என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
    • தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

     திருப்பூர்:

    திருமூா்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு வருகிற 20-ந் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ளது. தொகுப்பு அணைகளில் நீா் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று உயிா் நீா் மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

    இது குறித்து பல்லடம் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் எஸ்.ஆனந்த் பாலதண்டபாணி கூறியதாவது:-

    பல்லடம் பகுதியில் 48 கிலோ மீட்டா் தொலைவுக்கு பிஏபி., பாசன வாய்க்கால் உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கடை மடை வரை தடையின்றி செல்வதற்காக வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீா் கடை மடை பகுதிகளான வெள்ளக்கோவில், குண்டடம் வரை முறையாக செல்வதையும், தண்ணீா் திருட்டையும் அந்தந்தப் பகுதி பாசன சபைத் தலைவா்கள் கண்காணிக்க வேண்டும். வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரைத் திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்ணீா் திருட்டை கண்காணிக்கும் வகையில் காவல் துறை, வருவாய் துறை, நீா்வளத் துறை மற்றும் மின்சாரத் துறை அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றாா். 

    • ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
    • உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது வடுகபாளையம்புதூரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கிராம உதவியாளர் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்ட அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்தப் பிரமுகரிடம் 2 தவணைகளாக ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்து 10 மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் அவரிடம் பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.

    அவர் பணம் என்னிடம் இல்லை . திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அமைச்சர் ஒருவரிடம் கொடுத்து வேலைக்காக பேசிக்கொண்டு உள்ளார் என கூறியுள்ளார். மீண்டும், மீண்டும் பணம் கேட்கவே பணத்தைத் திருப்பித் தர முடியாது , உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் மற்றும் பணம் பெற்றவர் பேசிக் கொள்ளும் ஆடியோ பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பல்லடம் சுற்றுவட்டரா பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
    • அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே இருந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் காரணமாக, அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் சேதமடைந்தன. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆட்டோக்கள் மீது விழுந்த மரத்தை அகற்றினர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மற்றொரு மரம் நேற்று முன்தினம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
    • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.
    • சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    உடுமலை,செப்.12-

    உடுமலை அடுத்த தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை 13ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மின்தடை செய்யப்படக்கூடிய இடங்கள் வருமாறு:- தேவனூர் புதூர் ,கரட்டூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம் ,ஆண்டியூர். பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம் , வலையபாளையம் .எஸ் .நல்லூர் ,அர்த்தநாரி பாளையம் , புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து காப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம்.
    • 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து, திருவிழா, ஊர்வலம், பொதுக்கூட்டம் மற்றும் பண்டிகை காலங்களின்போது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற போக்குவரத்து காப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம். 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பூர் மாநகர எல்லைக்குள் வசிக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

    போக்குவரத்து காப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாநகரம் வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93339 01234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 382 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையாளர் (கலால்) ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    திருப்பூர்:

    பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ந் தேதி முதல் 27ந் தேதி வரை, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு வழக்கமாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    ஆனால் தற்போது நடக்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து வரும் வினாத்தாளை அந்தந்த மாவட்டங்களில் நகலெடுத்து தேர்வு நாளன்று காலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், காலாண்டு தேர்வை பொதுவினாத்தாள் முறையில் நடத்துவதன் மூலம், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை கண்டறியலாம்.

    அங்குள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்தே, பொது வினாத்தாள் முறையில் இனிவரும் தேர்வுகளை நடத்த வேண்டும்.

    அப்போது தான் மாணவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்க முடியும் என்றனர்.

    • இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது.
    • ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பூர்,:

    தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநிலத்தவருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழக கார்டுதாரர்கள், எந்த மாநில ரேஷன் கடையிலும் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநில கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

    தமிழக அரசு மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்ய, தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்களின் வீடுகளில் இந்தாண்டு ஜூலையில் விண்ணப்பம் வழங்கியது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டன.

    இதற்கு ரேஷன் கடைகளில் இருந்த விரல் ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் அம்மாத இறுதியில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.ஆகஸ்டில் இருந்து மீண்டும் பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் பல கடைகளில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், பிற மாநிலத்தவருக்கு வழங்குவதற்கு ஏற்ப கூடுதலாக பொருட்களை அனுப்புவதில்லை. அதனால் அவர்களுக்கு வினியோகிக்க முடிவதில்லை என்றனர்.

    உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையில் உள்ளதால், ரேஷன் கார்டை குடும்பத்தினரிடம் வழங்கி விட்டு வந்துள்ளனர். இதனால் பலர் தமிழகத்தில் பொருட்களை வாங்குவதில்லை.ஜூலையில் 381, ஆகஸ்டில் 615,இம்மாதத்தில் 90 பேர் பொருட்களை வாங்கியுள்ளனர். பிற மாநிலத்தவருக்கு பொருட்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது
    • காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வினாடிக்கு 1150 கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்கு திருப்பி விடவில்லை

    குடிமங்கலம், செப். 12-

    பி.ஏ.பி. பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது

    பி.ஏ.பி. விவசாயிகள் நல சங்கம் திருப்பூர் மாவட்ட உப்பாறுவிவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் கோட்டமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்குரிய நீரியல் விவரங்களை வெளியிடாமல் தண்ணீர் திருட்டை ஒழித்திடாமல் ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேற்றாமலேயே வெளியேற்றப்பட்டதாக போலியான பதிவேடுகள் பராமரித்து உள்ளனர். மடைகள் அனைத்திற்கும் ஒரு சுற்றுக்கு ஏழு நாட்கள் தண்ணீர் வழங்காமல் சில இடங்களில் 7 நாட்கள், சில இடங்களில், 5 நாட்கள் சில இடங்களில், 3 நாட்கள் என்று பாரபட்சமாக தண்ணீர் வழங்கப்படுவது ஏன். ஒவ்வொரு கால்வாயிலும் ஏற்படும் நீரிழப்பு விவரங்களை வெளியிட வேண்டும்.

    காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வினாடிக்கு 1150 கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்கு திருப்பி விடவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு கிடைக்க பெற்றும் ஒவ்வொரு வருடமும் திருமூர்த்தி அணைக்கு 20 டிஎம்சி., நீர்வரத்து இருந்துள்ள நிலையில் பி.ஏ.பி. ஆயக்கட்டில் பல ஆயிரக்கணக்கான நிலங்கள் வேளாண்மை அல்லாத மாற்று பயன்பாட்டிற்கு பரிவர்த்தனையாகியுள்ளது.

    திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் புதிய ஆயகட்டுமடைகளுக்கு சமச்சீரான அளவில் தண்ணீர் வழங்குவதை ஒரு வார காலத்தில் முடிவு செய்து புதிய நீரியல் கணக்கீடுகளை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் பி.ஏ.பி. 4-ம் மண்டலத்திற்கு நீர் திறப்பு செய்ய திருமூர்த்தி அணைக்கு வருகை தரும் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டத்தில் விவேகானந்தன், ரகுபதி, விஜயசேகர் ரத்தினசாமி, ராஜேஷ் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார்.
    • 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி 19-வது வார்டு பகுதியான மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார். பிறகு சர்ச் வீதியில் அடிப்படை வசதிகள் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த அவர் கூறுகையில், தாராபுரம் மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் தொடங்கப்பட்டு பணிகள் வெகு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முழு முயற்சியுடன் செயல்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    அதே போன்று தாராபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.நாகராஜ், 19-வது வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.  

    ×