என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தமிழ்நாடு வனத்துறை சார்பாக தாராபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஊர்வலம் நடைபெற்றது.
    • அனைவரும் வாங்கி மரக்கன்றுகள் நட்டு மழை பெறுவோம் என்றார்.

    தாராபுரம்

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக தாராபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் வனத்துறை வனச்சரகர் சுப்புராஜ் ,வனவர் சேக்உமர், உதவி இயக்குனர் கணேஷ் ராம், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, கல்லூரி முதல்வர் விக்டர் லூயிஸ் மற்றும் அலுவலர்கள், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா நகர், சி .எஸ். ஐ. நகர் வழியாக கொட்டாம்புளி பாளையம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வரை நடைபெற்றது.

    விழாவில் வனச்சரகர் கூறும் போது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் வனவியல் விரிவாக்க சரகத்தின் மூலம் விவசாயிகள், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள், பூங்காக்கள் ,அரசு அலுவலர்கள் ,தனியார் நிலங்கள், மாநகராட்சி ,நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது .

    இதனை பயன்படுத்தி அனைவரும் வாங்கி மரக்கன்றுகள் நட்டு மழை பெறுவோம் என்றார்.  

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது.
    • 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை

    திருப்பூர்

    தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் உடுமலை கோட்டாட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது. விவசாயிகளுக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் காசோலை வழங்கப்பட வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு தாமதமாக காசோலை வழங்கப்படுகிறது.

    தற்போது கடந்த மே 29-ந் தேதி கொப்பரை வழங்கிய 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக காசோலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அவினாசி:

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அவினாசியிலுள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் அவினாசி காரணப் பெருமாள் கோவில்,கருவலூர் கருணாகர வெங்கட ரமண பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    • இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது.
    • ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 11.41 சதவீத சரிவை சந்தித்துள்ளது.இந்திய ஆயத்த ஆடை ரகங்களுக்கு ஐரோப்பா, அமெரிக்கா மிக முக்கியமான ஏற்றுமதி சந்தையாக உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி 2021 வரை நீடித்த கொரோனா பெருந்தொற்று உலகளாவிய நாட்டு மக்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தையும், பொருட்கள் நுகர்விலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச சந்தை, இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாட்டு வர்த்தகர்கள், ஆடை இறக்குமதியை குறைத்துள்ளனர். மக்களின் சிக்கன நடவடிக்கை, உணவு முதலான அடிப்படை தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, வெளிநாடுகளில் ஆடை நுகர்வை குறையச் செய்துள்ளது.இதன் எதிரொலியாக இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவு நிலையை சந்தித்துவருகிறது. நடப்பு நிதியாண்டிலும், ஆடை ஏற்றுமதி எதிர்பார்த்த அளவில் எழுச்சி பெறவில்லை. ஏற்றுமதி வர்த்தக மதிப்பு மாதந்தோறும் சரிந்துகொண்டே செல்கிறது.

    கடந்த 2022 ஜூலை மாதம் 10,994 கோடி ரூபாயாக இருந்த நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பாண்டு ஜூலை மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது. அதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,815 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதம் 9,382 கோடியாக 4.42 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் 49,133 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், 55,463 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 5மாதங்களில் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 11.41 சதவீதமும்,டாலரில் கணக்கிடும்போது 15.98 சதவீதமும் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    வழக்கமாக ஒரு நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டால் மற்றொரு நாட்டுக்கான வர்த்தகம் அதிகரிக்கும். ஆனால் தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நமது நாடு மட்டுமல்ல, சீனா போன்ற மற்ற நாடுகளின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. பல நாடுகளில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; இதனால் மக்களின் ஆடை நுகர்வு குறைந்துள்ளது.அதற்காக பேஷன் ஆடை மீதான மக்களின் மோகம் குறையவில்லை. சற்று விலை குறைவான ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.இவ்வாறு சபரிகிரீஷ் கூறினார்.

    இந்தநிலையில் திருப்பூருக்கான புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடக்கும் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் வரிசையில், உலக அளவில் அதிக ஆடை இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக திகழ்வது ஜெர்மனி. அந்நாட்டின் மொத்த இறக்குமதியில், இந்தியாவில் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. ஐரோப்பிய சந்தை வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஜெர்மனியுடன் கூடுதல் வர்த்தக தொடர்பை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கொரோனா உள்ளிட்ட பேரிடர் இருந்தாலும் கூட கடந்த 5 ஆண்டுகளாக, இந்திய -ஜெர்மனி இடையேயான வர்த்தகம் நிலையாக இருக்கிறது. சீனா, வங்கதேச நாடுகள், ஜெர்மனி இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கின்றன. துருக்கி, வியட்நாமிற்கு அடுத்தபடியாக, இந்தியா ஐந்தாவது இறக்குமதி நாடாக இருக்கிறது.சீனாவின் பங்களிப்பு 23.16 சதவீதம், வங்கதேசத்தின் பங்களிப்பு 21 சதவீதம், இந்தியாவின் பங்களிப்பு 4 சதவீதம் மட்டுமே. இனிவரும் நாட்களில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொரோனா பேரிடர் இருந்தும் ஜெர்மனி உடனான, இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கவில்லை. உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் காரணமாக மந்தமாக இருந்தாலும், ஏராளமான வர்த்தக வாய்ப்பு, ஜெர்மனியில் கொட்டிக் கிடக்கின்றன. இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய வர்த்தக வாய்ப்புகளை அள்ளியெடுக்க வசதியாக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஏற்றுமதியாளர் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்தியா - ஜெர்மனி உடனான ஏற்றுமதி வர்த்தகம் சீராக இருக்கிறது. பொருளாதார மந்தநிலையில் இருந்து ஜெர்மனி எளிதில் மீண்டுவிட்டது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. புதிய வர்த்தக வளர்ச்சி இலக்கை எட்டும் வகையில் ஏற்றுமதியாளர் - வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெர்லின் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி என, இரண்டு நாட்கள் நடக்கும், வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று புதிய வர்த்தக வாய்ப்புகளை பெறலாம்.

