என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூா் மாவட்டத்தில் 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் இன்று தொடங்கியது.
    • நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கி அக்டோபா் 4 -ந தேதி வரை நடைபெறவுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டத்தில் 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் இன்று தொடங்கியது.

    இது குறித்து மாவட்ட என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் முருகேசன் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் இடுவம்பாளையம், தொங்குட்டிபாளையம், பள்ளிபாளையம், கணக்கன்பாளையம், பழனியாண்டவா் நகா், கிருஷ்ணாபுரம், அண்ணா நகா், பந்தம்பாளையம், சொரியன்கிணத்துபாளையம், பழையூா், எலவந்தி, வடுகபாளையம், சேடபாளையம், நாகலிங்கபுரம், முத்தனம்பாளையம், சென்னிமலைப்பாளையம், பொலையம்பாளையம் உள்ளிட்ட 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கி அக்டோபா் 4 -ந தேதி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் இளைஞா் உடல் நலம் காத்தல், ஆன்மிகம் பற்றிய விழிப்புணா்வு - கோயில் வளாகம் சுத்தம் செய்தல், சுற்றுப்புறச்சூழல் காத்தல், மரம் நடுதல், இயற்கை விவசாயம், பொது மருத்துவ முகாம், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் நடைபெறவுள்ளது.மேலும், நோய்கள் பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கம், மனநலம், உடல்நலம் காத்தல், யோகாவின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் விளக்கப்படவுள்ளது.இம்முகாமில் 1, 230 மாணவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா் என்றாா். 

    • சிறப்பு மருத்துவ முகாம் பல்லடத்தில் நாளை 29-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் : 

    கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பல்லடத்தில் நாளை 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.பல்லடம் உழவா் சந்தை அருகேயுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி (மேற்கு) கட்டடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கவுள்ளாா்.இதில், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

    இம்முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று பல்லடம் நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

    • விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
    • கடை உரிமையாளா்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

    அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 146 கடைகளில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 44 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 134 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடை உரிமையாளா்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடா் விற்பனையில் ஈடுபட்ட 17 கடைகள் மூடப்பட்டன.

    புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புகாா்களை 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

    ஊத்துக்குளி : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிரு ப்பதாவது:-

    ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள். கடை எண் 3679ஐ இடமாற்றம் செய்து வடுகபாளையம் கிராமம், கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதேபோல் ஏற்கனவே 2017-ம் ஆண்டு புதிய கடை அமைக்க முயற்சித்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை ெபறப்பட்டது. தற்போது மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் அங்கு வரும் குடிமகன்களால் பெண்களுக்கு மிகப்பெரிய தொல்லைகள் ஏற்படும். இது தவிர அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள், வழித்தடங்கள், காலி மனைகளில் குடிமகன்களால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் வருவதால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கே.கே.நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

    மேலும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனவே டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமாகும் என அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.

    • ரூ.1.17 ேகாடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.17 ேகாடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி , பள்ளியின் தலைமை ஆசிரியர் பூமாரி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் சிவன்மலை , பள்ளி மேலாண்மை குழு தலைவர் கங்கா தேவி , பள்ளி கட்டிட வளர்ச்சி குழு தலைவர் சுப்பிரமணியம், அருண் பழனிச்சாமி, செந்தில் சுப்பிரமணியன், ஜோதி ரமேஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வேலுமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வகுப்பறை கட்டிடப்பணி ஒப்பந்ததாரர் என்ஜினீயர் சுகுமாருக்கு , விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பொன்னாடை போர்த்தினார். 

    • இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

    உடுமலை : 

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். முன்பு பதிவு செய்தவர்கள், விருப்பங்களை மாற்றி வரிசைபடுத்திக்கொள்ளலாம். இறுதியாக, வரிசை படுத்தப்பட்டுள்ள பட்டியல் இடஒதுக்கீடுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.மேலும் முழுமையான விபரங்களை, http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சந்தேகங்கள் இருப்பின் 94886 35077, 94864 25076 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.

    உடுமலை : 

    திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், பாலக்காடு - சென்னை மற்றும் கோவை - மதுரை, பொள்ளாச்சி - கோவை உள்ளிட்ட ெரயில்கள் உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்கின்றன.இந்நிலையில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல், டிக்கெட் பதிவு செய்ய, யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் க்யூ ஆர் கோடு அமைத்து, ெரயில்வே நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ரெயில் நிலையம் அறிவிப்பு பலகையில், க்யூஆர் கோடு பார் யுடிஎஸ் ஆன் மொபைல் ஆப் என எழுதப்பட்டுள்ளது. அதில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.

    இதை பயணிகள் ஸ்கேன் செய்தால் மொபைல் ஆப்பிற்குள் செல்கிறது. அதன்பின் யுடிஎஸ்., மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் இருந்து முன்பதிவில்லாத டிக்கெட் (அன் ரிசவர்டு) சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நேரம் வீணாகுவது, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்
    • பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாமல், வயலில் பறிக்காமல் விடப்பட்டும் வயல்களிலேயே அழித்தும் வருகின்றனர்.

