என் மலர்
திருப்பூர்
- தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது
- அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும்
தாராபுரம்
தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுக்களை பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும்.
கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்று 7 பேர் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காங்கயம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த ஈஸ்வரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக ஈ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பாலவிக்னேஷ் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக தலைமையிடத்துக்கு துணை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவக்குமார் சாலை மேம்பாட்டு திட்ட தனிதாசில்தார் அலுவலக துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் அவினாசி மண்டல துணை தாசில்தாராக இருந்த சாந்தி மீண்டும் அதே இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வசந்தா மீண்டும் அதே இடத்திலும், மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராக இருந்த வளர்மதி மீண்டும் அதே இடத்திலும், தாராபுரம் மண்டல துணை துணை தாசில்தாராக இருந்த மகேஸ்வரி மீண்டும் அதே இடத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- சிலைக்கு 5 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
- ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப் பட்டன.
திருப்பூர்:
விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ் தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் ராஜவேல், வசந்தகுமாா், அம்பிகா, சக்திவேல், சக்திவேல், தினகரன், காவல் உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விநாயகா் சதுா்த்தி விழாவில் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்த இடங்களை தவிர வேறு இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், ஒலிபெருக்கி வைக்க வேண்டும். காலை, மாலை என 2 மணி நேரம் அனுமதித்த சப்தத்துடன் உபயோகிக்க வேண்டும். சிலைகளை பிரதிஷ்டை செய்யும்போதும், ஊா்வலம் செல்லும் போதும் வாணவேடிக்கை, பட்டாசுகள் உபயோகிக்கக்கூடாது.
களிமண், காகிதக்கூழ் ஆகியவை கொண்டு தயாரித்த சிலைகளையே அமைக்க வேண்டும். சிலைக்கு 5 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளா், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியத்தினரிடம் தடையின்மைச் சான்று பெறுதல், சாா்ஆட்சியரிடம் உரிய படிவத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறுதல், ஊா்வல ஒருங்கிணைப்பாளா்கள், ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.இந்த கூட்டத்தில், இந்து முன்னணியினா் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினா், காவல் துறையினா் பங்கேற்றனா்.
- பி.ஏ.பி., கால்வாய்களிலும் சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும்.
- கால்வாய் சீரமைப்புப் பணிகளை நீண்டகால அடிப்படையில் தரமானதாக செய்ய வேண்டும்.
திருப்பூர்:
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனக்கால்வாய் நீா் நிா்வாகத்தை சீரமைக்க வலியுறுத்தி 22-ந்தேதி தொடா் பட்டினி போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வெள்ளக்கோவில் பகுதியில் சேனாபதிபாளையம், வேலப்பநாயக்கன்வலசு, கல்லமடை, இலுப்பைக்கிணறு, அய்யனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சங்கத்தலைவா் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டப்பட்டது.
அப்போது சங்க நிா்வாகிகள் கூறியதாவது:-
மற்ற பகுதிகளில் உள்ளதை போல வெள்ளக்கோவில் பகுதி பி.ஏ.பி., கால்வாய்களிலும் சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும். கால்வாய்களில் நீா் மாசுபாடு, நீா் திருட்டை தடுக்க வேண்டும். கால்வாய் சீரமைப்புப் பணிகளை நீண்டகால அடிப்படையில் தரமானதாக செய்ய வேண்டும். பி.ஏ.பி., நீா் பாசன விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற தீா்ப்பின்படி எங்களுக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் பொருட்டு 22-ந்தேதி பகவதிபாளையம் சங்க வளாகத்தில் விவசாயிகள் பங்கேற்கும் தொடா் பட்டினி போராட்டம் நடைபெற உள்ளது என்றனா்.
- 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது.
- நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது. இது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதன் அருகில் தற்போது வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சிதிலமடைந்த கட்டடத்தை இடித்து தருமாறு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுகாதார நிலையம் சாா்பில் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.
