என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
    • புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தில் 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு 25,259 புழு வளர்ப்பு மனைகளில் நாள் தோறும் 10 ஆயிரம் டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில், கோவை, ஈரோடு, தாளவாடி ஆகிய வித்தகங்களில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு இளம்புழு வளர்ப்பு மனைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இங்கு 7 நாட்கள் புழு வளர்க்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 22 நாட்கள் பராமரிக்கப்பட்டு பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறையில் அரசு சார்பில் உற்பத்தி செய்து வழங்கப்படும் முட்டைகள் தரமற்றதாக உள்ளதால் கூடு கட்டும் பருவத்தில் கூடு கட்டாமல் புழுக்கள் திடீரென இறந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் உடுமலை கண்ணமநாயக்கனூர் விவசாயி யோகேஸ்வரனுக்கு சொந்தமான புழு வளர்ப்பு மனையில், ஒரு முட்டை தொகுதிக்கு 550 புழுக்கள் வீதம் 300 முட்டை தொகுதியில் 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

    மேலும் இரு புழு வளர்ப்பு மனைகளில், புழுக்கள் திடீரென இறந்தன. ஆண்டியகவுண்டனூர் பெரிசனம்பட்டியை சேர்ந்த, விவசாயி லோகநாதன் புழு வளர்ப்பு மனையில் கூடு கட்டும் பருவத்தில் இருந்த புழுக்கள் இறந்தன. இங்கு 150 முட்டை தொகுதிகளில் 82 ஆயிரம் புழுக்கள் வரை இறந்துள்ளன.

    எலையமுத்தூர் செல்வராஜ் புழு வளர்ப்பு மனையில், 100 முட்டை தொகுதிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் 55 ஆயிரம் புழுக்கள் வரை இறந்தன. இதனால் 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    தரமற்ற பட்டு புழு முட்டை வினியோகம், இளம்புழு வளர்ப்பு மனை கண்காணிப்பில் அதிகாரிகள் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வீழ்ச்சியடைந்து வருகிறது.ஏறத்தாழ 50 சதவீதம் விவசாயிகள் தற்போது இத்தொழிலை விட்டுச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற முட்டை உற்பத்தி செய்து வினியோகம் செய்வதால் புழுக்கள் கூடு கட்டாமல் திடீரென இறந்து வருகின்றன.

    புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து புழு வளர்ப்பின் போது திடீரென இறப்பதால் ஒவ்வொரு மனைகளிலும் ரூ. 1.50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஒரு பேட்ச் வளர்க்கும் போதும் நஷ்டம் ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்த சில மாதங்களில் பாதித்துள்ளனர். தரமான முட்டை வினியோகிக்கவும், இளம் புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு தரமான புழு வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு விவசாயிகளிடமிருந்து ரூ.290 வசூலிக்கப்பட்டது. 5 மாதமாகியும் இத்தொகையும் உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தி காப்பீடு செய்யவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    காங்கயம்:

    ஆலாம்பாடி, முத்தூர் துைண மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) இந்த துைண மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட நால்ேராடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டு வலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்ே்லரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் முத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளான முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், பாப்பினி, சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பட்டியல் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. 1-1-2024 அன்று 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் வெளியான பிறகு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றம், திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளது. பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6 விண்ணப்பங்கள் 1 லட்சம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெயர் நீக்கத்துக்கான படிவம்-7, முகவரி மாற்றம், சட்டமன்ற தொகுதி மாற்றம், திருத்தப்பணிகளுக்கான படிவம்-8 என மொத்தம் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

    • உரிமம் பெறாத விதை விற்பனையாளா்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது.
    • தகவல் பலகையில் விவசாயிகளுக்கு தெரியும்படி விதை இருப்பு விலை விவரங்களை எழுதி வைக்க வேண்டும்.

    காங்கயம்:

    நெல் விதைகளை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.இது குறித்து, ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் பி.சுமதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கீழ்பவானி வாய்க்கால் பாசனம் பெறும் காங்கயம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட நத்தக்காடையூா், முத்தூா் பகுதிகளில் தற்போது சம்பா பருவத்தில் நெல் பயிரிட ஏற்ற சூழ்நிலை உள்ளது.

