என் மலர்
திருவள்ளூர்
- பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார்.
- குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது.
திருவேற்காடு:
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.
இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.
தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார்.
கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன.
- குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னைக்கு கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண்ணூர், திருவொற்றியூர் வழியாக இரு மார்க்கத்திலும் தினமும் 40-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்கள் வந்து செல்கின்றன. பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னேரி ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் குடும்பத்துடன் அங்கு அட்டகாசம் செய்து வருகின்றன. ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளை ரெயில் நிலையத்திற்கு நுழையும் போதே வாசல் அருகில் நின்று அச்சுறுத்துகின்றன. பயணிகள் பைகளில் கொண்டு வரும் பழங்கள், உணவு பொருட்களை பறித்து சென்று விடுகின்றன. இதனை தடுக்க முயன்றால் பயணிகளை குரங்குகள் கடிக்க பாய்கின்றன.
இதேபோல் பழ வியாபாரிகள் கூடையில் கொண்டு வரும் பழங்களை குரங்குகள் கூட்டமாக வந்து எடுத்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குரங்குகள் துரத்தும் போது பயணிகள் சிலர் தவறி கிழே விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே பொன்னேரி ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 797 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி அனைத்து குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 627 மி.கனஅடி (8.6 டி.எம்.சி)தண்ணீர் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 717 மி.கனஅடி (9.7டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி. தண்ணீர் குறைவாகவே உள்ளது.
எனினும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு பெற வேண்டிய தண்ணீர் இன்னும் பெறவில்லை. எனவே வரும் மாதங்களில் கிருஷ்ண நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் தற்போது 452 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சோழவரம் ஏரியில் இருந்து 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் தற்போது 2505 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு 189 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2166 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 303 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்கு 137 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 456 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (60). இவரது மனைவி தேவி. இவர் தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு அருகே சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அப்போது சாலை வழக்கத்தை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் கேட்டார். மேலும் சாலை உயரமாக இருந்தால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருக்கும் என்று கூறினார். இதனால் அங்கிருந்த ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் கோபத்தில் தயாளன் மீது பாய்ந்து அவரது இடது காதை கடித்து துண்டாக துப்பினார். இதில் வலிதாங்க முடியாத தயாளன் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துண்டான காதையும் ஐஸ்கட்டி நிரப்பிய டப்பாவில் வைத்து எடுத்து சென்றனர். அங்கு தயாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
- ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
- சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இதன் அருகே ரெயில்வே கேட் உள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் வேப்பம்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி திறந்து இருந்த இந்த ரெயில்வேகேட்டை தாண்டி செல்ல முயன்றது.
ரெயில்வே கேட்டில் தண்டவாளப்பகுதியில் சென்ற போது திடீரென லாரி பழுதாகி நின்றது. லாரியை மேலும் இயக்க முடியாததால் தண்டவாளத்திலேயே நின்றது.
இதனால் அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரெயில்வே கேட்டை மூடமுடியாத நிலையும் உருவானது.
தொடர்ந்து சென்னைகடற்கரை-திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர்-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ரெயில்கள் வந்து கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ரெயில்வே தண்டவாளத்தில் இருந்த லாரியை தள்ளி வெளியேற்றினர். இதன் பின்னரே ரெயில்வே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது. இதனால் ரெயில்பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில்வே கேட்டில் லாரி பழுதாகி நின்றதும் உடனடியாக ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடி நீர்ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக உள்ளது.
- புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு இருப்பு 75 சதவீதமாக சரிந்து உள்ளது. 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 931 மில்லியன் கனஅடிதண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சிக்கும் மேல் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரும்போது குடிநீர் தேவை அதிகரித்து ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறையும். ஏற்கனவே கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தண்ணீர் முழுவதும் வற்றியதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 745 மி.கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2404 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645மி.கனஅடியில் 3064 மி.கனஅடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில்465 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.
இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
- நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (வயது63). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மனைவி நிர்மலா. இவர்களது ஒரே மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.
இன்று காலை கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரில் மகளை விட்டு விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை ரவிக்குமார் ஓட்டினார். மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ரவிக்குமாரும், நிர்மலாவும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான ரவிக்குமார் 1991-96-ம் ஆண்டில் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது மனைவி நிர்மலாவும் அதே ஆண்டில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். ரவிக்குமாரின் சொந்த ஊர் மணலிபுதுநகர் அடுத்த நா.பாளையம் ஆகும். அவர் நெஞ்சுவலிக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார். ரவிக்குமார் கடைசியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
- ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்-வேண்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் குமார். இவரது மகன் விக்னேஷ்குமார்-உமா மகேஸ்வரி திருமணம் பொன்னேரியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
மணமக்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும். கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம். மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டு மொத்தமாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடுமையாக ஏறியுள்ளது. பூண்டு விலை தற்போது சரிந்து வருகிறது.
வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும். கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 24 மணி நேரம் கடையை திறக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் போலீசார் கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பேரமைப்பு தலைவர் வில்லியம்ஸ், நந்தன், எஸ்.வி, முருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பால்ராஜ், கேசவன், ரமேஷ் கண்ணன், செங்குன்றம் வியாபாரிகள் சங்கதலைவர் செல்வகுமார், செல்லதுரை, அப்துல், காதர், வேலு, ஆச்சாரி, பால் பாண்டி, பாலகிருஷ்ணன், அஜிஸ், யுவராஜ், திராஜிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
- புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.
திருவள்ளூர்:
தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் புத்தக கண்காட்சி நடை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த கண்காட்சி மார்ச் 4-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்கட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கின்றன.

இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் தினமும் சிந்தனையை தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
மேலும் புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.
- சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
- ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.
ஊத்துக்கோட்டை:
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.
மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
- திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
- மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.
சென்னை:
சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,
திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,
வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.
பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.
மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.
மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.
கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






