என் மலர்
நீங்கள் தேடியது "tomato plants destroyed"
- பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்
- பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாமல், வயலில் பறிக்காமல் விடப்பட்டும் வயல்களிலேயே அழித்தும் வருகின்றனர்.
குடிமங்கலம் :
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, சீசன் காலங்களில் தினமும் ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.இப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கும், தனியார் ஏல மையங்களுக்கும் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் குறைந்ததால் அதன் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடவு செய்து ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.
நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் அதன் விலை உச்சத்தை தொட்டது.அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. இதனால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் வழக்கத்தை விட சாகுபடி பரப்பு பெருமளவு அதிகரித்தது.தக்காளி அறுவடை தற்போது தீவிரமடைந்துள்ளது. வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. உடுமலை மற்றும் சுற்றுப்புற கமிஷன் கடைகளுக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்பட்டது.
ஆனால் ஆந்திர மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து உள்ளதால் உடுமலை பகுதிகளுக்கு பிற மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 30 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்றது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால், உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது.இதனால் தக்காளி செடிகள் வளர்ச்சி குறைவு, காய்கள் பிடிப்பது குறைவு, கடும் வெயில் காரணமாக நோய்த்தாக்குதல், காய்கள் சிறிய அளவில் மட்டுமே காணப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மகசூலும் பெருமளவு பாதித்துள்ளது.விலையும் குறைந்துள்ளதால், பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாமல், வயலில் பறிக்காமல் விடப்பட்டும் வயல்களிலேயே அழித்தும் வருகின்றனர். அதிக அளவு பழங்கள் வீணாகி, ரோடுகளில் வீசப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- அதிக விலை கிடைக்கும், பருவ மழையும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது.ஆனால் தற்போது விலை கடும் சரிவை சந்தித்துள்ளதோடு, பருவ நிலை மாற்றத்தால் ஒட்டுமொத்த பயிர் சாகுபடியும் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.
நாற்று, உரம், நடவு, மருந்து என ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. பறிப்பு கூலி ரூ. 350, போக்குவரத்து கட்டணம், கமிஷன் என பறித்து சந்தைக்கு கொண்டு வந்தாலும் விலை கடும் சரிவால் வரவை விட செலவு அதிகமாக உள்ளது.இதனால் பறிக்காமல் வயல்களிலேயே விட வேண்டிய அவல நிலை உள்ளது. நடப்பு பருவத்தில் தக்காளி சாகுபடி பெரும் நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.
வரத்து அதிகரிக்கும் போது தக்காளி சாஸ், ஜாம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுதல், குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.






