என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தேர்தல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது
    • டி.ஆர். பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்

    2024ல் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் படியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் (poll booth agents) கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் தி.மு.க.வின் மாநாட்டை போல சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அவருடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முக்கிய மாலை நாளிதழான 'மாலைமலர்' பிரதியை ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தார்.

    மாலைச்செய்திகளை எளிமையாகவும், நடுநிலையுடனும் முந்தி தருவதில் தமிழ்நாட்டின் முதன்மையான நாளேடான, தினத்தந்தி குழுமத்தின் 'மாலைமலர்', முதல்வர் கையில் இடம்பெற்றிருந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
    • பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்

     காங்கயம்,செப்.25-

    பிஏபி பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,

    பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பெண் சனிக்கிழமை மயங்கி விழுந்தாா்.

    போராட்டத்தின் 3 -ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 5 பெண்கள் மயங்கி விழுந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.மேலும் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ேதால்வியில் முடிந்தது.

    இதனால் விவசாயிகள் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

    • காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
    • 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.

    காங்கயம்,செப்.25-

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 68 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

    இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன காரி வகைப் பசு விற்பனையானது. 

    • மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது.
    • 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

    தாராபுரம்,செப்.25-

    திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 47-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் மண்டியிட்டுபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விரைவில் சென்னை தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி ,பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ,திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வடிவேல் மற்றும் விவசாயிகள் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    • 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.25-

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலை சந்தில் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரங்கத்தில் தேவாங்கர் சமூக நல மன்றம் மற்றும் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.முன்னதாக ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த மூத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து 2023 -ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதன்படி 10-ம் வகுப்பில் 11 மாணவர்களுக்கும், பிளஸ்-2வகுப்பில் 6 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.அத்துடன் 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேஜிக் ஷோ நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தேவாங்கர் சமூக நல மன்றத்தலைவர் மாணிக்கம்(பொறுப்பு), செயலாளர் திருமலைசாமி(பொறுப்பு), பொருளாளர் சீனிவாசன், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன்,செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ,தேவாங்கர் சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது.
    • வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது. கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் "வறட்சி நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் உணவு, தண்ணீரைத் தேடிக் கொண்டு ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.அப்போது அவை வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றது. இதனால் வனவிலங்குகள் படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை இழந்து பரிதாபமாக உயிரிழந்தும் வருகின்றன.

    அதன் இறப்பின் காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.அலட்சியத்துடன் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் வன விலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருவரும் சிந்திப்பதில்லை. நமது ஆரோக்கியத்தை காப்பாற்றும் வனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடவுள்தான்.இயற்கை மற்றும் வனத்தை பாதுகாக்கும் வனவிலங்குகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    எனவே வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர். இதற்கிடையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில் மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது

    குண்டடம்

    குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இது குறித்து ஆடு வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

    கடந்த மாதங்களில் விறுவிறுப்பாக ஆடுகள் கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர்.

    இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 6ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 300 கிலோ முதல் ரூ.350 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலை கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.
    • ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

     உடுமலை:

    மரம் வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதுடன் பலவிதமான நன்மைகள் தரக்கூடியதாகவும் உள்ளது.இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுவாக மரப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பயிராக மரப்பயிர்கள் சாகுபடி செய்ய வசதியில்லாதவர்கள் ஊடுபயிராகவோ, வேலிப்பயிராகவோ சாகுபடி செய்யலாம்.இவ்வாறு மரப்பயிர்களை சாகுபடி செய்யும்போது அவை அரணாக நின்று பலத்த காற்றினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க உதவுகிறது. மேலும் பறவைகளின் இருப்பிடமாக இருப்பதன் மூலம் பயிருக்கு தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிரியாக இருக்கிறது. மேலும் மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.

    மரப்பயிர்கள் சாகுபடிக்காக மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையின் நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான தேக்கு, மகாகனி, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வேளாண்மைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. வரப்பு ஓரங்களில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    வரும் பருவமழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலம் சீரான வளர்ச்சியைப் பெற முடியும். எனவே வேளாண்மைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஏ.ஐ.டி.யு.சி. சங்க தேசிய நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா, நிட்மா, டெக்பா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்

    ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. திருப்பூர் சுப்பராயன் எம்.பி. அழைப்பின் பேரில் திருப்பூர் தொழில் அமைப்பினர், ஏ.ஐ.டி.யு.சி. சங்க தேசிய நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் சுப்பராயன் எம்.பி. வரவேற்றார். அகில இந்திய பொதுச்செயலாளர் அமிர்ஜித் கவுர், செயல் தலைவர் பினாய் விஸ்வம் எம்.பி., தேசிய செயலாளர் சுகுமார் பாம்ளே, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் பின்னலாடை தொழில்துறையின் தற்போதைய தொழில்பாதிப்பு நிலை, தொழில்துறை சந்திக்கும் இடர்பாடுகள், பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டீமா, நிட்மா, டெக்பா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழில்துறையினரின் கோரிக்கைகளை பெற்ற ஏ.ஐ.டி.யு.சி. தேசிய நிர்வாகிகள்,

    இதுதொடர்பாக தேசிய பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தனர்.

    • பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818)
    • பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும்.

    திருப்பூர்,செப்.25-

    பாலக்காடு டவுன்- ஈரோடு மெமு எக்ஸ்பிரஸ் ெரயில்(06818) நேரம் வருகிற ஜனவரி மாதம் 1 -ந் தேதி முதல் மாற்றப்படுகிறது.பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு பதில், 3 மணிக்கு ெரயில் புறப்படும். கஞ்சிக்கோடு, வாளையார், எட்டிமடை, மதுக்கரை, போத்தனூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும். கோவைக்கு மாலை 4:17மணிக்கு வந்த ெரயில், ஜனவரி 1-ந்தேதி முதல் 20 நிமிடம் தாமதமாக, மாலை 4:37 மணிக்கு வரும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் நிலையங்களுக்கு 10 முதல் 25 நிமிடம் வரை தாமதமாக வரும்.

    திருப்பூருக்கு மாலை 5:30மணிக்கு பதிலாக மாலை 5:48 மணிக்கு வரும். இரவு 7:10மணிக்கு ஈரோடு சென்றடைந்த ெரயில் 7:25 மணிக்கு சென்று சேரும். கோவை - நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி முதல் மாலை 4:15 மணிக்கு பதில் மாலை 4:25மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலத்துக்கு 5 முதல் 10 நிமிடம் தாமதமாக செல்லும்.

    தினமும் திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:17299, 17230) இரு மார்க்கத்திலும், திருச்சூர் - சொர்ணூர் இடையே உள்ள வடக்கஞ்சேரி நிலையத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் நின்று செல்ல ெரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூர் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் இன்று காலை இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்தும், கட்டையால் அடித்தும் கொன்றதற்கான தடயங்கள் இருந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. அவர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பார்ப்பதற்கு வடமாநில பெண் போல் உள்ளார். அவரை மர்மநபர்கள் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருபவா் மாணவி சபா்நிகா ஸ்ரீ..
    • மெ.சபா்நிகா ஸ்ரீயை பாராட்டி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

    காங்கயம்,:

    காங்கயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருபவா் மாணவி சபா்நிகா ஸ்ரீ.

    இவா் திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொண்டு 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்தார்.

    இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், செங்கப்பள்ளி பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி மெ.சபா்நிகா ஸ்ரீயை பாராட்டி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

    மாணவிக்கு காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதியாா் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

    ×