என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கயத்தில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்: கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்
- படியூர் தொட்டியப்பாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்ற நுழைவு வாயிலுடன் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
- 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
காங்கயம்:
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வாக்குச்சாவடிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களின் குறைகள் மற்றும் தேவையை கேட்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
அதன்படி முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் 15 தி.மு.க. மாவட்டத்துக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் 19 மாவட்ட கழகங்களை சேர்ந்த 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2 கூட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தி.மு.க.வின் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த 14ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பாசறை கூட்டம் பிரமாண்ட மாநாடு போல் நடைபெற்றது.
இதற்காக படியூர் தொட்டியப்பாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்ற நுழைவு வாயிலுடன் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் காலையில் இருந்தே படியூருக்கு வரத்தொடங்கினர். கூட்டம் தொடங்கியதும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மாவட்டம் வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தனர்.
சரியாக காலை 11மணிக்கு பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கள செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
முதலில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., விளக்கம் அளித்து பேசினார். பின்னர் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் மற்றும் செயலி குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., விரிவாக எடுத்துக்கூறினார்.
அதன்பிறகு திராவிட மாடல் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். சமூக வலைதளங்கள் பயன்பாடு, செயல்படுத்த வேண்டிய முறைகள் பற்றி மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தரணி தரன் விளக்கமளித்து பேசினார்.
பின்னர் மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 3.15 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து தி.மு.க. கொள்கை பரப்புக்குழு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவேற்று பேசுகிறார். மாலை 4-35 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை உரையாற்றுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் நன்றி கூறுகிறார்.
மாலை 5மணிக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் என்ன, தி.மு.க. செய்த சாதனைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி உள்பட பல முக்கிய அறிவுரைகளை வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.
பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 11 மணிக்கு கோவை வந்தார். பின்னர் கோவை லீ மெரிடியன் ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், அங்கு தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்கிறார். மதிய உணவு முடிந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு காங்கயம் படியூரில் நடக்கும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வருகிறார்.
பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கயம் படியூரில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் கோவையில் இருந்து காங்கயம் வரும் வழியில் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்று படியூர் பகுதியில் தி.மு.க. கொடி-தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் இருந்து காங்கயம் செல்லும் வழியில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.
காங்கயத்தில் பயிற்சி பாசறை நிகழ்ச்சி முடிந்ததும் கோவை செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து இரவு 8-15மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.






