவுடார்பட்டி, கிழவனேரி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

    டி.புதுப்பட்டி கிராமத்தி லிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. அப்போது கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சக்திவேல் டூவிலரில் கோபாலபுரம் நோக்கி சென்றார். நடுபாலத்தில் சென்ற போது திடீரென மழைநீர் பாலத்தினை மூழ்க அடித்ததால் டூவிலருடன் தண்ணீரில் விழுந்து அலறினார்.

    தண்ணீரில் மூழ்காமல் இருக்க அருகேயிருந்த கருவேலமரத்தினை பிடித்து மிதந்தார். இதனை கண்ட கிராமமக்கள் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு படையினர் வருவதற்குள் தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே கிராமமக்கள் கயிறு மூலமாக மின்வாரிய ஊழியர் சக்திவேலுவை மீட்டனர். இருப்பினும் அவரது டூவிலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மேற்படி பாலத்தின் வழியாக யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தினர் .

    இதே போல் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழைநீர் வயல்வெளிகளில் புகுந்த தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோபாலபுரம் பகுதியில் கவுண்ட நதி குண்டாறு தூர்வாரப்படாத தால் மழை வெள்ளம் தரைப் பாலத்தின் மேல் சென்றதாகவும் ஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    • கன மழையால் தரைப்பாலம் உடைந்தது
    • மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் உடைந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து அய்யன்கொல்லி, பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் தரைபாலம் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர செட்டி வயல் பகுதியில் 180 குடும்பங்கள் இந்த பாலத்தின் வழியேசெல்ல வேண்டும். இந்த பகுதியில் பாலம் உடைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • மேம்பாலம் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர்.
    • மாணவ மாணவிகள் இது எங்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது என தெரிவித்தனர்.

    பீளமேடு.

    கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை சுமார் 1610 கோடி செலவில் நான்கு வழி உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இதில் பீளமேட்டில் உள்ள பி.எஸ் ஜி கல்லூரியை இருபுறமும் இணைப்பதற்காகவும், மாணவ, மாணவிகள் நடந்து செல் லும் வகையில் அவினாசி ேராட்டின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    இந்த பாலம் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த நடைபாதை மேம்பாலத்தினை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர்.

    அதன்படி மேம்பாலத்தின் அருகிலேயே தூண்கள் அமைக்கப்பட்டது. இதனால் இப்போது ஓடுதளம் அமைக்கும் பணிக்காக இந்த நடைபாதை மேம்பாலம் அகற்றப்படுகிறது.

    இந்த நடைபாதை. மேம்பாலம் கோவை பீளமேட்டின் அடையாளமாகவும் விளங்கி வந்தது. இதனால் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த நடைபாலம் அகற்றப்படுவதால் அதன் முன்பு நின்று ஏராளமானோர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

    இந்த மேம்பாலம் அகற்றப்படுவது குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கூறும் போது, கல்லூரியின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்கு சாலையின் குறுக்கே செல்லாமல் நேரடியாக கல்லூரியின் வகுப்புகளுக்கு நடைபாதையில் சென்று வந்தோம்.

    இது எங்களின் அடையாளச் சின்னமாகவே இருந்தது. இப்போது அதனை அகற்றுவது எங்களுக்கு மிகுந்த மனவேதனை தருவதாக உள்ளது. என தினந்தோறும் பாலத்தை பயன்படுத்திய மாணவ மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.
    • மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.

    இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
    • ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே வாகன போக்குவரத்துக்கு வசதியாக, 25 ஆண்டுகளுக்கு முன் தரை மட்ட பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து, பிரமதேசம், ஆற்காடு, வேலுார் போன்ற பகுதிகளுக்கு பஸ் இயங்கி வருகிறது.

    மேலும் இந்த ஆற்றுக்கு மறுகரையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்குகிறது.

