search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழிலதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளை: கார்களின் எண்களை வைத்து கொள்ளை கும்பலை மடக்கிய போலீசார்
    X

    தொழிலதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளை: கார்களின் எண்களை வைத்து கொள்ளை கும்பலை மடக்கிய போலீசார்

    • தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார்.
    • கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர்.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் ( வயது 47). அப்பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். ஆலையின் வளாகத்தில் உள்ள வீட்டில் மனைவி செல்வி (43), மகன்கள் தனுஷ் (20), நிதா்ஷன் (14) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

    கடந்த 30-ந்தேதி இரவு குணசேகரன் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளை கும்பல் குணசேகரன் குடும்பத்தினரை கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகை , ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையில் வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த அண்ணாதுரை (32) சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசாா், அவா் அளித்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (35), சூா்யா (27), ஆத்தூரை சோ்ந்த பிரசாந்த் (25), பெத்தநாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகன் (21), சாமிதுரை (46), ஜான் கிருபா (37), விஜயகாந்த் (31), கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையை சோ்ந்த சௌந்தா் (25), செல்வம் (37) ஆகிய 10 பேரை கைது செய்தனா்.

    அவா்களிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், 3 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட 10 பேரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

    தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர் குணசேகரன் வீட்டில் அதிக பணம் மற்றும் நகை இருப்பதை அங்கு வேலை செய்து வந்த வெள்ளி மலையை சோ்ந்த அண்ணாதுரை நோட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் சேலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கொள்ளையடிப்பதற்காக 9 பேரும் 2 கார்களில் காங்கயம் வந்துள்ளனர். குணசேகரன் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கார்களை நிறுத்தி விட்டு நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு கார்களில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காங்கயம் பகுதி சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கார்களை வைத்து ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் பயன்படுத்திய கார்கள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த கார்களின் எண்களை வைத்து போலீசார் கொள்ளையர்களை மடக்கினர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×