என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது.
    • தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    தாராபுரம்:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.,) ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது. 2017 முதல் ஆண்டுதோறும் மதிப்பீட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும், அடிப்படை வசதி குறித்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இது அமைகிறது. நடப்பாண்டுக்கான சுயமதிப்பீட்டு பணிகளை ஒவ்வொரு பள்ளிகளும் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் பள்ளியில் உள்ள வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கம்ப்யூட்டர், மின்சார வசதி, மதிய உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் சுயமதிப்பீடு செய்ய வேண்டும். மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வட்டார அளவிலான கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    அதற்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை குறைந்தால் பயிர் சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.
    • சோளம் உள்ளிட்ட பயிர் இடுவதற்கு ஏதுவாக அமையும். சிறு விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்

    உடுமலை:

    தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவலாக மழை பெய்யும். இதனை நம்பி விவசாயிகள் காய்கறி மற்றும் பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.இம்முறை சரியான நேரத்தில் பருவமழை பெய்யவில்லை. இதனால் பயிர் சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.

    விவசாயிகள் கூறுகையில், தென்மேற்கு பருவமழை முடிந்து வட கிழக்கு பருவமழை துவங்கவும் உள்ளது. அவ்வப்போது மழையின் தாக்கம் இருந்தால் மட்டுமே விவசாய நிலம் இளகும். தொடர்ந்து சோளம் உள்ளிட்ட பயிர் இடுவதற்கு ஏதுவாக அமையும். சிறு விவசாயிகள், மழையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர் என்றனர்.

    • நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.
    • இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும்.

    காங்கயம்:

    முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 19- ந் தேதி முதல் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாைலத்துறை, ஊராட்சி ஒன்றியம் மூலம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முத்தூர், நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு செய்வதற்கு டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் நெல் நாற்று நடவு உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உழவு பணிகளை முடித்துக்கொண்டு இரும்பு சக்கரத்துடன் அப்படியே கிராம தார்ச்சாலைகள் மற்றும் பிரதான தார்ச்சாலைகளில் ஓட்டி செல்லப்படும் சூழ்நிலையில் தார்ச்சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விடும். இதுபோன்ற சூழலில் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகளில் சேற்று உழவு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் வயல்களில் உழவு பணிகளை முடித்துக்கொண்டு வரும்போது கிராம சாலைகள் மற்றும் பிரதான சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே உழவு பணிகளை முடித்தவுடன் டிராக்டரில் இருந்து உடனடியாக இரும்பு சக்கரத்தை கழற்றி விட்டு மீண்டும் டயர் சக்கரத்தை மாட்டி கொண்டு சாலைகளில் செல்ல வேண்டும். மேலும் இரும்பு சக்கரத்துடன் தார்ச்சாலைகளில் ஓட்டிச்செல்லும் டிராக்டர் டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் அபராதத்துடன் உரிய சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெறுகிறது
    • வருகின்ற 12.10.2023 வியாழக்கிழமை மற்றும் 13-10-2023 வெள்ளிக்கிழமை என இரண்டு தேதிகளில் நடைபெறுகிறது. ம் தேதிகளில

    திருப்பூர்:

    பாதுகாப்புக்கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் (சென்னை) சார்பில் ராணுவ ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைபாடுகளை களைவதற்கு பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் முகாம் கோவை அவினாசி ரோடு நவ இந்தியா பேருந்து நிறுத்தம் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இந்த முகாமில் இராணுவ பணி மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள், முன்னாள் படைஅலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுமக்கள் மற்றும் சி.பி.பி.சி., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச். மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தீர்வு பெறலாம்.

    இதற்கான விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற்று படைவிலகல் சான்று நகல் (முதல் 4 பக்கங்களுடன்), பி.பி.ஓ., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச்., இ-பி.பி.ஓ., கோர் பி.பி.ஓ. மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு முதல் பக்கம் மற்றும் நாளது தேதி வரையிலான வரவுப்பதிவு செய்யப்பட்ட கடைசி 2 பக்கங்கள் ஆகிய ஆவண நகல்களுடன் பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் அதிகாரி, சி.டி.ஏ. அலுவலகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கோ அல்லது legaladalatcdachn@gmail.com என்ற இணையதளம் மூலமாகவே அனுப்பலாம். தபால் மூலமாக முடியாத பட்சத்தில் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொிவித்துள்ளார்.

    • நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
    • சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி., நிா்வாகம் முறைகேடாக பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீா் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளக்கோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி., நிா்வாகம் கொடுப்பதில்லை.எனவே விவசாயத்துக்கு முறையாக தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இந்நிலையில் இந்தக் கோரிக்கை தொடா்பாக நீதிமன்றத்தின் தீா்ப்புகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, காங்கயம் அருகே கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.

    பிஏபி., கிளை வாய்க்காலுக்கு நீா் திறக்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீா்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தண்ணீா் திருட்டை ஒழித்து தண்ணீா் திறக்கும் சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும். பிஏபி., தொகுப்பு அணைகளின் காலாவதியான ஷட்டா் மற்றும் உபகரணங்களை உடனே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனா்.

    • பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது.
    • நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.

    திருப்பூர்,செப்.24-

    ஏஐடியூசி., தேசிய பொதுக்குழுக்கூட்டம் திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில் ஏஐடியூசி., அகில இந்திய பொதுச்செயலாளா் அமா்ஜித் கெளா் பேசியதாவது:-

    பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரம் பின்னடைகிறது.மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. வேலையிழப்பு, ஊதிய குறைப்பு, சமூக பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலை, நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.

