என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த காரனோடை, லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (வயது25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு காரனோடை பஜாரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென சரத்பாபுவை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்பாபு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் ஓட, ஓட விரட்டி சரத்பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கொலையுண்ட சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கெலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் யுவன்சங்கர் ராஜா (வயது22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவீனா(21) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து யுவன்சங்கர் ராஜாவும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இணையத்தளத்தில் வெளியான வேலைவாய்ப்பு மூலம் திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு, பரேஸ்புரம் பகுதியில் உள்ள முயல் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். கணவன்-மனைவி இருவரும் முயல் பண்ணையில் பராமரிப்பு பணி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தரைக்கிணற்றில் உள்ள தண்ணீரில் யுவன் சங்கர் ராஜா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி யுவன் சங்கர்ராஜா உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிணற்றுக்குள் யுவன்சங்கர் ராஜா விழுந்தபோது அவரை காப்பாற்ற மனைவி நவீனா முயன்றதாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவரும் இரவு நேரத்தில் அவ்வழியாக வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று காலை 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.04 அடியாக பதிவானது. ஏரியில் 3130 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தற்போது பலத்த மழை இல்லை என்றாலும் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பை ஒரு அடி குறைத்து 21 அடிக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஏரியில் நீர் இருப்பை 22 அடியில் வைத்திருந்தால் பருவமழை தீவிரம் அடையும்போது உடனடியாக உபரி நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஏரியில் நீர் இருப்பை 21 அடியாக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏரியில் இருந்து தொடர்ந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது. பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தாசில்தார் மதிவாணன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஒன்றியத் திற்குட்பட்ட ஆங்காடு, சோழவரம், நல்லூர், பகுதி களில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் கால்வாய் அடைப்புகளால் வெளியே செல்ல முடியாமல் சோழவரம் செங்காளம்மன் கோவில் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சோழவரம் பகுதியில் வீடுகளில் எடுக்கப்படும் கழிவு நீரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகளில் வருவதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் மழை நீரில் கழிவுநீர் கலந்து ஊருக்குள் செல்வதாகவும் சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து தேசிய நெஞ்சாலையில் கழிவு நீரை கொட்டும் லாரி, டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தாசில்தார் மதிவாணன் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கீழே விழுந்து கிடந்த பொருட்களை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சேகரித்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நேற்று காலை வானத்தில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது.

    பலூன் போன்று இருந்த அதன் அருகில் மர்ம பொருள் ஒன்று கிடந்தது. அதில் இருந்து சிக்னல் வந்தபடி இருந்தது. மேலும் சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததை கண்டு கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆர். கே. பேட்டை போலீசார் விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அந்த மர்ம பொருளில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் போன் நம்பரும் இருந்தது.

    அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்தபோது அந்த மர்ம பொருள் வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது.

    மீட்கப்ட்ட சிறிய பெட்டி பல்வேறு பகுதியில் வெப்பநிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருக்கும் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டது.

    இதையடுத்து அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சேகரித்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    • மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடயே பெரும் பரபரப்பு காணப்பட்டது.

    பொன்னேரி:

    செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு பகுதிக்கு மாநகர பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மாலை மாநகர பஸ் செங்குன்றத்திலிருந்து பழவேற்காட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பழவேற்காடு அருகேயுள்ள பிரளயம் பாக்கம் பகுதியில் வந்த போது பஸ் ஜன்னல் கண்ணாடி மீது மர்ம நபர் கல் வீசி தாக்கினார்.

    இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். இதையடுத்து அந்த பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் மாற்று வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பஸ் கண்ணாடியை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பழவேற்காட்டிற்கு வந்து கொண்டிருந்த சக பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பழவேற்காடு பகுதிக்கு வரும் மாநகர பஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இதே போன்று சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், திருப்பாலை வனம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் இரவில் தங்கும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தங்கும் அறை இல்லை எனவும், பஸ்சில் கொசு தொல்லையுடன் தூங்குவதாகவும், போதிய பாதுகாப்பு இல்லை எனவும், டிக்கெட் வசூல் பணத்தை வைப்பதற்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடயே பெரும் பரபரப்பு காணப்பட்டது.

    • ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    செங்குன்றம்:

    சென்னை புழல் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலும், அதன் அருகே தனியார் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகின்றன. நேற்று இரவு ஓட்டலில் வியாபாரத்தை முடித்துவிட்டு அதன் உரிமையாளர் பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று அதிகாலை தனியார் ஏ.டி.எம். மையமும், ஓட்டலும் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏ.டி.எம். எந்திரம், ஓட்டலில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே எந்திரத்தில் இருந்து தீயில் கருகிய பணத்தின் மதிப்பு தெரியவரும்.

    இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி ஏ.டி.எம். மையத்தில் பற்றிய தீ அருகில் இருந்த ஓட்டலுக்கு பரவியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    • பூமிநாதன் மோட்டார் சைக்கிள் டயர் திடீரென பஞ்சர் ஆனது.
    • பூமிநாதன் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ராமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன்(34). இவர் திருவள்ளூர் உழவர் சந்தை அருகில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு காக்களூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சர் ஆனது.

    இதையடுத்து அவர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டயர் பஞ்சரை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென பூமிநாதனின் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி கவரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து பூமிநாதன் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தது முதல் கொள்ளையர்கள் பூமிநாதனை பின் தொடர்ந்து வந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.
    • கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது42). ரமணய்யா (38). தொழிலாளர்கள். ரமேஷ் மரங்களை வெட்டி அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இன்று காலை ரமேஷ் வேலைக்காக ரமணய்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சின்ன புலியூர் அருகே உள்ள ஒரு தைலம் மர தோட்டத்திற்கு மரத்தைப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது ஏற்கனவே அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து கிடந்தது.

    இதனை அறியாமல் சென்றபோது ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், கவரப்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காற்றுடன் மழை பெய்து இருக்கிறது.

    இந்த நிலையில் அதிகாலை மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து விழுந்து உள்ளது. இதனை கவனிக்காமல் சென்றபோது அதில் சிக்கி ரமேசும், ரமணய்யாவும் பலியாகி விட்டனர்.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்களில் உள்ள வயர்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதனை சரிபார்த்து மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர்.
    • பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிமில் 1998-2000 ல் பயின்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர். பின்னர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியங்களை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் ஆண்டுதோறும் சந்திப்பு நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்வதாகவும் மாணவர்கள் தனது நண்பர்களை 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் இலட்சுமணபெருமாள், மோகனசுந்தரம், இளவரசன், தேவகி, தமிழரசி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மாணவர்கள் முன்னதாக தாங்கள் பயின்ற பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    • திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.
    • ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது.

    இது 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இது நான்கு மதகுகள், 2 கலங்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும்.

    இந்த ஏரியை சுற்றி சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்று வட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டும் வந்தது.

    இந்நிலையில் காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, கட்டிடங்கள், கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரியின் பரப்பளவு மெல்ல, மெல்ல சுருங்கி வருகிறது. மேலும் ஏரிக் கரையோரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சாலையோரத்தில் உணவு விடுதி நடத்துபவர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.

    இதேபோல் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் மூலம் காக்களூர் ஏரிக்கு திறந்து விடுவதால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசு அடையும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்நிலையில் காக்களூர் ஏரியின் கரைகள் பரிதாபமான நிலையில் உள்ளன. இந்த ஏரியில் அல்லி செடிகள், வேலி காத்தான் முள் செடிகள், பாளை செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால் அதில் இருந்த மதகுகள் கலங்கள் இருந்த இடமே தெரியாத நிலை உள்ளது. மேலும் கரைகளும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைதீவிரம் அடைந்தால் நீர்வரத்து அதிகமாகி காக்களூர் ஏரியின் கரைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வெள்ள அபாயம் ஏற்படும் முன்பு கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரும்பாலும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 100 அடியாக உயர்ந்துள்ளது.

    எனவே மாவட்ட தலை நகரில் உள்ள காக்களூர் ஏரியை தூர் வாரி, அடர்ந்து வளர்ந்துள்ள அல்லி செடி, பாளை செடி, வேலிக்காத்தான் முள்செடி ஆகியவற்றை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

    • மணிகண்டனின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோனைக்காக அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பினர்.
    • கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியாசக்தி மற்றும் போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணி கண்டன் (வயது16). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த சாந்தி இறந்துபோனார்.

    இதைத்தொடர்ந்து ராஜி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மணி கண்டன் திடீரென இறந்து போனதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ராஜி தனது மகன் இறந்தது பற்றி அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டின் பின்புறத்திலேயே குழிதோண்டி புதைத்துவிட்டார்.

    இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் கவரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இன்று காலை மணிகண்டனின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோனைக்காக அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பினர்.

    நேற்று இரவு ராஜிக்கும், அவரது மகன் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னரே மணிகண்டன் இறந்து உள்ளார். பின்னர் மணிகண்டனின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்திலேயே ராஜி புதைத்து இருப்பது தெரிந்தது.

    எனவே மோதலில் மணி கண்டன் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போன்று இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மகன் மணி கண்டன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் உடலை புதைத்து விட்டதாக ராஜி கூறிவருகிறார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியாசக்தி மற்றும் போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த மகனின் உடலை யாருக்கும் தெரியாமல் தந்தையே வீட்டின் பின்பகுதியில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×