என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.
    • திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்
    • வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அய்யப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில், குருவாயூரப்பன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் எழுந்து நீராடி சுவாமி தரிசனம் செய்து, தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்.

    குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதி எழுத்தறிவித்தலை தொடங்கி வைத்தனர். அதுபோல் அரிசியிலும் குழந்தைகளின் கை விரல்களை பிடித்து எழுத வைத்தனர். அதன்பிறகு சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில், திரளான குழந்தைகள் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோல், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை (அட்மிஷன்) நடந்தது. ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்கள், ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    • பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழில் நகரமான திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களும், அதனைச் சார்ந்த உப தொழில் நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் பின்னலாடை நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி அடைய வேண்டி ஆண்டுதோறும் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், நடப்பு ஆண்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களுக்கு வாழை மரம் , பூ மாலை , கலர் காகிதங்கள் அணிவித்து, சந்தனம் குங்குமம் இட்டு தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆயுத பூஜை வழிபாடு நடத்தினர்.இரண்டு நாட்களாகவே எந்திரங்களை ஆயுத பூஜைக்கு தயார் படுத்திய தொழிலாளர்கள், மிஷின்களை சுத்தம் செய்து முறையாக பராமரித்து ஆயுத பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் எந்திரங்களுக்கு நேற்று ஒருநாள் ஓய்வு கொடுத்து உரிய மரியாதை செய்தனர். இந்த நாளில் எந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் புதிதாக இணைக்கப்பட்டு, எந்திரங்களை பராமரிக்கும் தொழிலாளர்களால் தணிக்கை செய்யப்பட்டது.

    அடுத்த ஓராண்டுக்கு அந்த எந்திரம் சிறப்பாக உற்பத்தி பணியில் ஈடுபட தொழிலாளர்கள் இந்த நாளில் வேண்டிக்கொண்டனர். தொழில் நெருக்கடி நீங்கி இந்த வருடம் தொழில் துறைக்கு சிறப்பான வருடமாக அமைய வேண்டும் என சிறு சிறு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

      வெள்ளகோவில்:

      வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கச்சேரிவலசு, இந்திரா நகர், அய்யனூர், குமாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்குதிகளில் இதுவரை நாய்கள் கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இந்நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் தங்கவேல் (வயது 37) என்பவர் ஆடுகளை வளர்த்து ஜீவனம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கவேல், வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்த்து பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடுகளின் நிலைமையை கண்டு தங்கவேல் பதறி போனார். 6 செம்மறி ஆடுகள், 2 வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தன, இதனால் தங்கவேல் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது.
      • மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படுமோ என ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

      திருப்பூர்:

      இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல்வேறு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்குள்ள பெரிய வர்த்தகர்கள், உலக நாடுகளில் உள்ள சில்லரை வர்த்தகர்களுக்கு, ஆடைகளை விற்கின்றனர்.

      பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன்காரணமாக, சங்கிலி தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், தொடர்புள்ள நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது.

      கொரோனா தொற்றுபரவலால் பாதிக்கப்பட்ட பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்துவந்த ஆண்டில் மீண்டும் சூடுபிடித்தது. இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே துவங்கிய போரால், திருப்பூருக்கு புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பது அரிதாக மாறியுள்ளது.

      புதிய வளர்ச்சி இல்லாவிட்டாலும், வழக்கமான ஆர்டர்களை பெற முடியாமல், ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடரும் போராட்டத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும்,நூற்பாலைகள் மற்றும் தொடர்புடைய 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

      எப்படியும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே துவங்கிய போர் திருப்பூர் ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

      இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது. இருப்பினும் சங்கிலிதொடராக உள்ள வர்த்தக தொடர்புகள் பாதிக்கும். இதன்காரணமாக, மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படுமோ என ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

      • ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன.
      • உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்

      திருப்பூர்

      மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, கோவை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      திருப்பூர், வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்டு ஆண்டிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக உதவி மின் பொறியாளர், 15 கி.மீ., தூரத்தில் உள்ள முதலிபாளையம், காசிபாளையம் மின் அலுவலகத்தை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.

