என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.
    • குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே ஆகும். அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.

    நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    வேளாண்மைத்துறை மூலம் நடப்பாண்டில், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில்நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் https://www.tnagrisnet.tn.gov.in பதிவுக்கட்டணம்ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    பங்கேற்பதற்கான தகுதிகள்:குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மதிப்பீட்டுக்குழு:-

    மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். பரிசுத் தொகை:-வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில்ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசுதினத்தன்று வழங்கப்படும்.

    முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10,000மதிப்புடைய பதக்கம், இரண்டாம்பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7,000மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்புடைய பதக்கம். மேலும், நம்மாழ்வார் விருதுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைஅணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் கணினி திறனுடன் இருத்தல் அவசியம்.

    திருப்பூர்:

    வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வங்கிக்கடன் உதவி பெற்று வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    தகுதிகளானது வேளாண்மை , தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் முடித்திருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் அல்லது வங்கி கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

    தேவையான ஆவணங்களாவன 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும்.

    2023-24 ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் துவங்க விண்ணப்பிக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லதுவேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி,வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை, வங்கி கடன்ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

    தங்களின் விரிவான திட்டஅறிக்கையை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர்அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்தல் வேண்டும்.
    • தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்,செப்.26-

    டெங்கு காய்ச்சல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி அளவில், ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹாட்ஸ்பாட் ஆக கண்டறிந்து அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து, காய்ச்சல் பாதித்தவர் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். செல்போன் குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தெரியப்படுத்தாத மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    • பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்
    • மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    திருப்பூர்:

    பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.அரசு அலுவலர்களின் ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக முதன்முறையாக 100 ரூபாய், மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் 200 ரூபாய், 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழிப்புணர்வை, திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து, அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. இதனால் டீக்கடை, பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் பலரும் புகைக்கின்றனர்.

    பொது இடங்களில்

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகுறிப்பாக பஸ் நிலையத்தில் சிறார்கள் சிலர் எப்போதும் புகைத்தவாறு நிற்கின்றனர். போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    • தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

    உடுமலை:

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 6 தாலுகாவை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ல், உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிக அளவு உள்ளன. குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்றிருந்த கோவில்கள், நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில் தற்போது வரை வரலாற்றுச்சின்னங்களாக உள்ளன. இக்கோவில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்த ப்பட்டுள்ளன.

    இதே போல் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், வரலாற்று ஆய்வாளர்களால் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த கல்திட்டைகள் மற்றும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள், மேற்பரப்பு ஆய்வில் கிடைத்துள்ளது. கடத்தூர், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம், கோட்ட மங்கலம் உட்பட பல இடங்களில் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளும், கல்திட்டை உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்களும் உள்ளன.

    சமீபத்தில் மடத்துக்குளம் ஒன்றியம், மெட்ராத்தி கிராமத்தில் குளத்தின் கரையில் இருந்த பாறை கல்வெட்டு, போதிய விழிப்புணர்வு இல்லாமல் சிதைக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.இதே போல் கல்வெட்டுகளை அழித்தல், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துதல் தொடர் கதையாக உள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தொல்லியல் சார்ந்த பணிகளில் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த மாவட்ட தொல்லியல்துறை அலுவலர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொழில்சார்ந்த மாவட்ட மக்களுக்கு, முக்கிய சுற்றுலா தலமாகவும், அருங்காட்சியகம் அமைய வாய்ப்புள்ளது.

    இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • திருப்பூர் சுற்றுப்பகுதியில் 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • புதிய பணியாளர் திடீரென பணியில் சேர்ந்து அனைத்து பணிகளையும் செய்ய முடியாது.

    திருப்பூர்

    திருப்பூர் சுற்றுப்பகுதியில் 300க்கும் அதிகமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசு மானிய உதவியுடன் , பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. சாய ஆலைகளில் சாயமிடுவதில் பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    தரமாக சாயமிடுவதற்காக உப்பும் பயன்படுத்தப்படுகிறது. சாயம், ரசாயனம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியிருப்பதால் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற நபர்கள் மட்டுமே அப்பணிகளை செய்ய முடிகிறது.

