என் மலர்
திருப்பூர்
- ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.
திருப்பூர்:
ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.
இதனிடையே இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பார்க் சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1 -வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர்-திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை உள்பட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் பூங்கா (திறந்தவெளி காலி இடம்) மேம்பாடு செய்தல், அம்ரூத் திட்டத்தின் கீழ் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், கட்டிட மேற்கூரையில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,பிற துறைகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சத்துணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் நியாய விலைக்கடைகள், புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசு திட்டமானாலும், மாநில அரசு திட்டமானலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சுப்பராயன் எம்.பி., தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன் , பல் மருத்துவர். பல்லடத்தில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
பல்லடம்:
சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன் , பல் மருத்துவர். பல்லடத்தில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.இந்தநிலையில் மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வருகிறார். கடந்த 18ந் தேதி சென்னைக்கு சென்று தனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு கடந்த 25ந் தேதி பல்லடம் திரும்பினார். வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவு ஆகிய இடங்களில் கை ரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே சென்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார் இதையடுத்து போலீசார் அவரை துரத்திப் பிடித்தனர்.பின்னர் அவரை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது,அவர் பல் டாக்டர் வீட்டில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் போலீசாரது விசாரணையில் மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பூதப்பாண்டி மகன் இளங்கோவன் என்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரிடமிருந்து ரொக்கம் ரூ. 95 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது அவிநாசி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
- அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
பின்னர் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நடைபெற்றது.இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில், தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோவில் கட்டுவதற்கு முன் அங்கு பாசிப்பயிர், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதனை கால்நடைகளை விட்டு மேய விட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் மாடுகள், மற்றும் குதிரை ஆகியவற்றை விளைந்த தானிய பயிர்களை மேய விட்டனர்.
இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், செல்வ விநாயகர், பால தண்டபாணி திருக்கோவில் கட்டுவதற்காக அரசின் ஸ்தபதியிடம் கட்டுமான வரைபடம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கட்டுமான வரைபடம் வந்தவுடன் அதனை அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நீண்ட காலமாக திருப்பணி நடைபெறாமல் இருந்த செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெறுவது பல்லடம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.
பல்லடம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்லடம், பொங்கலூர் ஒன்றிய கிளைத் துவக்க விழா மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வானவில் மன்ற கருத்தாளர்கள் சமுதாய பங்கேற்பாக கோடை விடுமுறையில் நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் உறுதுணையாக செயல்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பல்லடம் கிளை செயலாளர் சரண்யா வரவேற்றார்.இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி உதவி ஆளுநர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பல்லடம், பொங்கலூர் கிளை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பல்லடம்:-
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளிநகர் தொட்டி அப்புச்சி கோவில் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி அந்தப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம்.
- மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த சந்தைக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர் மற்றும் கன்னிவாடி பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர். பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை தொடங்கியுள்ளதால் மூலனூர் பகுதிகளில் தற்போது முருங்கை வரத்து தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிேலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இந்த வாரம் சற்று உயர்ந்து செடி முருங்கை, மரம் முருங்கை, கரு முருங்கை என அனைத்தும் சராசரியாக ரூ.23-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
விலை உயர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
- புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை நகராட்சி பொள்ளாச்சி- பழனிச்சாலையில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினசரி இங்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.நகரப்பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகள், வெளி மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கோவை- பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாண மாணவ, மாணவிகள் தினசரி இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்கின்றனர்.
இது தவிர வேலைக்கு செல்பவர்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள வி.பி.புரத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் வி.பி.புரத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.அனைத்து பணிகளையும் உடனடியாக முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் நெருக்கடி குறையும். மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் கூடல் விழா ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது.
- போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.
உடுமலை:
தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்திடும் வகையிலும், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் கூடல் விழா ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இலக்கிய மன்ற செயலாளர் சின்னராசு வரவேற்புரை ஆற்றினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராஜ் ,மஞ்சுளா முன்னிலை வகித்தனர் . முள்ளுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் தமிழ் தொன்மை குறித்து சிறப்புரை ஆற்றினார். தமிழ் கூடல் நிகழ்வையொட்டி 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.
மாணவிகள் கனிஷ்கா, சோபியா ரேணு, ஸ்ரீதா, ஜெயச்சித்ரா, ஜீவிகா,மிருதுளா அர்ஷின்சனா ஆகியோர் பேசினர்.
முடிவில் தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன், சிவசுந்தரி, கார்த்திகா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
- உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
- சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள்.
உடுமலை:
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன்,மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி ஆனந்தன் தொடங்கி வைத்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள். ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இதில் உடுமலை தாசில்தார் சுந்தரம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை அமராவதி அணைப்பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார்.
அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.
- பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைக்க வேண்டும்.
- உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியின் சார்பில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி முன்னிலையில் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அப்போது ஆணையாளர் எஸ்.வெங்கடேசன் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போடுதல் வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் கடித்தாலோ கீறினாலோ உடனடியாக கடித்த இடத்தில் சோப்பினால் கழுவி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் படி தடுப்பூசிகளை முழுமையாக போட்டு கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பதன் மூலம் நோயால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறினார்.
- சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
- 5 பயனாளிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பினனர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பாக பணி புரிந்த காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் வார்டு மேலாளர்களையும் சிறப்பிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த (அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை)மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியோரை பாராட்டி கவுரவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் இலவச சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் 5 பயனாளிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி. தேசிய சுகாதார பணிகள் மருத்துவர் அருண்பாடி, மாவட்ட திட்ட அலுவலர் அகிலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