    ஆகவே எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'இந்தியா' கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

    • சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள்.
    • ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை,

    அவிநாசி

    அவிநாசி நகரப்பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் முன் அதிக அளவில் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகவே வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், காவல் ஆய்வாளா்கள் ராஜவேல், சக்திவேல்(போக்குவரத்து), நெடுஞ்சாலைத்துறை அலுவலா் சுப்பிரமணியம், பேரூராட்சி சுகாதார அலுவலா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வியாபாரிகள், வணிகா்கள், தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சாலையோர கடைகள் அவிநாசி வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படும். அதேபோல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை, தள்ளுவண்டியில் விற்பனை செய்யும், உணவுப் பொருள்கள் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனுமதி பெற்று நடத்த வேண்டும். வாரச்சந்தை வளாகத்தில் மாற்றிக் கொடுக்கப்படும் கடைகளுக்கு தற்போது பேரூராட்சி மூலம் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும். உழவா் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் வேளாண்மை அலுவலக வளாகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும்.

    ஒலிபெருக்கி மூலம் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தற்காலிகமாக அடையாள அட்டை அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து சாலையோர வியாபாரிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும். மேலும், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் அக்டோபா் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • படியூர் தொட்டியப்பாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்ற நுழைவு வாயிலுடன் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
    • 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.

    காங்கயம்:

    நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வாக்குச்சாவடிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களின் குறைகள் மற்றும் தேவையை கேட்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

    அதன்படி முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் 15 தி.மு.க. மாவட்டத்துக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் 19 மாவட்ட கழகங்களை சேர்ந்த 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2 கூட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வின் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த 14ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பாசறை கூட்டம் பிரமாண்ட மாநாடு போல் நடைபெற்றது.

    இதற்காக படியூர் தொட்டியப்பாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்ற நுழைவு வாயிலுடன் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் காலையில் இருந்தே படியூருக்கு வரத்தொடங்கினர். கூட்டம் தொடங்கியதும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மாவட்டம் வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தனர்.

    சரியாக காலை 11மணிக்கு பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கள செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    முதலில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., விளக்கம் அளித்து பேசினார். பின்னர் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் மற்றும் செயலி குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., விரிவாக எடுத்துக்கூறினார்.

    அதன்பிறகு திராவிட மாடல் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். சமூக வலைதளங்கள் பயன்பாடு, செயல்படுத்த வேண்டிய முறைகள் பற்றி மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தரணி தரன் விளக்கமளித்து பேசினார்.

    பின்னர் மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 3.15 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து தி.மு.க. கொள்கை பரப்புக்குழு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவேற்று பேசுகிறார். மாலை 4-35 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை உரையாற்றுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் நன்றி கூறுகிறார்.

    மாலை 5மணிக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் என்ன, தி.மு.க. செய்த சாதனைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி உள்பட பல முக்கிய அறிவுரைகளை வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 11 மணிக்கு கோவை வந்தார். பின்னர் கோவை லீ மெரிடியன் ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், அங்கு தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்கிறார். மதிய உணவு முடிந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு காங்கயம் படியூரில் நடக்கும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வருகிறார்.

    பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கயம் படியூரில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் கோவையில் இருந்து காங்கயம் வரும் வழியில் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்று படியூர் பகுதியில் தி.மு.க. கொடி-தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் இருந்து காங்கயம் செல்லும் வழியில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.

    காங்கயத்தில் பயிற்சி பாசறை நிகழ்ச்சி முடிந்ததும் கோவை செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து இரவு 8-15மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    • இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்
    • ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை வகித்தாா். அவிநாசி தாசில்தார் மோகனன் வரவேற்றாா்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    அவிநாசி-வட்டளபதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைத்து விற்பனை செய்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வெங்கலப்பாளையத்தில் கல்குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறது.

    அவிநாசி வட்டத்தில் மான், மயில்கள் அதிக அளவில் இருப்பதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும். ஊத்துக்குளி புன்செய்தளவாய்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்ததில், ஆடுகள் உயிரிழந்தன. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வஞ்சிபாளையம் குட்டைக்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக பட்டா மாறுதல் செய்யும் பணிகளை வருவாய்த்துறை தொடங்க வேண்டும். ஊராட்சிகளுக்கான 4-வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி 2-வது வாா்டில், சங்கமாங்குளத்துக்கு செல்லும் மடத்துப்பாளையம் சாலை பிரதான வாய்க்காலில் சாக்கடை நீா் கலப்பதால், குளத்தின் நீராதாரம் பாதிக்கப்படுகிறது.

    ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. அவரை மாற்ற வேண்டும் என்றனா்.கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தி விரைவில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தெரிவித்தாா்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் நடைபெறுகிறது.
    • கூட்டமானது 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்,செப்.24-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி ( புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்காக குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.இதில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக வழங்கலாம்.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.
    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா்.

    மூலனூர்,செப்.24-

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 1.26 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

    கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 496 விவசாயிகள் 5,756 மூட்டைகளில் மொத்தம் 1,845 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். விலை குவிண்டால் ரூ. 6,450 முதல் ரூ. 7,472 வரை விற்பனையானது.

    சராசரி விலை ரூ. 6,850. கடந்த வார சராசரி விலை ரூ. 6,800. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

    • காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
    • இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும்.

    திருப்பூர்,செப்.24-

    வெங்காயம், வாழைப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    ராபி பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு பயிா் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலூர் குறுவட்டத்தில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தெற்கு அவிநாசிபாளையம் குறுவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடவு முதல் அறுவடைக் காலங்கள் வரை ஏற்படும் வெள்ள பாதிப்பு, காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.

    பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

    விவசாயிகள் தங்களின் பிரீமிய தொகையாக சின்ன வெங்காயம் பயிருக்கு ரூ.2,227ஐ அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4,900ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ. 98 ஆயிரம் வரை இழப்பீடாக கிடைக்கும்.

    மேலும் விவரம் தேவைப்படுவோா் 7708328657, 9095630870 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

    ×