    இதேபோல் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒவ்வொரு பிரிவிலும், தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்த நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மற்ற தொழில்களை போல் சாய ஆலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

    புதிய பணியாளர் திடீரென பணியில் சேர்ந்து அனைத்து பணிகளையும் செய்ய முடியாது. நீண்ட நாள் பணி செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். அதற்காக பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுவரை அதற்கான பயிற்சி மையம் திருப்பூரில் இல்லை.

    இந்நிலையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்துடன் (சிட்ரா) இணைந்து திருப்பூரிலேயே சாயமிடும் தொழில்நுட்பம் குறித்த தொழிற்பயிற்சி மையம் அமைக்க திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சிட்ராவின் தர பரிசோதனை கூடமும் சங்க வளாகத்தில் இயங்கி வருகிறது.

    • ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
    • அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

     திருப்பூர்,செப்.26-

    தொடர் வறட்சியால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்த போதும், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.

    விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உருவாக்கப்பட்டது. பவானி ஆற்று நீரை, குழாய்கள் மூலம் கொண்டு வந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்புவதற்கான திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. குளம், குட்டைகளில் நீர் ஏற்றி சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாதது, விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி விவசாயிகள் குரல் எழுப்பினர். கோரிக்கை மனுக்களும் அளித்துள்ளனர்.

    விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பருவமழை பொய்த்ததால், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளிலும் திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஊராட்சிகளில் வறட்சி நிலவுகிறது. இப்பகுதிகளில் விவசாயிகள், நடப்பு ஆண்டு வைகாசி பட்டத்தில் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். கோடை மழை பெய்யாததால் கடலை செடிகள், பூ, பிஞ்சுடன் காய்ந்து போய்விட்டன. வறட்சியால் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.

    பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். பொதுமக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கப்பட்டதில் இருந்து மூன்று ஆண்டுக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த திட்டத்தை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவராதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழக அரசு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் மூலம், குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பி,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
    • மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும்.

    உடுமலை

    ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில், விரைவில் பருவமழை தீவிரமடைய உள்ளது.

    இதனையடுத்து, மழை காலங்களில் கால்நடைகளை எவ்வாறு நோய்களில் இருந்து பாதுகாப்பது என்பது குறித்து அரசு கால்நடைத்துறையினர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி கால்நடைத்துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

    கால்நடைகள் அதிக நேரம் மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையில் நீர்த்தேங்க விடக்கூடாது. நீர்த்தேங்குவதன் மூலம் ஒட்டுண்ணி பிரச்சினைகள், சளி மற்றும் கொளம்பு அழுதல் போன்ற நோய் அதிகரிக்கும். குறிப்பாக ஆடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும். எனவே, சீரான வடிகால் அமைத்தல் அவசியம். குளிர் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் சமயங்களில் சாம்பிராணி மற்றும் வேப்பங்கொட்டை கலந்து கொட்டகையில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை மூட்டுதல் வேண்டும்.

    சுத்தமான குடிநீர் அளித்தல் அவசியம். மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும். குளிர்காலங்களில் குட்டிகளை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க போதிய சூட்டினை தர வேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுதல் அவசியம். குறிப்பாக கோமாரி, ஆட்டுக் கொல்லி மற்றும் துள்ளுமாரி நோய்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

    மடி நோய் வராமல் இருக்க கொட்டகை மற்றும் மாட்டின் மடியை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். கோழி கொட்டகையின் தரைப்பகுதியை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஈரம் அதிகமானால் ரத்த கழிச்சல் நோய் பரவி பேரிழப்பு ஏற்படுத்தும். அக ஒட்டுண்ணிப் பிரச்சினைகளில் இருந்து கால்நடைகளை காத்துக் கொள்ள இயற்கை மருந்துகளான கோமியம் அல்லது தண்ணீர் 10 லிட்டர், நொச்சி இலை கரைசல் 50 கிராம், உன்னிச்செடி கரைசல் 50 கிராம், வசம்பு 50 கிராம் கலந்து கால்நடை கொட்டகையில் தெளிக்க வேண்டும்.

