என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரமேஷ் - ரமணய்யா
மின்கம்பி அறுந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பலி
- ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.
- கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது42). ரமணய்யா (38). தொழிலாளர்கள். ரமேஷ் மரங்களை வெட்டி அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இன்று காலை ரமேஷ் வேலைக்காக ரமணய்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சின்ன புலியூர் அருகே உள்ள ஒரு தைலம் மர தோட்டத்திற்கு மரத்தைப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது ஏற்கனவே அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து கிடந்தது.
இதனை அறியாமல் சென்றபோது ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், கவரப்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காற்றுடன் மழை பெய்து இருக்கிறது.
இந்த நிலையில் அதிகாலை மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து விழுந்து உள்ளது. இதனை கவனிக்காமல் சென்றபோது அதில் சிக்கி ரமேசும், ரமணய்யாவும் பலியாகி விட்டனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்களில் உள்ள வயர்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதனை சரிபார்த்து மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






