என் மலர்
திருவள்ளூர்
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.
- நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணி புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.
பூந்தமல்லி:
கோவில் நகரமான திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் குப்பை இல்லாத, சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக 18 வார்டுகளிலும் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்வச்சதா லீக் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.
தூய்மையின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தெரு முனை கூட்டங்கள், வாகனம் மூலம் பிரச்சாரம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல், வீடு வீடாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது, இயற்கை உரம் தயாரிப்பு, பள்ளி - கல்லூரி மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பல்வேறு வடிவங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காந்தி ஜெயந்தி அன்று திருவேற்காடு நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணி புரிந்தவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ், கவுன்சிலர்கள் பிரதானம், காஞ்சனா இளையராஜா, ஜானகி சுடலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கல்லூரி, பள்ளிகள், மருத்துவமனை, பூங்கா, தனியார் நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
- குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டு மின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆண்டு தோறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூரகம்ஹாரம் நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.
பிரசித்தி பெற்ற மற்ற முருகன் கோவில்களில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப் படும் போது குன்றத்தூரில் உள்ள முருகன்கோவிலில் இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்தது. கடைசியாக கடந்த 1969-ம் ஆண்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக சூரசம்ஹாரம் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குன்றத் தூர் முருகன் கோவிலில் புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அறங் காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த ஆண்டு முதல் குன்றத் தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதைத் தொடர்ந்து சூரசம்ஹாரத் தின் போது இருக்க வேண்டிய சாமி சிலைகளை புதுப்பிக்கும் பணிக்காக அவற்றை வாகனங்களில் எடுத்து செல்லும் பணி நடந்தது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் சுமார் 54 ஆண்டு களுக்கு பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரி விக்கப்பட்டு உள்ளது.
- கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கும், தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரியின் வெளிப்புற கரைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தீவன மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஏரி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் மின்வேலி அமைத்து உள்ளனர். மேலும் அதில் நெற்பயிரிட இருப்பதாக தெரிகிறது.
மின்வேலியால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் ஆக்கிரமிப்பு ஏரிநிலத்தை மீட்க கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆவூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் மதியழகன், ஏரி இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்
- ரெயில் நிலையத்தில இறங்கும் போது தான் புவனேஸ்வரிக்கு நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
- திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பூங்கா நகர், சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி புவனேஸ்வரி (34). இவர் கடம்பத்தூரில் உள்ள வங்கியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கடம்பத்தூர் நோக்கி திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில இறங்கும் போது தான் புவனேஸ்வரிக்கு நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ராஜேஷ் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
- சிறுமியின் பெற்றோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், கசவ நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ராஜேஷ் (36) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூரில் ஆவின் பால் நிறுவனம் உள்ளது. இன்று அதிகாலை திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பால் நிலையத்தில் இருந்து காக்களூரில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு 7405 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது.
காக்களூர் தொழிற் பேட்டை அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் டேங்கர் லாரியை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த 4100 லிட்டர் பால் வீணாக சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ஆவின் ஊழியர்கள் மற்றொரு டேங்கர் லாரியை வர வழைத்து விபத்துக்குள்ளான லாரியில் இருந்து மீதம் இருந்த பாலை மாற்றி ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
- விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் (45). இவர் மனைவி ஞானேஸ்வரி(36) மகன்கள் ஹரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்றார்.
சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே கார் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென 2 எருமை மாடுகள் வந்தன.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென மாடுகள் மீது மோதியது. அதிவேகத்தில் மோதியதால் கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ரகுநாதன், ஞானேஸ்வரி மற்றும் அவர்களது மகன்கள் அரிகிருஷ்ணன், லோகேஷ் ஆகியோர் காயத்துடன் உயிர்த்தப்பினர்.
மேலும் இந்த விபத்தில் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 எருமை மாடுகளும் இறந்து போனது.
விபத்து காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்:
மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோடையின்போது படிப்படியாக நீர் இருப்பு குறைந்து, கடந்த இரு மாதங்களாக அணைக்கட்டு பகுதி வறண்டு கிடந்தது.
- ஆர்ப்பரித்து செல்லும் உபரிநீரிலும், அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரிலும், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடி வருகின்றனர்.
மீஞ்சூர்:
மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்து உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது அணைக்கட்டு நிரம்பியது.
கோடையின்போது படிப்படியாக நீர் இருப்பு குறைந்து, கடந்த இரு மாதங்களாக அணைக்கட்டு பகுதி வறண்டு கிடந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி முதல், பூண்டி ஏரியில் உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றிற்கு நீர்வரத்து துவங்கியது.
நீர்வரத்து அதிகரித்த நிலையில், சோழவரம் பகுதியில் உள்ள புதுகுப்பம், ஜெகன்னாதபுரம், வன்னிப்பாக்கம் தடுப்பணைகள் நிரம்பின. நேற்று அதிகாலை 4 மணி முதல், வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேறி, எண்ணுார் கடலை நோக்கி பாய்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் உபரிநீரிலும், அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரிலும், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடி வருகின்றனர்.
பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் தினமும் பெய்து வரும் மழையால், இரண்டு மாதங்களுக்கு முன்னரே வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
- கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
- புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. 5 ஏரிகளிலும் மொத்தம் 9,076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 77 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும்.
கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரம் நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் சேர்த்து 7 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 9 டி.எம்.சி.ஆக அதிகரித்து உள்ளது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஒரு மாதத்தில் ஏரிகளில் நீர் இருப்பு 2 டி.எம்.சி அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா நீர் மற்றும், மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்த உயரமான 35 அடியில் 34 அடியை நெருங்கியதால் ஏரியில் இருந்து 2500 கனஅடிவரை உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1020 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2761 மி.கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 16.75 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2359 மி.கனஅடிநீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தண்ணீர் இருப்பு 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 21.79 அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3064 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 418மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 374 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 474 மி.கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- பாரம்பரியமிக்க தமிழ்நாடு சிலம்ப கழகத்தை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
- தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள், சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லி:
தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் கேலோ உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் சிலம்ப வீரர்கள் நடுவர்களாக பங்குபெற நடுவர்கள் தேர்வு மற்றும் பயிற்சி முகாம் சென்னை மவுலிவாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலம்ப கலையை ஊக்குவிக்க தனியாக பாடப்பிரிவினை ஏற்படுத்தி அரசு சார்பில் பயிற்றுவிக்க அரசு பள்ளிகளில், சிலம்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
பாரம்பரியமிக்க தமிழ்நாடு சிலம்ப கழகத்தை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். சர்வதேச, தேசிய, மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகளை நடுவர்களாக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் சாமி , அகத்தியா ஞானபண்டிதன், கோபால், முருகக்கனி, உதயசூரியன் உள்ளிட்ட தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள், சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கி உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
மொத்த உயரமான 35 அடியில் 33 அடியை தாண்டியதால் பூண்டி ஏரியில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்தும் 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்தது.
தற்போது மழை அதிகம் இல்லாததால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 1200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் மூலம் 630 கனஅடியும், உபரிநீராக 500 கனஅடியும் செல்கிறது.
பூண்டி ஏரியின் நீர் மட்டம் 34 அடியை(மொத்த உயரம் 35 அடி) நெருங்கி உள்ளது. ஏரியில் தற்போது 33.85 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. விரைவில் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2776 மி. கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 21.73 அடியாக பதிவானது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
புழல் ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 16.66 அடியாக உள்ளது. ஏரிக்கு 371 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 2342 மி.கனஅடி தண்ணீர் ஏரியில் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.