இது குறித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன் உத்தரவின்பேரில்,பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) உதவிப் பொறியாளா் ராமராஜ் ஆய்வு செய்து அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.
- 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது.
- நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தனர். இதில் 10 முதல் 30-வது கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 -வது கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாதத்தில் 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது.
அதன்படி தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187-க்கும், 16-ம் நம்பர் ரூ.197-க்கும், 20-வது நம்பர் ரூ.255-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- கோவில் வழியில் போதிய சிசிடிவி., கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரின் 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் பலரும் இந்த பகுதியில் குடியேறி வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளருமான பரமசிவம் கூறியதாவது:-
கோவில்வழி பகுதியை சுற்றியுள்ள முத்தணம்பாளையம், பிள்ளையார் நகர் மேற்கு, சேரன் நகர் ஆகிய 3 பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சேரன் நகர் 2-வது வீதியில் ஈஸ்வரன் - ராணி தம்பதி வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு,சண்முகம் - சண்முகப் பிரியா தம்பதி வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 8 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு, நடைபெற்றது, இதனை தொடர்நது ஜெயராஜ் - மாலதி தம்பதி வீட்டில் கடந்த ஆண்டு இறுதியில் 3 பவுன் தங்க நகை, வெள்ளி, ரொக்கம் திருட்டு என இப்பகுதிகளில் அரங்கேறிய திருட்டு சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த வழக்கு தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாகியும் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நடுத்தர குடும்பத்தினர் சிறுக சிறுக சேமித்து, நகையை வாங்கி வீட்டில் வைத்தால், அவற்றுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.
மாநகர போலீசார் தொடர்ந்து எங்கள் பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும். எங்கள் பகுதியில் போதிய தெருவிளக்குகளும் இல்லாததால், குற்றச்செயல்கள் அரங்கேற ஏதுவாக அமைந்து விடுகிறது. பொதுமக்களின் தேவை கருதி போதிய தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபுவிடம் கேட்டபோது, கோவில் வழியில் போதிய சிசிடிவி., கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் சிசிடிவி., கேமராக்கள் அமைக்க குடியிருப்பு வாசிகளிடம் பேசி வருகிறோம்" என்றார்.
- 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
- புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:
தமிழகத்தில் 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு 25,259 புழு வளர்ப்பு மனைகளில் நாள் தோறும் 10 ஆயிரம் டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில், கோவை, ஈரோடு, தாளவாடி ஆகிய வித்தகங்களில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு இளம்புழு வளர்ப்பு மனைகளுக்கு வழங்கப்படுகிறது.
இங்கு 7 நாட்கள் புழு வளர்க்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 22 நாட்கள் பராமரிக்கப்பட்டு பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறையில் அரசு சார்பில் உற்பத்தி செய்து வழங்கப்படும் முட்டைகள் தரமற்றதாக உள்ளதால் கூடு கட்டும் பருவத்தில் கூடு கட்டாமல் புழுக்கள் திடீரென இறந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வாரம் உடுமலை கண்ணமநாயக்கனூர் விவசாயி யோகேஸ்வரனுக்கு சொந்தமான புழு வளர்ப்பு மனையில், ஒரு முட்டை தொகுதிக்கு 550 புழுக்கள் வீதம் 300 முட்டை தொகுதியில் 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் இரு புழு வளர்ப்பு மனைகளில், புழுக்கள் திடீரென இறந்தன. ஆண்டியகவுண்டனூர் பெரிசனம்பட்டியை சேர்ந்த, விவசாயி லோகநாதன் புழு வளர்ப்பு மனையில் கூடு கட்டும் பருவத்தில் இருந்த புழுக்கள் இறந்தன. இங்கு 150 முட்டை தொகுதிகளில் 82 ஆயிரம் புழுக்கள் வரை இறந்துள்ளன.