    குடிமங்கலம் : 

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, சீசன் காலங்களில் தினமும் ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.இப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கும், தனியார் ஏல மையங்களுக்கும் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் குறைந்ததால் அதன் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடவு செய்து ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.

    நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் அதன் விலை உச்சத்தை தொட்டது.அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. இதனால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் வழக்கத்தை விட சாகுபடி பரப்பு பெருமளவு அதிகரித்தது.தக்காளி அறுவடை தற்போது தீவிரமடைந்துள்ளது. வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்புற கமிஷன் கடைகளுக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்பட்டது.

    ஆனால் ஆந்திர மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து உள்ளதால் உடுமலை பகுதிகளுக்கு பிற மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 30 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்றது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால், உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.இதனால் தக்காளி செடிகள் வளர்ச்சி குறைவு, காய்கள் பிடிப்பது குறைவு, கடும் வெயில் காரணமாக நோய்த்தாக்குதல், காய்கள் சிறிய அளவில் மட்டுமே காணப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மகசூலும் பெருமளவு பாதித்துள்ளது.விலையும் குறைந்துள்ளதால், பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாமல், வயலில் பறிக்காமல் விடப்பட்டும் வயல்களிலேயே அழித்தும் வருகின்றனர். அதிக அளவு பழங்கள் வீணாகி, ரோடுகளில் வீசப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- அதிக விலை கிடைக்கும், பருவ மழையும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது.ஆனால் தற்போது விலை கடும் சரிவை சந்தித்துள்ளதோடு, பருவ நிலை மாற்றத்தால் ஒட்டுமொத்த பயிர் சாகுபடியும் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.

    நாற்று, உரம், நடவு, மருந்து என ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. பறிப்பு கூலி ரூ. 350, போக்குவரத்து கட்டணம், கமிஷன் என பறித்து சந்தைக்கு கொண்டு வந்தாலும் விலை கடும் சரிவால் வரவை விட செலவு அதிகமாக உள்ளது.இதனால் பறிக்காமல் வயல்களிலேயே விட வேண்டிய அவல நிலை உள்ளது. நடப்பு பருவத்தில் தக்காளி சாகுபடி பெரும் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

    வரத்து அதிகரிக்கும் போது தக்காளி சாஸ், ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுதல், குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.     

    • மழைக்கால நோய்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது

    உடுமலை : 

    பொது சுகாதாரம் மற்றும் மருந்து துறை சார்பாக மழைக்கால நோய்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி நடைபெற்றது.இதில் உடுமலை வட்டாரத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் திறப்பாளர்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது நீர்நிலைகளை சுத்தம் செய்தல் மற்றும் க்ளோரினேசன் செய்தல் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர்,வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.அப்போது குளோரினேசன் எவ்வாறு செய்ய வேண்டும் என்று செயல்முறை மற்றும் குறும்படம் மூலமாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    • சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது
    • வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

    திருப்பூர் : 

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடுமலை- பழனி நெடுஞ்சாலை உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கொழுமம் பிரிவு வரை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக மத்திய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கழுத்தறுத்தான் பள்ளம் வரையில் சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எங்கிருந்து இந்த வாகனங்கள் வருகிறது. எதற்காக அங்கு நிறுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.

    தேசிய நெடுஞ்சாலையை பார்க்கிங் வசதியாக மாற்றும் வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் சாலை அகலமானதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது. எனவே உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். இதற்காக போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    மங்கலம் : 

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி-அக்ரஹாரப்புதூர் பகுதியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த வகுப்பறைகள் கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    பின்னர் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது.பள்ளி மாணவ, மாணவிகள் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் வட்டார ஆணையாளர் வேலுச்சாமி, உதவி பொறியாளர் கற்பகம், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முகமது இத்ரீஸ், மசூதாபேகம், அர்ஜூனன், தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த அபுதாஹிர், பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மங்கலம் ஊராட்சி செயலாளர் , பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும்.

     திருப்பூர் : 

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி,விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததே காரணம். இதனை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் சாலை ஓரங்களில உள்ள கடைகளினாலும், உணவுப்பொருட்களை வாங்க வரும் நபர்களும் சாலையில் வாகனத்தை நிறுத்துவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றது. அவற்றை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக, சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிக வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலைகளில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய செய்கை இல்லாமல் வாகனத்தை திருப்புவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் வேண்டும்.

    சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினை தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பலகுடும்பங்கள் பாதிக்க ப்படுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர துணை காவல் ஆணையர் (வடக்கு) அபிஷேக் குப்தா , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாநகர் துணை காவல்ஆணையர் (தெற்கு) வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×