என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் நடைபெற்றது.
    • 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்ட அழைப்பாளர் மற்றும் மாவட்ட காலநிலை அலுவலரான மாவட்ட வன அலுவலர் மற்றும் ஏனைய உறுப்பினர்களான மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மரம் நடுதல், மரகத பூஞ்சோலைகள் அமைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், மீண்டும் மஞ்சப்பை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது மற்றும் செயல் திட்டம் தயாரித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் 2024 முதல் 2029 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு காலநிலை மாற்ற பாதிப்புகளை தணித்தல் மற்றும் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ள செயல்திட்டங்களை உருவாக்குதல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் தேவந்திரகுமார் மீனா , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாநகர துணை காவல்ஆணையர் (வடக்கு) அபிஷேக் குப்தா , மாநகர துணை காவல்ஆணையர் (தெற்கு) வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • குள்ளகாளிபாளையம் இடையே 250 மீட்டர் தூரம் கான்கிரீட் பாலம் அமைத்தால் 12 ஆயிரம் பேர் பயனடைவார்கள்

     திருப்பூர் : 

     திருப்பூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திட்டக்குழு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். துணை தலைவரான கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'மாவட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்டவை திட்டக்குழு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, மாநில திட்டக்குழு ஒப்புதல் பெற்று நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும்' என்றார். மாவட்ட திட்டமிடும் அலுவலர் முரளிகண்ணன் வரவேற்றார். திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில், அமராவதி ஆற்றின் தென்புறம் உள்ள கரைப்பகுதி மதுக்கம்பாளையம் மற்றும் அமராவதி ஆற்றின் வடபுறம் உள்ள கரைப்பகுதி குள்ளகாளிபாளையம் இடையே 250 மீட்டர் தூரம் கான்கிரீட் பாலம் அமைத்தால் 12 ஆயிரம் பேர் பயனடைவார்கள். 20 கிலோ மீட்டர் சுற்றி செல்வது குறைக்கப்படும். தாராபுரம், வெள்ளகோவில் பகுதிக்கு செல்வதற்கான காலஅவகாசம் குறையும். பாலம் அமைக்கும் தீர்மானத்தை மாவட்ட திட்டக்குழு தலைவர் கொண்டு வந்தார்.

    • குட்டைத்திடலில் நாராயணகவிமணிமண்டபம் உள்ளது
    • மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறிப்புகள் எடுத்து பயன் அடைந்து வருகின்றனர்

    உடுமலை : 

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட குட்டைத்திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது.கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட இந்த மணிமண்டபம் தற்போது வரையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறிப்புகள் எடுத்து பயன் அடைந்து வருகின்றனர். அதன் பயனாக ஒரு சிலர் அரசு பதவிகளையும் அலங்கரித்து வருவதாக தெரிகிறது. ஆனால் அடிப்படை வசதியில் ஒன்றான குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருகிறது.அதைத் தொடர்ந்து மணிமண்டபத்தை நிர்வகித்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்க்கு சென்று குடிநீர் பிடித்து வந்து தேர்வர்களுக்கு அளித்து வருகிறார். இதற்காக இவர் நாள்தோறும் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையை திடகாத்திரமான உடல் நிலையில் உள்ளவரே கடப்பதற்கு சிரமப்பட வேண்டிய நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்து செல்வது இயலாத காரியமாகும். மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைத்து தரக்கோரி கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் தேர்வர்களும், பணியாளரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாராயணகவி மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • குழந்தைக்கு முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.
    • தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கபின்-ஏஞ்சலின் தம்பதியர். இவர்களுக்கு சுஜன் என்ற 4 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று குழந்தைக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த குழந்தை சுஜன் அசைவற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெங்களூரில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.
    • அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் ஹூப்ளியில் இருந்து கொச்சுவேலிக்கு புறப்பட்டது. பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு வந்த போது அந்த ரெயிலின் ஏ1 குளிர்சாதன பெட்டியில் ஏ.சி.யில் பழுது ஏற்பட்டது.

    ஏ.சி. சரியாக இயங்காததால் அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் சரி செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் பழுதான ஏ.சி.யை சரி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் சேலம், ஈரோட்டை கடந்து நேற்றிரவு 11 மணிக்கு ரெயில் திருப்பூர் ரெயில் நிலையம் வந்தது. அங்கேயும் ஏ.சி.யை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏ1 பெட்டியில் பயணித்த பயணிகள் ரெயில் புறப்பட தயாரான போது அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர்.