    எனவே சான்று பெற்ற நெல் விதைகளை லேபிளுடன் கூடிய பேக்குகளில் வாங்க வேண்டும். விதைகளை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியாா் விதை விற்பனையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அத்துடன் வாங்கும் தேதி, காலாவதி தேதி ஆகியன குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    விதைக்கான ரசீதில் விற்பனையாளா், வாங்குவோா் கையொப்பமிட்டு ரசீது பெற வேண்டும். உரிமம் பெறாத விதை விற்பனையாளா்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது.

    அத்துடன் விதை விற்பனையாளா்கள் இருப்பில் உள்ள விதைகளுக்கான இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்புத்திறன் அறிக்கை பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தகவல் பலகையில் விவசாயிகளுக்கு தெரியும்படி விதை இருப்பு விலை விவரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விதை விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.
    • அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    மடத்துக்குளம்:

    கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் பல விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் விவசாயிகளுக்கு தரமான தென்னங்கன்றுகள் சரியான விலையில் கிடைக்கும் வகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பண்ணையில் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகிக்கும் வகையில் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    தற்போது முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.இந்த ரகத்தை இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.அதனை ஒரு கன்று ரூ. 125 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

    தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகலாம். புதிதாக நடவு செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 2500 தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்தமனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு விவசாயம், விசைத்தறிகூடம் , கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில் பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை. இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே பணிக்கம்பட்டி கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருதரப்பினரிடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
    • தன்னை தாக்கியதாக அரசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமி கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அரசன் (வயது 35). இவரது வீடு அருகே வசிக்கும் ஐயப்பன் ( 24), சதீஷ் ( 23) ஆகியோருக்கும் இடையே கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் அரசனை அவர்கள் இருவரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தாக்கியதாக அரசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஐயப்பன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 67 விவசாயிகள் கலந்து கொண்டு 54,382 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.48.09க்கும், குறைந்தபட்சம் ரூ.43.56க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 67 விவசாயிகள் கலந்து கொண்டு 54,382 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.48.09க்கும், குறைந்தபட்சம் ரூ.43.56க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.24 லட்சத்து 36ஆயிரத்து 879க்கு வணிகம் நடைபெற்றது என்று வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செம்மிபாளையம் வட்டார சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்தினர்.

    இந்த முகாமிற்கு பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர். ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி அனைவரையும் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் கரைப்புதூர் கார்த்திகா மகேஸ்வரன் கணபதி பாளையம் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு மெம்பர்கள், சுகாதாரத் துறையினர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை உதவி செயற்பொறியாளர் பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பூலாங்கிணர் துணை மின் நிலையம் டி.எம்.நகர் பீடருக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மொடக்குப்பட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது.

    அப்போது மின்பாதைகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • முகாம் காலை10மணி முதல் மதியம்1மணி வரை நடைபெற உள்ளது.
    • அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் 100 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    மாற்றத்திறனாளிகள் அடையாள அட்டை, யு.டி.ஐ.டி.-க்கு பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளது.

    ஏற்கனவே 2-வது சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தாராபுரத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அரசின் பிற நலத்திட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெற ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றுகளுடனும், மருத்துவ சிகிச்சை பெற்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் மார்பளவு புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

    அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தனியார் நிறுவனம் தூய்மைப்பணிக்கு, அகற்றப்படும் குப்பை கழிவுகளின் டன் கணக்கீடு அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளது.மாநகராட்சி பகுதியில் முழுமையாக குப்பை கழிவுகள் சேகரித்து அவற்றை முறைப்படி அழிக்கும் வரையிலான முழுமையான பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, தற்போது வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இப்பணிக்கு இதற்கு முன்னர் மாநகராட்சி பயன்படுத்திய நிர்வாகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தபடவுள்ளது. மேலும், வார்டு பகுதியில் தூய்மைப்பணிக்கு உரிய எண்ணிக்கையிலான ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல் நிறுவனம் நடத்திய சோதனை அடிப்படையிலான தூய்மைப் பணி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று முதல் முழு வீச்சில் தனியார் நிறுவனம் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி முழுமையாக தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களை நிறுவனம் முழுமையாக நியமித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 685 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

    ×