என் மலர்
திருப்பூர்
- தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் நடைபெற்றது.
- ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.
அவிநாசி:
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.
இதில், கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இசிஜி, எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்துகொண்டனா்.
மேலும், ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் சாந்தி, மாவட்ட செயலாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ரமேஷ் குமாா், மாவட்ட, வட்டார கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு பல்லடம்,திருப்பூர்,கோவை பகுதிக்கு செல்வோரிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
பல்லடம்:
பல்லடம் வட்டாரம் கரடிவாவி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பல்லடம்,அல்லது சூலூர் பகுதிகளில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர வேண்டும். இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பொது மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனை போக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் கூறியதாவது :-
கரடிவாவி ஊராட்சிபகுதியில் பொது மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு பல்லடம்,அல்லது சூலூர் பகுதிகளில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர வேண்டும்.இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.மக்கள் சிரமத்தை போக்குவதற்காக தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் கரடிவாவி மற்றும் அருகே உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்படும். சாலை விபத்தில் காயம் அடைபவர்கள் மற்றும் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வோருக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அதே சமயம் கரடிவாவியில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு பல்லடம்,திருப்பூர்,கோவை பகுதிக்கு செல்வோரிடம் தூரத்திற்கு ஏற்ப குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
இது லாபம் நோக்கம் இல்லாத முற்றிலும் மக்கள் சேவை பணியாகும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 9171080108 என்ற செல்போன் எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். விரைவில் அமரர் ஊர்தி சேவை தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
உடுமலை:
உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவை வருவாய் துறையினரால் அமராவதி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- தொழிலாளர்களிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.
- கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல்லடம்:
பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் தங்கராஜ். இவரது நிறுவனத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 3 ஆசாமிகள் நுழைந்தனர். அவர்கள் "நாங்கள் போலீஸ்காரர்கள் என்றும், கஞ்சா உள்ளதா? என சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி தொழிலாளர்களை மிரட்டினர். மது போதையில் இருந்த அந்த ஆசாமிகள், தொழிலாளர்களின் அறைக்குள் நுழைந்து தொழிலாளர்களிடம் இருந்து ரூ. 15 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த தங்கராஜ் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் மகன் பாண்டியன் (வயது 22), சேடபாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் கமலக்கண்ணன் (22) மற்றும் கரைப்புதூரை சேர்ந்த குப்புசாமி மகன் குரு (27) என தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் போலீஸ் என்று கூறி வடமாநில தொழிலாளிகளிடம் பணம் மற்றும் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் பாண்டியன் என்பவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளதாக தெரிவித்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அரசியல் பேசுவது என்பது அதிகரித்துள்ளது.
- அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்துரிமை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட காங்கயம் அருகே படியூர் தொட்டிப்பாளையத்தில் மேற்கு மண்டல கழகத்தின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது.
50 சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள். 7 வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் 14 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அரசியல் பேசுவது என்பது அதிகரித்துள்ளது. யார் அதிகம் அரசியல் பேசுவது என்று அவர்களுக்குள் போட்டி நடத்தும் வகையில் கவர்னர்கள் பேசுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடுநிலையாக இருக்கக்கூடிய கவர்னர்கள் இப்படி இருப்பது கண்டிக்கத்தக்க செயல்.
ஆ.ராசா சனாதனத்தை எதிர்க்கிறார். அவரோடு விவாதிக்க தயார் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது அவர் அரசியலில் ஈடுபடுகிறார் என்பதை காட்டுகிறது. அவர் நிதானம் இழந்து செயல்படுகிறார்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்துரிமை உள்ளது. அதை கருத்தால் எதிர்கொள்ளாமல் உருவ பொம்மையை எரிப்பது, தலையை சீவி விடுவேன் என மிரட்டுவது கண்டனத்துக்குரியது. அதற்கு தகுந்த பாடம் புகட்ட தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது. பீக் ஹவர் கட்டணம் குறித்து மின்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர்.
திருப்பூர்:
அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.
இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
- தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.
- நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும்.
உடுமலை:
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குகிறது. தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது சுகாதாரத்துறை தற்போதே தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வேண்டும். மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு சீராக இருப்பதை ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவமனை வளாகம், காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வினியோகத்தின் தரத்தை உறுதி செய்வதுடன், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கட்டாயம் ஆராய வேண்டும்.
சுகாதார மாவட்டம், வட்டாரங்கள் வாரியாக விரைவு சிகிச்சை குழு, கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
பருவமழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்று குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து, காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
நடமாடும் மருத்துவக்குழு மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டுமென பல்வேறு வழிகாட்டுதல் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது.
- 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது.
திருப்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்தாமல் விசைத்தறியாளர்கள் போராடினர்.
அதன் பலனாக முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்பட்டது.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலேயே மின் கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த 8 மாதங்களாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் நிலுவை மின் கட்டணத்துக்கு அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், கட்டணம் செலுத்த தவணை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்தும், 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
கடந்த 4 நாட்களாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று தங்களின் நிலுவை கட்டணம் குறித்து விசாரித்து அதை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.
- கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை:
நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை. ஆனாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.
- ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர்.
- சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
தாராபுரம்:
விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி அன்று வருகிறது. அதையொட்டி தாராபுரம், உடுமலை பகுதியில் மண்பாண்ட கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தாராபுரம் உடுமலை ரோடு பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடுவர். அன்றைய தினம் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அதில் காவல் விநாயகர், மோட்டார் வாகன விநாயகர் என பல உருவங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். அன்று விநாயகருக்கு பிடித்தமான கொளுக்கட்டை, அவல்,பொறி மற்றும் இனிப்புகள் படையல் வைத்து பூஜைகள் நடைபெறும். சில இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
பின்னர் அடுத்த நாள் அல்லது 3 நாட்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான விநாயகர் சிலைகள் தற்போது தயாரித்து வருகிறோம். அந்த சிலைகள் அரை அடிமுதல் 3 அடி உயரம் வரை உள்ளதாக தயார் செய்து உள்ளோம். அவற்றிற்கு கண்ணை கவரும் வண்ணங்கள் கொடுத்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- 15-ந் தேதி காலை 11 மணிக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
தாலுகா அளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த கூட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இந்த முறை அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.
அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார்.
- கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர்.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் ( வயது 47). அப்பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். ஆலையின் வளாகத்தில் உள்ள வீட்டில் மனைவி செல்வி (43), மகன்கள் தனுஷ் (20), நிதா்ஷன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.
கடந்த 30-ந்தேதி இரவு குணசேகரன் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளை கும்பல் குணசேகரன் குடும்பத்தினரை கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகை , ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையில் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை (32) சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசாா், அவா் அளித்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35), சூா்யா (27), ஆத்தூரை சோ்ந்த பிரசாந்த் (25), பெத்தநாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகன் (21), சாமிதுரை (46), ஜான் கிருபா (37), விஜயகாந்த் (31), கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த சௌந்தா் (25), செல்வம் (37) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், 3 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 10 பேரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் குணசேகரன் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளி மலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் சேலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொள்ளையடிப்பதற்காக 9 பேரும் 2 கார்களில் காங்கயம் வந்துள்ளனர். குணசேகரன் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கார்களை நிறுத்தி விட்டு நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு கார்களில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காங்கயம் பகுதி சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கார்களை வைத்து ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் பயன்படுத்திய கார்கள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