    இதைப்பார்த்த திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார், குளிர்சாதன பெட்டியில் பயணித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகள், நாங்கள் பணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். பெங்களூரில் இருந்து ஏ.சி. இயங்காததால் பயணிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. உடனே சரி செய்து தாருங்கள் என்று அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே அதிகாரிகள், கோவை போத்தனூர் சென்றதும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    பின்னர் ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. போத்தனூர் சென்றதும் அங்கு ஏ.சி. பழுதான ஏ1 பெட்டி மாற்றப்பட்டு மாற்றுப்பெட்டி இணைக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகள் நிம்மதியுடன் பயணித்தனர்.

    ஏ.சி.இயங்காததால் பயணிகள் ரெயிலை நிறுத்திய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரை மணிநேரம் தாமதமாக கொச்சுவேலிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் சற்று சிரமம் அடைந்தனர்.

    • தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது.
    • சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

    திருப்பூர்

    தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது. அதிகபட்சம் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் இணைந்து வெளியிடும் வானிலை அறிக்கையில், வரும் நாட்களில் திருப்பூரில் அதிகபட்சம் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் நிலவும். இரவில் 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். சராசரியாக மணிக்கு 17 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேக மூட்டம் மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிர் சத்துகள் உறிஞ்சுவது குறைவாக காணப்படும்.

    எனவே வேப்ப புண்ணாக்கு கலந்த தழைச்சத்து உரங்களை இட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • 105 விவசாயிகள் கலந்து கொண்டு 70ஆயிரத்து 1கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • நேற்று மொத்தம் ரூ.48 லட்சத்து 96 ஆயிரத்து 446 க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு , வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 105 விவசாயிகள் கலந்து கொண்டு 70ஆயிரத்து 1கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.76 க்கும், குறைந்தபட்சம் ரூ.57.68 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.48 லட்சத்து 96 ஆயிரத்து 446 க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.
    • ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.

    உடுமலை

    தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

    மன்னர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் ஆண்ட பகுதி, வழங்கிய தானங்கள் உள்ளிட்ட பல சரித்திர ஆதாரங்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. அந்தவகையில் கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு இறுதி வரையிலும் கொங்கு நாட்டை கொங்குச்சோழர்கள், பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகளும், கல்வெட்டுகளும் கிடைக்க பெற்றுள்ளது.

    இதற்கு எடுத்துக்காட்டாக, கரைவழி பகுதியில் கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய பகுதிகளில் வீரசோழன், வீரசோழ கலமூர்க்கன், விக்கிரம சோழன், அபிமான சோழ ராஜாதிராஜன், உத்தம சோழ வீரநாராயணன், முதல் குலோத்துங்க சோழன், வீரராசேந்திர சோழன், இரண்டாம் விக்கிரம சோழன் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் ஏராளமாக உள்ளது.

    மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் பகுதி மட்டும் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனும் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் கொண்டதாக உள்ளது. அத்துடன் அதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. மேலும் கி.பி. 960 முதல் 980 வரை அமரபுயங்கன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் தான் சோமவாரப்பட்டி சிவனியத்தலம் கற்கோயில் உருவாக்கப்பட்டதால் அம்மன்னனுடைய பெயரில் அமரபுயங்கீசன் என்னும் பெயரில் அந்த கோவில் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. அது போல சிஞ்சுவாடி பகுதியில் ஒரு கல்வெட்டு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ விக்கரம சோழன் தெவற்கு பங்குனி எனவும், ஸ்ரீ வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி சாசனம், தானம் எனவும் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகிறது.இதில் பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்து இருக்கின்றன.

    இருந்தாலும் அதில் உள்ள, தெரியும் கல்வெட்டு எழுத்துக்களை வைத்து பார்த்தால் வீரபாண்டியன், ஆட்சியாண்டை குறிப்பதாகவும், நில தானம் செய்ததற்கான கல்வெட்டெழுத்துக்கள் என்பது தெரிய வருகிறது.சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டெழுத்து என்பதால் இது பிற்கால பாண்டியர்கள் 12 அல்லது 13-ம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தென்கொங்குப் பகுதி வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி என்றும், இதற்கு ஆழமான வரலாறுகள் இருப்பதையும் கொழுமம் பகுதியை சேரர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இருக்கும் போது, கடத்தூர், சோழமாதேவி, காரத்தொழுவு, கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சோழர் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இருக்கும் போது, பாண்டியர்களும் கொங்குப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர் என்பதற்கு இந்தக் கல்வெட்டெழுத்துகள் உறுதியான சான்றுகளாக இருக்கின்றன.

