என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 24 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 19 பணியாளர்கள் என 43 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    உடுமலை:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்கள் வழங்குதல்,கணினி உதவியாளர்கள் பணி வரன் முறைப்படுத்துதல்.

    ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 24 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 19 பணியாளர்கள் என 43 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • சிலைகள் 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
    • இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    பல்லடம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18 ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக பல்லடம் அருகே உள்ள அலகுமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இங்கு திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கந்த சஷ்டி கவசத்தை போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர்,கொரோனாவை வென்ற விநாயகர், சிவலிங்கத்தை தூக்கி வரும் பாகுபலி விநாயகர், ஆறு கரங்கள் ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி புத்தி என இருவருடன் எழுந்தருளும் விநாயகர், உள்ளிட்ட புதிய வடிவ விநாயகர் சிலைகள் உள்ளன . 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது :-

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர்,கோவை, ஊட்டி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. விநாயகர் சிலைகள் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற ரசாயனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இதனால் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையாது. சுற்றுப்புற சூழல் மாசு அடையும் என்கின்ற நோக்கில் அரசு ரசாயன கலவை மூலம் சிலைகள் தயாரிக்க தடை விதித்தது. தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகித கூழ் மாவு,குச்சி கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கை பொருட்களால் சிலைகளை தயாரித்துள்ளோம். சிலைகளை விசர்ஜனம் செய்யும்போது மிக எளிதில் தண்ணீரில் கரைந்து விடும்.

    இந்த ஆண்டு 3 அடி முதல் 9 அடி வரையிலான சித்தி விநாயகர், பால விநாயகர், சிம்மவிநாயகர் கந்த சஷ்டி கவசம் போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர் உள்பட பல்வேறு புதிய தோற்றங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வாட்டர் கலர் என்னும் இயற்கை வர்ணம் கொண்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. விநாயகர் சிலை குளம், குட்டைகளில் கரைத்தவுடன் அங்கு வாழும் மீன்களுக்கு அவை உணவாகப் போகும் வகையில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    சிலை தயாரிப்பில் எந்த இடத்திலும் ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு அன்னை தமிழைக் காக்க ஆன்மீகம் வளர்ப்போம் என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் 5,000 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலை பிரதிஷ்டை செய்து யாகவேள்வி வழிபாடு நடத்தி ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்து சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

    கடந்த ஆண்டு கோவை கோட்டத்தில் ஐந்தாயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு சிலை பிரதிஷ்டை செய்து பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்தி அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருப்பூர் மாநகரில் 4 நாட்களும் பல்லடத்தில் 3 நாட்களும் பொங்கலூர் பகுதியில் 2 நாட்களும் என விநாயகர்சதுர்த்தி விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உடன் இந்து முன்னணி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் இருந்தார்.

    • மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.
    • கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது:- பல்லடம் உட்கோட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில்,கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதன் மூலம்,குற்றங்களை தடுக்க முடியும். முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில், கண்காணிப்புக் கேமராக்கள், பொருத்தப்படுகின்றன.

    இதன் மூலம், குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.வீடுகளில், ஆட்கள் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும், இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில், அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம், வீடுகளில், திருட்டு, உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.

    சமீபத்தில் நடந்த சில, கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை,வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல், அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
    • இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

    திருப்பூர்:

    பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி மற்றும் -பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில், நடந்த இக்கருத்தரங்கில் நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேசியதாவது:-

    பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. கோழிகளின் இறைச்சி மற்றும் எடை அதிகரிப்புக்காக, ஊசி செலுத்துவது குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

    நமது குழந்தைகளுக்கு, அம்மை நோய் மற்றும் போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவது போல், இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.

    நாட்டுக்கோழிகளில் அதிக சத்து இருப்பதாகவும், பிராய்லர் கோழிகளில் சத்து இல்லை என்றும் மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நாட்டுக்கோழிகள் அதிக நாட்கள் வளரக்கூடியவை. இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது. சத்துக்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருக்கும்.
    • தற்போதைய வானிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய், மடிவீக்க நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை விபரம் வருமாறு:-

    திருப்பூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு.அதிகபட்சம் 30 முதல் 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.

    காலை நேரத்தில் காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலையில் 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல், 16 கி.மீ., வேகத்தில் இருக்கும்.தூரல் மழை மட்டுமே எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள், மண்ணின் ஈரப்பதம் பொறுத்து, நீர் பாசனம் செய்யலாம். வறட்சியான பகுதிகளில், பயிர்க்கழிவு மூடாக்கு பயன்படுத்தி மண் ஈரப்பதத்தை காப்பாற்றலாம்.வாழை மரங்களுக்கு தகுந்த முட்டுக்கொடுக்க வேண்டும்.

    தற்போதைய வானிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய், மடிவீக்க நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.எனவே பால் கறப்பதற்கு முன், பின் மடியை ஒரு சதவீதம் பொட்டாசியம், பெர்மாங்கனேட் கரைசல் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

    • தவிர அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
    • தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால் முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்

    உடுமலை

    நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாதம்தோறும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது காலாண்டுத்தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்க ப்பட்டுள்ளன.

