என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
    • 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

    தாராபுரம்:

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியம் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜா என்கிற கோவிந்தசாமி, எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி கூறியதாவது:- தமிழகத்தை குறிப்பாக உலக அளவில் உற்று நோக்கும் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகிற 21-ந் தேதி தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.மாநில தலைவர் வருகையின் போது தாராபுரம் தொகுதியில் இருந்து யாத்திரையில் கலந்து கொள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர தலைவர் விநாயகம் சதீஷ், தாராபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார், மூலனூர் வடக்கு ஒன்றிய தலைவர் குழந்தைவேல், காங்கயம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், வெள்ளகோவில் நகர தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

    • பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது.
    • தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீரை அளித்து வனப்பகுதி அடைக்கலம் கொடுத்து வருகிறது.

    பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது. இதனால் வனம் படிப்படியாக அதன் இயல்பு தன்மையை இழந்து விடுகிறது. அவற்றில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து போகிறது. இதனால் உணவு, தண்ணீருக்காக அல்லல்படும் வனவிலங்குகள் வேறு வழியின்றி அடிவாரப் பகுதியான அமராவதி அணையை நோக்கி வந்து விடுகிறது.

    தற்போது தண்ணீர்-உணவுக்காக அமராவதி அணைக்கு வரும் வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையில் உலா வருகின்றன. கடந்த சில நாட்களாக குட்டியுடன் யானை ஒன்று உலா வந்த நிலையில், இரவு நேரத்தில் கரடி ஒன்றும் உலா வருகிறது. சாலையில் வரும் வாகனங்களை கூட பொருட்படுத்தாமல் சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளும் வனப்பகுதிக்கு திரும்பிச் செல்ல மனமில்லாமல் அடிவாரப் பகுதியிலேயே வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு உள்ளது. எனவே சாலையை கடக்கும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • “பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

    அவினாசி:

    அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசியதாவது:-

    கார்த்திகேயன்:-எந்த வேலை வந்தாலும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிப்பதே இல்லை. அரசுத்துறை வேலைகள் எதுவும் தெரிவதில்லை. ஊருக்குள் வேலை நடப்பதை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இது மிகவும் வருந்தத்தக்கது. அவினாசி ராஜன் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறைக்குள் தண்ணீர் சேமிப்பு டேங்க் இல்லை. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

    சீனிவாசன்:- உப்பிலிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்றார்.

    சேது மாதவன்:- பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், "பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 256 மாணவர்கள் பள்ளி இடைவிலகலாக இருந்ததை கலவித் துறையின் முயற்சியால் 108 ஆக அது குறைந்துள்ளது. எனவேவார்டு கவுன்சிலர் ஆகிய நீங்கள் அனைவரும் இதுபோல் பள்ளி விலகலை கண்டறிந்து எங்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    • 3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
    • இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மயில்வாகன விநாயகர், சிவசக்தி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குபேர விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர பகுதியில் 1,000 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் வருகிற 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 18-ந் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    19-ந் தேதி பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. வருகிற 20-ந் தேதி அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 21-ந் தேதி திருப்பூரில் புதிய பஸ் நிலையம், செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு ஆகிய 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி ஆலாங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சிவலிங்கேஸ்வர சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்.

    அதன்பிறகு விசர்ஜனம் செய்ய சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    • அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக்கொடுப்பதில் திருப்பூருக்கு முக்கிய பங்கு உண்டு.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் 4.42 சதவீதம் குறைந்துள்ளது.

    திருப்பூர், செப்.17-

    திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக்கொடுப்பதில் திருப்பூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு மாதம் அகில இந்திய அளவில் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி விவரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதத்துக்கான அகில இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 382 கோடியே 45 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.9 ஆயிரத்து 815 கோடியே 91 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் 4.42 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.55 ஆயிரத்து 463 கோடியே 57 லட்சத்திற்கு நடந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ரூ.49 ஆயிரத்து 133 கோடியே 96 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 11.41 சதவீதம் குறைவாகும்.