    இந்தத் தகவலை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனியப்பன், வரலாற்றுப் பேராசிரியர் மதியழகன், வரலாற்று ஆசிரியர் ராபின், வி.கே. சிவகுமார், அருட்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • விளம்பர பதாகைகள் வைத்துக் கொள்ள முறையான அனுமதி பெற வேண்டும்.

    வெள்ளகோவில்:

    பொதுமக்களின் புகாரின் பேரில் வெள்ளகோவில் நகராட்சி செம்மாண்டம்பாளையம் ரோடு பிரிவில் பொதுமக்களுக்காக இடையூறாக நகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் எஸ். வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-

    வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பதாகைகள் வைத்தாலோ அல்லது நகராட்சி அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தாலோ நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் முறையான அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    • வழங்கப்படும் மூலிகைகள் அடங்கிய பிரசாதம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது
    • பல விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேங்காய், நிலக்கடலை, தக்காளி, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து விடுகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள ஊதியூரில் வரலாற்று சிறப்பு மிக்க பொன்னூதி மலையில் முருகன், உத்தண்ட வேலாயுதசாமி என்னும் உருவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த மலையின் மீது கொங்கன சித்தர் குகைக்கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் தாராபுரம், காங்கயம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    அப்போது வழங்கப்படும் மூலிகைகள் அடங்கிய பிரசாதம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மலையோடு சுமார் 940 ஏக்கர் பரப்பளவில் காட்டுப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான், முயல், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டு் அணில் உள்பட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

    இவைகளுக்கு மலை மற்றும் காட்டுப்பகுதியில் தற்போது போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள ஊர்களுக்குள் வருவதாக குற்றச்சாட்டு் எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஊதியூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:-

    ஊதியூர் பொன்னூதி மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அவை அங்குள்ள சுனைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. கடந்த ஒரு வருடமாக ஊதியூர் பகுதியில் போதுமான மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

    இதனால் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது. இந்த நிலையில் விலங்குகள் அனைத்தும் தண்ணீர் மற்றும் உணவு தேவைகளுக்காக அருகில் உள்ள தோட்டங்கள் மற்றும் ஊர்களுக்குள் வரத்தொடங்கிவிட்டன. குரங்குகள் காங்கயம் வரை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2 மான்கள் அடிபட்டு சாலையோரத்தில் இறந்தன. சிறுத்தை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடுகளை வேட்டையாடுவது, தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரினை அருந்தி செல்வது என இருந்து வருகிறது. பல விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேங்காய், நிலக்கடலை, தக்காளி, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் கடும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஊதியூர் மலை மீது தண்ணீர் தொட்டிகள் அமைப்பதோடு, விலங்குகள் தண்ணீர் அருந்தி செல்வதற்கு ஏதுவாக அந்த தொட்டிகளில் வருடம் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி வழங்கினார்.
    • குடிநீரை முறையாக கையாள்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் நிலைகள் இயக்குபவர்களுக்கு, குடிநீர் நிலைகள் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் செய்தல் பற்றிய புத்தாக்க பயிற்சி வழங்கினார்.

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சுகாதார நலக்கல்வியாளர் ஆர். ராஜ்குமார், மாவட்ட புகையிலை தடுப்பு சமூக சேவகர் வி.பிரவீன்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எம்.ராஜேந்திரன், வட்டார சுகாதார புள்ளியியலாளர் டி.பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.கதிரவன், என்.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வின் போது போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருப்பது, அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்து விடும் பொழுதும் சரியான அளவில் குளோரின் சேர்ப்பது மற்றும் 15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்றவை உறுதி செய்வதால் நீரினால் பரவும் நோய்களான காலரா, சீதபேதி, வாந்தி, வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கட்டுபடுத்த முடியும் மற்றும் குடிநீரை முறையாக கையாள்வதால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை கூட கட்டுப்படுத்தலாம் என்று வட்டார மருத்துவ அலுவலர் டி. ராஜலட்சுமி எடுத்து கூறினார்.

    • ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் கட்டிட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு, தேவையான ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி, கட்டிட கலைஞர் நல சங்க தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×