search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள அபாயம் ஏற்படும் முன்பு காக்களூர் ஏரிக்கரை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    வெள்ள அபாயம் ஏற்படும் முன்பு காக்களூர் ஏரிக்கரை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.
    • ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது.

    இது 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இது நான்கு மதகுகள், 2 கலங்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும்.

    இந்த ஏரியை சுற்றி சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்று வட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டும் வந்தது.

    இந்நிலையில் காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, கட்டிடங்கள், கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரியின் பரப்பளவு மெல்ல, மெல்ல சுருங்கி வருகிறது. மேலும் ஏரிக் கரையோரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சாலையோரத்தில் உணவு விடுதி நடத்துபவர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.

    இதேபோல் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் மூலம் காக்களூர் ஏரிக்கு திறந்து விடுவதால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசு அடையும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்நிலையில் காக்களூர் ஏரியின் கரைகள் பரிதாபமான நிலையில் உள்ளன. இந்த ஏரியில் அல்லி செடிகள், வேலி காத்தான் முள் செடிகள், பாளை செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால் அதில் இருந்த மதகுகள் கலங்கள் இருந்த இடமே தெரியாத நிலை உள்ளது. மேலும் கரைகளும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைதீவிரம் அடைந்தால் நீர்வரத்து அதிகமாகி காக்களூர் ஏரியின் கரைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வெள்ள அபாயம் ஏற்படும் முன்பு கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரும்பாலும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 100 அடியாக உயர்ந்துள்ளது.

    எனவே மாவட்ட தலை நகரில் உள்ள காக்களூர் ஏரியை தூர் வாரி, அடர்ந்து வளர்ந்துள்ள அல்லி செடி, பாளை செடி, வேலிக்காத்தான் முள்செடி ஆகியவற்றை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

    Next Story
    ×