      இடுவம்பாளையம் மின் அலுவலக உதவி மின் பொறியாளர், சின்னக்கரை மற்றும் கூடுதலாக சில மின் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளது. முருகம்பாளையம் உதவி மின் பொறியாளர், கரைப்புதூர் உட்பட துணை மின்நிலையங்களையும் கூடுதலாக கவனிக்கிறார்.

      ஒவ்வொரு மின் அலுவலகத்திலும், ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களை கவனிக்கவேண்டியுள்ளதால், மின் வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூலிப்போரும் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

      வீரபாண்டி மின் உப கோட்டத்துக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என கூறியிருந்தனர். 

      • கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.
      • தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன

      திருப்பூர்:

      திருப்பூர் நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.கடும் குளிரில், இரை தேடி வாழ முடியாது என்பதால், 4முதல் 6மாதங்கள் வரை நஞ்சராயன் குளத்தில் வந்து தங்கி செல்கின்றன.

      ஒரு வார பயணமாக இங்கு வந்தடையும் பறவைகள், மிதவெப்ப சூழலில் தங்கி இரையெடுத்து, தங்கள் உடலை வலுவாக்கி கொள்கின்றன. கோடை வெப்பம் துவங்கும் போது, மீண்டும் தாய் நாட்டுக்கு சென்று கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

      குளிர்பருவம் துவங்கும், அக்டோபர் மாதத்தில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், தற்போது நஞ்சராயன் குளத்தில் தலைகாட்ட துவங்கியுள்ளன. ஏற்கனவே, ஏராளமான உள்நாட்டு பறவைகளும், கூட்டம், கூட்டமாக தங்கியிருப்பதால், பறவைகள் சரணாலயம் இப்போதிருந்தே களைகட்ட துவங்கிவிட்டது.

      திருப்பூர் வரும் பறவைகள், கூட்டம் கூட்டமாக தங்கியிருந்து மார்ச் மாதம் வரை குளத்தில் இளைப்பாறும்.அதற்கு பிறகு, தாய்நாடுகளுக்கு திரும்பி செல்லுமென, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

      திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

      பருவநிலை மாற்றம் காரணமாக, பறவைகள் வலசை வருவது சில ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில், சைபீரியா மற்றும் வட ஐரோப்பிய நாட்டு பறவைகள் திருப்பூர் வரும். திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் கடந்த 14ல் கணக்கெடுப்பு நடத்தினோம்.

      தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன. உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும், 286 வகையான பறவைகள், நஞ்சராயன் குளம் வந்து செல்வது வழக்கம்.

      இம்மாத இறுதியில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

      இவ்வாறு அவர் கூறினார். 

      • தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
      • நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

      திருப்பூர்:

      திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பிரதானமாக உள்ளது. பாத்திர உற்பத்தி, விசைத்தறி, கோழிப்பண்ணை, அரிசி உற்பத்தி, எண்ணெய் மில்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்களும் அதிக அளவில் நடக்கிறது.

      தீபாவளி என்றாலே திருப்பூர் பின்னலாடை தொழிலாளருக்கு போனஸ் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளிலேயே போனஸ் பட்டுவாடா துவங்கிவிடும்.

      தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது. தொழிற்சங்க கூட்டு கமிட்டி, தொழிலாளருக்கு விரைவான போனஸ் வழங்க வேண்டு மென தெருமுனை பிரசாரம் நடத்த துவங்கிவிட்டன.விலைவாசி உயர்வால், தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

      திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உட்பட, தொழில் அமைப்புகளுக்கு, கூட்டுக்கமிட்டி, போனஸ் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

      ஒவ்வொரு தொழிலாளரும் ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் என ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போனஸ் கைக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும், முன்னணி பர்னிச்சர் கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், மொபைல் போன் ேஷாரூம்கள், சரஸ்வதி பூஜைக்கு முன்னதாகவே, அதிரடி சலுகை அறிவிப்புகளுடன், தீபாவளி விற்பனையை தொடங்கி உள்ளன.

