என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்க இரும்பு கூரை தகடுகளால் அறை அமைக்கப்பட்டது.
    • மின் மயான நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் மின் மயானம் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் சிமெண்ட், மற்றும் கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்க இரும்பு கூரை தகடுகளால் அறை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக கட்டடப் பணிகள் நடைபெறாமல் இருந்ததால், இருப்பு அறையில் பொருட்கள் எதுவும் இல்லை.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் திட்டம் போட்டு இருப்பு அறையை சுற்றி மாட்டப்பட்டிருந்த இரும்பு கூரை தகடுகளை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து மின் மயான நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பு அறையின் இரும்பு கூரை தகடுகளை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.30.2 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
    • காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் இடப்பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .

    இதனை ஏற்று குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.2 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. கட்டடப் பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையம் பள்ளி கட்டடத்தில் நடைபெற்ற விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோஜாமணி ஈஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில், திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்,பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம்,வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், பொறியாளர் குரு பிரசாத்,துணைத் தலைவர்,ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், ஒன்றிய திமுக ,நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.
    • மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ந் தேதி டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மதுபான கடையை மீண்டும் திறப்பதற்காக பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது டாஸ்மாக் திருப்பூர் மண்டல மேலாளர் சுப்பிரமணியம், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், துணை தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதுவரை கடை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை கடுமையாக எதிர்த்த பொதுமக்கள் கடை அங்கு மீண்டும் செயல்படக் கூடாது என வலியுறுத்தினர். ஏற்கனவே தாசில்தார் இங்கு கடை செயல்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார் என பொதுமக்கள் கூறினர். மேற்கண்டவாறு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட விடமாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் விழிப்புணர்வு வழங்கிட வேண்டும்.
    • விழிப்புணர்வு பணி மத்திய பஸ் நிலையம் மற்றும் வள்ளியம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக நாடக குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள்,குடியிருப்பு பகுதிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் விழிப்புணர்வு வழங்கிட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து உடுமலை நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் உத்தரவின் பேரில் மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வெங்கடாசல கனக நாடக சபை குழுவினர் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளான கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல்,மஞ்சப்பை உபயோகப்படுத்துதல், பொது இடங்களில் இயற்கை உபாதைகள் மற்றும் எச்சில் துப்புவதை தவிர்த்தல்,புகைப்பிடிப்பதை தவிர்த்தல் என பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் ஏற்படுத்தினர்.

    விழிப்புணர்வு பணி மத்திய பஸ் நிலையம் மற்றும் வள்ளியம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.அப்போது என் குப்பை என் பொறுப்பு, மக்கும் குப்பை மக்காத குப்பை, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, வீட்டுக்கு ஒரு சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசியும் பாடல்களை பாடி நடனம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,
    • பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்

    காங்கயம்:

    பிஏபி., பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டை தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாட்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,

    பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இன்று 6-வது நாளாக நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    • தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
    • நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்,செப்.26-

    மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இது குறித்து பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அழகிரி சாந்தலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் தங்களது விளைபொருட்களான மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம், கொப்பரை உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பதிவு செய்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.ஏனெனில் இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தும் விளைபொருட்களை விற்பனை மற்றும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

    இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0421-2316076 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    பெருமாநல்லூர், செப்.27-

    திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோதிநாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் தனபால் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    • 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
    • 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.

    கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்துவிவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை , ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் , வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் ,2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள்.

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப்பொருட்கள் குறித்து 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
    • பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

    அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 45-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடிக்கிறது.

    இதில் விவசாயிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • உலக புகழ் பெற்ற அப்பல்லோ சர்க்கஸ் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கி, அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது.
    • குழந்தைகளை குதூகலிக்க செய்யும் கோமாளிகளின் அட்டகாசம் சிரிப்பை வர வைக்கிறது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாநகர் பெருமாநல்லூர் சாலை, பூலுவபட்டி பிரிவு அருகில் உலக புகழ் பெற்ற அப்பல்லோ சர்க்கஸ் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கி, அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும், சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சியாகவும் நடந்து வருகிறது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடந்து வருகிறது.

    ஒவ்வொரு காட்சிக்கும் 25-க்கும் ேமற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை சர்க்கஸ் கலைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்து காட்டுகின்றனர். அந்தரத்தில் தொங்கி கொண்டு சர்க்கஸ் கலைஞர்கள் அசத்தும் சாகசங்கள் பார்வையாளர்களை பரவசம் அடைய வைக்கிறது. வருகிற 2-ந்தேதி சர்க்கஸ் காட்சி நிறைவு பெறுகிறது. சர்க்கசில் வன விலங்குகள், செல்லப்பிராணிகள் என்று உயிரினங்கள் பயன்படுத்துவதற்கு தடை இருக்கும் காரணத்தால், முழுக்க முழுக்க சர்க்கஸ் கலைஞர்களின் திறமையை மட்டுமே வைத்து அப்பல்லோ சர்க்கஸ் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை குதூகலிக்க செய்யும் கோமாளிகளின் அட்டகாசம் சிரிப்பை வர வைக்கிறது. தற்போது பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அதிக அளவில் அழைத்து வரப்படுகிறார்கள்.

    அந்தரத்தில் சர்க்கஸ் கலைஞர்கள் பறந்து பறந்து செய்யும் பார் விளையாட்டு சாகச காட்சிகள், நீண்ட சேலையை தொங்க விட்டு பெண் கலைஞர் ஒருவரும், ஆண்-பெண் ஜோடி கலைஞர்களும் செய்யும் சாகசங்கள் மனதை மயக்குவதாக உள்ளது. மணிப்பூர், நாகலாந்து மாநில கலைஞர்கள் ஈட்டி முனையில் நெஞ்சு, முதுகு வைத்து செய்யும் சாகசங்கள் மயிர்கூச்செரிய செய்கிறது. அவர்களின் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகள், நாற்காலி சண்டை விளையாட்டுகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது. வழக்கமான சைக்கிள் சாகசம், உலக உருண்டை கூண்டுக்குள் லாவகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீரர்களின் சாகசம், துப்பாக்கி சுடும் நேர்த்தி என்று காட்சிக்கு காட்சி பார்வையாளர்களை குதூகலப்படுத்துகிறது.

    இதுபோல் பல விதவிதமான சர்க்கஸ் காட்சிகள் பார்வையாளர்களை, கிட்டத்தட்ட 3 மணி நேரம் எந்தவித கவலையும் இன்றி உற்சாகப்படுத்துகிறது. 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த அப்பல்லோ சர்க்கஸ் வருகிற 2-ந்தேதி நிறைவு ெபறுகிறது,

    மேற்கண்ட தகவலை சர்க்கஸ் மேலாளர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    • மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகளை அடைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மதுபானக்கூடங்களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மேற்கண்ட நாட்களில் மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது 

    • 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
    • முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது.

    திருப்பூா்,செப்.26-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பதவிக்கான தோ்வில் வெற்றிபெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    எஸ்பிஐ., வங்கியின் துணை மேலாளா் பணிக்கான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2000 துணை மேலாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

    இத்தோ்வில் பங்கேற்க 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வரும் செப்டம்பா் 27 -ந் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த தோ்வு முதற்கட்ட தோ்வு, முதன்மை, நோ்காணல் மற்றும் குழுப்பயிற்சி என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது. இந்தப்பதவிக்கான ஆரம்பகால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.இந்தத் தோ்வில் வெற்றி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பயிற்சி நிலையத்தின் மூலமாக இலவச பயிற்சியை வழங்க தட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்பும் மாணவா்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94450-29552, 0421-2971112 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×