    இந்த முறையை பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    • இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
    • விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    கோவை மண்டல தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தலைவா் சிவகுமாா் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மண்டலத்தில் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில் 700 அட்டைப்பெட்டி தயாரிப்பு உற்பத்திக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். தினசரி ரூ. 3.5 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். காகிதத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. ஆனால் காகித அட்டைப்பெட்டிக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. இதனை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்றுமதி வரி சலுகை அளிப்பதோடு வெளிநாட்டில் இருந்து ஆா்டா்கள் கிடைக்க மத்திய அரசின் தொழில் துறை உதவ வேண்டும். காகித அட்டைப்பெட்டி தொழில் மேம்பாடு அடைய சா்வதேச அளவிலான கண்காட்சிகளை மத்திய அரசு நடத்த வேண்டும். காகித அட்டைப்பெட்டி தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பொருளாதாரம் மேம்பாடும் வகையில் மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளேன் என்றாா்.

    • தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
    • நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    அவிநாசி:

    அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா் கல்வி அறக்கட்டளை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் நடராசன், பொருளாளா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செயற்குழு உறுப்பினா்கள் டி.எம்.அருணாசலம், சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினர்.

    இதில் நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது, அவிநாசி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு அக்டோபா் 3 -ந்தேதி ஊக்கத்தொகை , பரிசுகள் வழங்குவது, அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளியில் 1978-ம் ஆண்டு வரை பணியாற்றிய ஆசிரியா்கள், 80 வயது நிறைந்த அறக்கட்டளை உறுப்பினா்கள், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்குவோா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நவம்பா் 5-ந் தேதி முப்பெரும் விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்தநாளையொட்டி உடுமலை நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் பூளவாடி கிராமத்தில் கிருஷ்ணசாமி செட்டியார் -முத்தம்மாள் தம்பதியினருக்கு 25.9.1899ம் ஆண்டு மகனாக உடுமலை நாராயணகவி பிறந்தார். பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் ஆவார்.75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.

    தமிழ் திரைப்பட பாடல் உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த உடுமலைநாராயணகவி பகுத்தறிவு கவிஞர் ஆவார். இவரது பாடல்களின் சிறப்பை பாராட்டி22.4.1967 ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்யா ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

    மேலும் இவர் பாரதிதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவிஞர் கண்ணதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை முதலான கவிஞர் பெருமக்களுடன் நெருங்கிய நட்புண்டு சிறப்பான பணியை வெளிப்படுத்தினார்.26.6.1944 ல் திருச்சியில் நடைபெற்ற அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் இவரது பாடல் இடம் பெற்றது.

    இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 23.5.1981ல் காலமானார்.இவரது நினைவாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உடுமலை நாராயணகவி மணிமண்டபம் 23.2.2001 அன்று திறந்து வைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டைதிடல் அருகில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் உள்ள நாராயணகவியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

    விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, அரசு அலுவலர்கள், உடுமலை நாராயண கவியின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், பனியன் தொழில் சார்ந்த சைமா, டீமா, டெக்பா, நிட்மா உள்ளிட்ட 19 தொழில் அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பல்லடம் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    இதற்கிடையே அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த செப்டம்பர் 7-ந் தேதி பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட போராட்டமாக செப்டம்பர் 11 முதல் 24-ந்தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம், இ-மெயில், அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இன்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தும் தொழிற்சாலைகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றும் போராட்டமும் நடைபெறுகிறது. மேலும் கடந்த காலங்களில் கோரிக்கைகளுக்காக ஒவ்வொரு சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் 170-க்கும் அதிகமான சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளன. முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குறு சிறு தொழில் நிறுவனங்களும் மின் கட்டண உயர்வுக்காக கைகோர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×