    அதன்படி நடுநிலை மற்றும் உயர்கல்விக்கு வருகிற , 19-ந்தேதி முதல் 27ந் தேதி, 6,7 மற்றும் 8ம் வகுப்புக்கு காலையிலும், 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடக்கவுள்ளது.மேல்நிலைக்கல்வியை பொறுத்தவரை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை 15-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. அவ்வகையில் பிளஸ் 1 வகுப்புக்கு காலையிலும், பிளஸ் 2 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு மாணவர்களுக்கு பள்ளிகளில் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு உரிய ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தேர்வுக்கு முந்தைய நாள் அந்தந்த தேர்வுக்கான வினாத்தாளை பள்ளி தலைமையாசிரியர்கள் எமிஸ் கணக்கு எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வினாத்தாள் மாணவர்களுக்கு தேர்வு நாளில் வழங்கப்படும். தவிர அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் வேறொரு பள்ளியின் எமிஸ் கணக்கை பயன்படுத்தி வினாத்தாளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால் முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ெரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி லக்கேஜ் வைக்குமிடத்தில் அமர்ந்து ரெயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பலர் பயணிக்கின்றனர்.
    • ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ெரயில்களில் முன்பதிவு செய்த படுக்கை வசதி ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பவரை விட முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளில் பயணிப்பவரே எப்போதும் அதிகம். பொதுப்பெட்டி குறைவாக உள்ள ெரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி லக்கேஜ் வைக்குமிடத்தில் அமர்ந்து ரெயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பலர் பயணிக்கின்றனர்.

    பகல் நேரங்களில் தான் நிலை இப்படி என்றால் இரவில் ெரயிலில் பயணிப்போர் இருமடங்கு அதிகம் என்பதால் நிலை இன்னமும் மோசமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றை ெரயில்வே நிர்வாகம் ஆலோசித்துள்ளது.

    அதன்படி பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள படுக்கை வசதி (ஸ்லீப்பர்) பெட்டிகள் முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. பகல் நேர ெரயில்களில் அதிக அளவில் படுக்கை வசதி பெட்டி காலியாக செல்வதால் முதல்கட்டமாக பகல் நேர ெரயில்களில் படுக்கை வசதி பெட்டி முன்பதிவு கலெக் ஷன் குறித்த ஆராயப்பட உள்ளது.

    இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடக்கத்தில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் பல ெரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது பொது பெட்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    சூழலை கருத்தில் கொண்டு ஏ.சி. மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளை பொது பெட்டிகளாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பகல் நேர ெரயில்களில் பயணிகள் குறைவாக உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக ெரயில்கள் எண்ணிக்கை தெரிந்த பின் பொது பெட்டியாக மாற்றப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும்
    • அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.

    ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த 11ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.

    இது குறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    பீக்ஹவர் கட்டணம் ரத்து, நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்துக்கும், தொழில்துறைக்கும், இ-மெயில் அனுப்பி வருகிறோம். சங்கம் சார்பிலும், தனித்தனி உறுப்பினர்களும் அனுப்பி வருகின்றனர். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மட்டுமே, போராட்டம் நடத்துகிறோம்.

    இன்று திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டாக இணைந்து நடைபயணமாக சென்று முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பி உள்ளோம். வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வருகிற 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். அப்போது தொழில்துறையினரை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

    அப்படி இல்லாதபட்சத்தில் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    • பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும்.
    • கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

    காங்கயம்:

    தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான பயிர் சாகுபடியில் முக்கிய பங்கு வகிப்பது யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களாகும். சில நேரங்களில் இந்த உரங்களுக்கான தட்டுப்பாடு இருக்கும். ஆனால் அதைச்சார்ந்து வேறு பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இணை உரப்பிரச்சினை பாடாய்படுத்துகிறது.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்ற விவசாயிகளிடம், விற்பனையாளர்கள் டி.ஏ.பி. ஒரு மூட்டை வேண்டுமெனில் அதே கம்பெனியின் மற்றொரு உரம் ஒரு மூட்டை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.

    இதனால் ஆங்காங்கே விவசாயிகள் உரவிற்பனைக் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினர். அத்துடன் இதுபற்றிய தகவல் வேளாண்மை துறைக்கு தெரிவிக்கப்பட்டு வேளாண்துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி எச்சரிக்கை செய்து வந்தனர்.

    குறிப்பாக வெங்காய சாகுபடி சீசன், மக்காச்சோள சாகுபடி சீசன் தொடங்கிவிட்டால் போதும் இந்த பிரச்சினையும் தொடங்கிவிடும்.

    காங்கயம், தாராபுரம், குண்டடம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பொன்னாபுரம், பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி. அமராவதி தண்ணீரைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். மக்காச்சோளத்திற்கு முதல் உரமாக யூரியா கொடுப்பது வழக்கமாக உள்ளது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்கி யூரியாவின் தேவை அதிகரிக்கும். அப்போது இந்த இணை உரப்பிரச்சினையை உரநிறுவனங்கள் தொடங்கி விடுவர். அதே போல அடுத்த சில மாதங்களில் வெங்காயம் சாகுபடி தொடங்கும் நேரத்தில் டி.ஏ.பி.யின் தேவை அதிகரிக்கும். அப்போதும் இந்த பிரச்சினை தொடங்கிவிடும்.

    இது பற்றி விவசாயிகள் கூறுகையில்,கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு அதிகாரிகள் முன்னதாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது தொடர்பாக உர விற்பனையாளர்கள் கூறுகையில் ,நாங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் ஸ்டாக் எடுக்கும்போதே இணை உரங்களை விற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இல்லையெனில் ஸ்டாக் தர மறுக்கின்றனர். அதனால் வேறு வழியின்றி அந்த உரங்களை வாங்க வேண்டி உள்ளது.

    அதனால் வேளாண்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரவிற்பனையாளர்கள், விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றனர்.

    • 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார்.

    திருப்பூர்

    சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார். இவர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம், பளுதூக்கும்போட்டியில் வெள்ளிப்பதக்கம், கைமல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இதுபோல் திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் அமித்குமார், பளுதூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற ஆயுதப்படை காவலர்கள் விஜயபாண்டி, அமித்குமார் ஆகியோரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    • நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பழ.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கருவலூர் துணை மின் நிலையத்தில் நாளை 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி கடை முழுவதும் எரிந்தது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் பேக்கரியில் இருந்த கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருப்பினும் தீயில் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×