என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பி.ஏ.பி. 4-ம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
- 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது
- காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வினாடிக்கு 1150 கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்கு திருப்பி விடவில்லை
குடிமங்கலம், செப். 12-
பி.ஏ.பி. பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது
பி.ஏ.பி. விவசாயிகள் நல சங்கம் திருப்பூர் மாவட்ட உப்பாறுவிவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் கோட்டமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குரிய நீரியல் விவரங்களை வெளியிடாமல் தண்ணீர் திருட்டை ஒழித்திடாமல் ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேற்றாமலேயே வெளியேற்றப்பட்டதாக போலியான பதிவேடுகள் பராமரித்து உள்ளனர். மடைகள் அனைத்திற்கும் ஒரு சுற்றுக்கு ஏழு நாட்கள் தண்ணீர் வழங்காமல் சில இடங்களில் 7 நாட்கள், சில இடங்களில், 5 நாட்கள் சில இடங்களில், 3 நாட்கள் என்று பாரபட்சமாக தண்ணீர் வழங்கப்படுவது ஏன். ஒவ்வொரு கால்வாயிலும் ஏற்படும் நீரிழப்பு விவரங்களை வெளியிட வேண்டும்.
காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வினாடிக்கு 1150 கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்கு திருப்பி விடவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு கிடைக்க பெற்றும் ஒவ்வொரு வருடமும் திருமூர்த்தி அணைக்கு 20 டிஎம்சி., நீர்வரத்து இருந்துள்ள நிலையில் பி.ஏ.பி. ஆயக்கட்டில் பல ஆயிரக்கணக்கான நிலங்கள் வேளாண்மை அல்லாத மாற்று பயன்பாட்டிற்கு பரிவர்த்தனையாகியுள்ளது.
திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் புதிய ஆயகட்டுமடைகளுக்கு சமச்சீரான அளவில் தண்ணீர் வழங்குவதை ஒரு வார காலத்தில் முடிவு செய்து புதிய நீரியல் கணக்கீடுகளை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் பி.ஏ.பி. 4-ம் மண்டலத்திற்கு நீர் திறப்பு செய்ய திருமூர்த்தி அணைக்கு வருகை தரும் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் விவேகானந்தன், ரகுபதி, விஜயசேகர் ரத்தினசாமி, ராஜேஷ் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.