    • 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
    • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும்.

    திருப்பூர்

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    நாளை முகூர்த்த தினம், 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என்பதால், வெளியூர் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 20 பஸ்கள்,கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு 50 பஸ்கள், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும். வெளியூர் சென்றவர் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை இரவு சிறப்பு பஸ் இயங்கும்.

    அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமிடாமல், முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து, பஸ்களின் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்வது நல்லது.

    சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை.
    • கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்லடம்:

    சுக்கம்பாளையம் பகுதி கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-பல்லடம் வட்டாரம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் இயங்கி வந்தது. அந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சென்று பல்வேறு நூல்களைப் படித்து அறிவுத்திறனை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை. தற்போது கிராம நிர்வாக அலுவலர் அலுவலமாக செயல்பட்டு வருகிறது. கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செயல்படாமல் உள்ள கிளை நூலகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோட்டப்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
    • இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கிராம பகுதிகளில்முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து கோட்ட பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கோட்டப்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் மிகக் குறைந்த அளவே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். மேலும் இங்குள்ள கிணறுகளில் சப்பைத் தண்ணீர் உள்ளது.

    அதனை எடுக்க சுமார் 5 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செயஙயபட உள்ளது.
    • செவ்வாய்க்கிழமையன்று மாலை கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் புதிய பஸ் நிலையம், திருவள்ளுவர் நகர், கல்லாங்காடுவலசு, குமாரவலசு, லைப்ரரி, உப்பு பாளையம், புதுக்காடு, சிவநாதபுரம், ஏபி புதூர், சீரங்க ராய கவுண்டன் வலசு, ஓலப்பாளையம் அருகே உள்ள அனுமந்தபுரம், முத்தூர், எல் கே சி நகர் தண்ணீர் டேங், நடேசன் நகர், பழனிசாமி நகர், மணியக்காரன் பேட்டை, ஆகிய 16இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    பிறகு செவ்வாய்க்கிழமையன்று மாலை வீரகுமாரசாமி திருக்கோவில் வளாகத்திலிருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடுமுடி ஆற்றில் கொண்டு சென்று கரைக்க போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.
    • வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உரிமை கோரப்படாத 319 இருசக்கர வாகனங்கள் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பொது ஏலம் விடப்படுகிறது.

    வாகனங்களை ஏலத்தில் எடுக்கும் நபர்கள் வாகனத்தின் ஏலத்தொகையில் இருந்து 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரத்தை திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்த வேண்டும்.

    வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். இந்த தகவலை திருப்பூர் தெற்கு தாசில்தார் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

    • நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
    • கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் வீரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிறகு, தீயணைப்பு பணியாளர்களால் வெள்ள அபாய பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தீப்பற்றிய இடத்தில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் காட்டு தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், அபாய வெள்ள பேரிடர் காலத்தில் எவ்வாறு தத்துரூபமாக காப்பாற்ற வேண்டும் என்று செயல்முறை விளக்கமாக பயிற்சியளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தீயணைப்பு மாவட்ட அலுவலர், திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன், திருப்பூர் மாவட்ட தீயணைப்பு பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, மதுகார்த்திக், செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

    உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.விடுபட்ட பகுதிகளில் காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி மற்றும் பருவ மழைகள் ஏமாற்றியது உள்ளிட்ட காரணங்களினால் நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது தாமதமாகியுள்ளது.

    இந்நிலையில் 4ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று நீர் வழங்க அதிகாரிகள், திட்ட குழு ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில் 44.82 அடியாகவும், மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில் 1,322.93 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.

    அதிகாரிகள் கூறுகையில், நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற 20-ந்தேதி, நீர்மட்டம் 54 அடி வரை உயர வாய்ப்புள்ளது. ஒரு சுற்றுக்கு, 1,900 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும். பருவ மழை, அணைகள் நீர் இருப்பை பொருத்து கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். 

    ×