    விவரங்களுக்கு, ஏ.இ.பி.சி., அலுவலகத்தை 99441 81001, 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியையாவது பிரதமர் மோடி நிறைவேற்றினாரா ?
    • கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவோம் என்றனர்.. தந்தார்களா ?

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் திருப்பூர், கோவை நகரங்கள் நசிந்துவிட்டன. டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், டல் சிட்டியாக மாறிவிட்டது.

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை நாம் வழங்கினால், மினிமம் பேலன்ஸ் இல்லை எனச் சொல்லி, கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்பத்திற்கு மாதம்தோறும் 3 ஆயிரம் வரை வழங்கி வருகிறோம்.

    நீங்கள் தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலயும், நம்ம அரசோட திட்டங்களால பயனடைந்தவர்கள் இருப்பார்கள். பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்களே காரணம். வாக்களைர்களை சந்தித்து அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது.

    விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியையாவது பிரதமர் மோடி நிறைவேற்றினாரா ? கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு தருவோம் என்றனர்.. தந்தார்களா ?

    அதிமுகவும், பாஜகவும் வெளியில் அடித்துக்கொள்வது போல் நடித்து உள்ளுக்குள் நட்பாக இருக்கின்றனர். போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னால் இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுகவினர் தோப்புக்கரணம் போடுவார்கள்.

    அதிமுகவை பயமுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. ஊழல் வழக்கு பயம் காரணமாகவே அமித்ஷாவை ஈபிஎஸ் சந்தித்தார்

    ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன்னு என்று கூறிவிட்டு, நம்முடைய பட்டதாரி இளஞர்களை பகோடா விற்கச் சொல்கிறார் பிரதமர் மோடி. பக்கோடா விற்க சொல்வதுதான் வேலை வாய்ப்பிற்காக பிரதமர் மோடி அளிக்கும் பதிலா ?

    திமுக அரசு செய்த சாதனைகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்க வேண்டும். உங்களை நம்பியே 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறுகிறேன். தேர்தலில் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். வாக்காளர்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்ற முகவர்கள் உதவ வேண்டும். நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லடம் பகுதியில் உள்ள,அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் உள்ள மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மழை காலம் வரும்போது இந்தப் பிரச்சினைகள் எழுகின்றது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து மழை நீர் தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை.

    பல்லடம், செப்.24-

    பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்:-

    விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி பிரபு, மாநில இளைஞர் அணி தலைவர் ஹோம் கார்டு பாலாஜி, கோவை மாவட்ட தலைவர் திருமுருகனார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிர்லா போஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், நகரத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவிநாசி பாளையம் அருகே உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்
    • ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்

    பல்லடம், செப்.24-

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தரும்படி ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தனது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம், கழுவேரிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தரும்படி ஒன்றிய கவுன்சிலர் மோகனப்பிரியா குமரேசனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் .

    இதையடுத்து அவர் தனது ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அந்தப் பகுதிகளில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதைத்தொடர்ந்து குள்ளம்பாளையம், கழுவேரிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மண் சாலைகளை கான்கிரீட் சாலைகளாக அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

    • கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்

    கோவை மாவட்டம் சூலூர் செங்கதுறையை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவர் மொபட் வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிவாவி பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி மொபட்டுடன் மாரிமுத்து ரோட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் செய்த கண்டெய்னர் லாரி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக விற்பனையை நடத்தி வருகிறது.
    • சுமார் ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023ஐ முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு நல்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

    இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள் பலதரப்பட்ட நவீன பைகள், குல்ட் ரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் என ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டியில்லாத சுலப தவணையின் மூலம் கடன் விற்பனை உண்டு. மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ரூ.300 முதல் ரூ.3000 வரை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையும் வசதியும் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் மற்றும் உடுமலைபேட்டையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (கைத்தறித்துறை) கார்த்திகேயன்,முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், மேலாளர் (அரசு திட்டம்) அன்பழகன், மேலாளர் (உற்பத்தி) கஜேந்திரன், கைத்தறி இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் மேலாளர் பிரபு, கோ-ஆப்டெக்சின் வாடிக்கையாளர்கள் மற்றும் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது.
    • வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து கனடாவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா - கனடா விவகாரம் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:-

    பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது. கோட்டா முறை ரத்தான பிறகு, இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை குறைத்துக்கொண்ட கனடா, வங்கதேசத்துக்கு ஆர்டர்களை அதிக அளவில் வழங்கி வருகிறது.

    அமெரிக்கா, ஐரோப்பியா, ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 61 ஆயிரத்து 764 கோடி அளவுக்கு நடந்துள்ளது. அதில் கனடாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே.அதாவது, 1,304 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.

    கனடாவுடன் ஏற்பட்ட மோதலால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. புதிய சந்தை வாய்ப்புகள் தொடர்பான விசாரணை ஆக்கப்பூர்வமாக இருப்பதால் மற்ற நாடுகளில் புதிய வாய்ப்புகளை வசப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர். கனடா விவகாரத்தால் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை, கனடா - இந்தியா இருதரப்பும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மாற்று வாய்ப்புகளை தேட தொடங்கி விட்டனர்.

    ×