எலையமுத்தூர் செல்வராஜ் புழு வளர்ப்பு மனையில், 100 முட்டை தொகுதிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் 55 ஆயிரம் புழுக்கள் வரை இறந்தன. இதனால் 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
தரமற்ற பட்டு புழு முட்டை வினியோகம், இளம்புழு வளர்ப்பு மனை கண்காணிப்பில் அதிகாரிகள் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வீழ்ச்சியடைந்து வருகிறது.ஏறத்தாழ 50 சதவீதம் விவசாயிகள் தற்போது இத்தொழிலை விட்டுச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற முட்டை உற்பத்தி செய்து வினியோகம் செய்வதால் புழுக்கள் கூடு கட்டாமல் திடீரென இறந்து வருகின்றன.
புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து புழு வளர்ப்பின் போது திடீரென இறப்பதால் ஒவ்வொரு மனைகளிலும் ரூ. 1.50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஒரு பேட்ச் வளர்க்கும் போதும் நஷ்டம் ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்த சில மாதங்களில் பாதித்துள்ளனர். தரமான முட்டை வினியோகிக்கவும், இளம் புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு தரமான புழு வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு விவசாயிகளிடமிருந்து ரூ.290 வசூலிக்கப்பட்டது. 5 மாதமாகியும் இத்தொகையும் உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தி காப்பீடு செய்யவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
காங்கயம்:
ஆலாம்பாடி, முத்தூர் துைண மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) இந்த துைண மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்குட்பட்ட நால்ேராடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டு வலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்ே்லரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் முத்தூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளான முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், பாப்பினி, சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
- வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.
திருப்பூர்:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பட்டியல் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. 1-1-2024 அன்று 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் வெளியான பிறகு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.
இதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றம், திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளது. பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6 விண்ணப்பங்கள் 1 லட்சம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெயர் நீக்கத்துக்கான படிவம்-7, முகவரி மாற்றம், சட்டமன்ற தொகுதி மாற்றம், திருத்தப்பணிகளுக்கான படிவம்-8 என மொத்தம் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.
- உரிமம் பெறாத விதை விற்பனையாளா்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது.
- தகவல் பலகையில் விவசாயிகளுக்கு தெரியும்படி விதை இருப்பு விலை விவரங்களை எழுதி வைக்க வேண்டும்.
காங்கயம்:
நெல் விதைகளை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.இது குறித்து, ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் பி.சுமதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கீழ்பவானி வாய்க்கால் பாசனம் பெறும் காங்கயம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட நத்தக்காடையூா், முத்தூா் பகுதிகளில் தற்போது சம்பா பருவத்தில் நெல் பயிரிட ஏற்ற சூழ்நிலை உள்ளது.
எனவே சான்று பெற்ற நெல் விதைகளை லேபிளுடன் கூடிய பேக்குகளில் வாங்க வேண்டும். விதைகளை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியாா் விதை விற்பனையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அத்துடன் வாங்கும் தேதி, காலாவதி தேதி ஆகியன குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
விதைக்கான ரசீதில் விற்பனையாளா், வாங்குவோா் கையொப்பமிட்டு ரசீது பெற வேண்டும். உரிமம் பெறாத விதை விற்பனையாளா்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது.
அத்துடன் விதை விற்பனையாளா்கள் இருப்பில் உள்ள விதைகளுக்கான இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்புத்திறன் அறிக்கை பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தகவல் பலகையில் விவசாயிகளுக்கு தெரியும்படி விதை இருப்பு விலை விவரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விதை விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.
- அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மடத்துக்குளம்:
கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் பல விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் விவசாயிகளுக்கு தரமான தென்னங்கன்றுகள் சரியான விலையில் கிடைக்கும் வகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பண்ணையில் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வினியோகிக்கும் வகையில் வேளாண்மைத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் கட்டமாக நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 700 வந்துள்ளது.இந்த ரகத்தை இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.அதனை ஒரு கன்று ரூ. 125 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகலாம். புதிதாக நடவு செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 2500 தென்னங்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.