    அதிகளவில் வட இலுப்பை, செய்யனுார், பேட்டை, பட்டரை, சித்தனகால், சீவரம், சிறுநாவல்பட்டு, பிரமதேசம், நாட்டேரி, கல்பாக்கம், தென்னம்பட்டு, புத்தனுார், ஐவர்தாங்கல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த மண்சாலை மழைக்காலத்தில் தாக்கு பிடிக்காது என்பதால் இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய தரைமட்ட பாலம் 4 கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் பிரிந்து செல்லும், பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

    • தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை வருகின்றனர்.
    • நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    உடுமலை :

    உடுமலையில் கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் உள்ளது. கோவை ,பாலக்காடு ,பொள்ளாச்சி ,ஊட்டி ,திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு உடுமலை வழியாக பஸ்கள் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை வருகின்றனர்.

    பஸ் நிலையம் வெளியே பொள்ளாச்சி ரோடு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் பயணிகள்- பொதுமக்கள் பொள்ளாச்சி ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர்.

    இதையடுத்து உடுமலை நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

    இதனால் மக்கள் ரோட்டை கடக்க சிரமப்படுவது தொடர்கிறது.அவசரமாக ரோட்டை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது .எனவே நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உசிலம்பட்டியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் உடைந்தது.
    • இதனால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேக்கிழார்பட்டி தெற்கு ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சில்லாம்பட்டி ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. மேக்கிழார்பட்டி-பசும்பொன் நகர் பகுதியில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாசில்தார் கருப்பையா தலைமையில் அடைப்புகளை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    • வைகை ஆற்று தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    மதுரை

    மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய இடங்களில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை நகரில் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலமாக மதுரை ஏ.வி. பாலம் உள்ளது. இந்த பாலத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதி வேகமாக செல்லக்கூடிய மோட்டர் சைக்கிள்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே இந்த பாலத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    சைக்கிள்கள், டிரை சைக்கிள் உள்ளிட்டவை ஏ‌.வி. பாலம் அருகே உள்ள புது பாலத்தின் கீழ் உள்ள வைகையாற்று தரைப்பாலம் வழியாக அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை தரைப்பா லத்தில் போக்கு வரத்துக்கு திடீரென தடை விதித்து அங்கு கான்கிரீட் தடுப்புகளை அமைத்தது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    இதன் காரணமாக சுமை ஏற்றி செல்லும் டிரை சைக்கிள் தொழிலாளர்கள் எம்.ஜி.ஆர்‌ பாலத்தை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வரும் டிரை சைக்கிள் நேரடியாக ஏ.வி‌ பாலம் வழியாக செல்கிறது. இதனால் அந்த பாலத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்‌ சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    அதிக பாரத்துடன் டிரை சைக்கிள் தொழிலாளர்கள் பாலத்தை கடப்பது பெரும் சவாலாக உள்ளது. வைகை ஆற்று தரைப் பாலத்தை அடைத்துள்ளதால் அங்கு மக்கள் நடமாட்டம் குறைந்து சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் ரவுடிகள் அங்கு குவிந்து மது குடிப்பதும், பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு திட்டமிடும் இடமாகவும் வைகை ஆற்று தரைப்பாலம் மாறி வருகிறது.

    இந்த தரை பாலத்தை கான்கிரீட் தடுப்புச் சுவர் வைத்து அடைத்துள்ளதால் போலீசாரும் அந்த பகுதியில் ரோந்து செல்ல முடியவில்லை.

    நகரின் எந்தவித நெரிசலுமின்றி வாகனங்கள் சென்று வந்த வைகை ஆற்றை தரைப் பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் நேரடி நடவடிக்கை எடுத்து அந்த பாலத்தை போக்குவரத்துக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் உடனே அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • கோவையில் நேற்று நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
    • தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    கோவை

    கோவையில் நேற்று நள்ளிரவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழைக்கு கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர்- சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படு இருப்பதால் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

    2 முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் 3-வது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இத னால் வாகன‌ ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்ப டுவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்ப டுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்ப டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

    ×