      • அடிக்கடி சரவணன் தன் மீது சந்தேகப்படுவதால் கிருத்திகா மிகுந்த மன விரக்தி அடைந்துள்ளார்.
      • கிருத்திகா விநாயகர் சதுர்த்தி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      தாராபுரம்:

      திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தாராபுரம் நாடார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவரது மகள் கிருத்திகா (வயது 18).

      இவர் காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சரவணனும், கிருத்திகாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருத்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று மாலை சரவணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      போலீசார் விசாரணையில் 2பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்த விவரங்கள் தெரிய வந்தது. சரவணன், கிருத்திகா 2 பேரும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், சரவணன் கோவையில் உள்ள கல்லூரியிலும், கிருத்திகா காங்கயத்தில் உள்ள கல்லூரியிலும் படித்து வந்துள்ளனர். அப்போது சரவணன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுடன் பேச, பழக கூடாது என்று கிருத்திகாவுக்கு கண்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      மேலும் அடிக்கடி சரவணன் தன் மீது சந்தேகப்படுவதால் கிருத்திகா, மிகுந்த மன விரக்தி அடைந்துள்ளார். இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இந்நிலையில் காதலி பிரிந்த சோகத்தை தாங்க முடியாமல் வாழ்ந்து வந்த சரவணன், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருத்திகாவை போன்றே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலனும், காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

      • குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.
      • ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது.

      திருப்பூர்:

      தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 100 முதல் 200 பத்திரப்பதிவுக்கான டோக்கன் வழங்கப்படும். குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில் மட்டும் இது அதிகரிக்கும்.

      ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் முதல் நாளே முகூர்த்த தினம் என்பதால் பத்திரங்கள் அதிகம் பதிவாகும் என எதிர்பார்த்து 200 டோக்கன்கள் வழங்கப்பட்டது. தினமும் அதிகம் பதிவாகும் அலுவலகங்களில் 100க்கு பதிலாக, 150 டோக்கன்கள் வழங்கலாம் என்று பத்திரப்பதிவு துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார்.

      திருப்பூர் நெருப்பெரிச்சலில் ஜாயின்ட்-1 மற்றும் 2, தொட்டிபாளையம் சார் - பதிவாளர் அலுவலகங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இதுதவிர்த்து நல்லூர், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், கணியூர், உடுமலை, கோமங்கலம் என 15 அலுவலகங்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      ஒவ்வொரு அலுவலகத்திலும், பாதிக்கு பாதி மட்டும் டோக்கன் பதிவாகியிருந்தது. பல்லடம், அவிநாசி, உடுமலை ஆகிய இடங்களில் 100க்கு மேல் பத்திரங்கள் பதிவாயின. ஆயுத பூஜை முடிந்தநிலையில் பத்திரப்பதிவு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்ட பதிவாளர் லிங்கேஸ்வரன் கூறுகையில், வரும் முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கிறோம்.

      சர்வர் பிரச்னை காரணமாக பதிவு பணி சற்று தாமதம் ஆனது என்றார்.

      • விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.
      • ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம்.

      திருப்பூர்,அக்.24-

      ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

      மத்திய அரசு சார்பில், ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம், குறைவான பிரிமியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் சுரக்ஷா காப்பீடு திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையுள்ள, வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்பெறலாம்.

      விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.ஆண்டு பிரிமியமாக 20 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.பிரதமர் ஜீவன்ஜோதி காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்கள், 2லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு பெறலாம். ஆண்டு பிரிமியமாக 436 ரூபாய் செலுத்தி இணையலாம். காப்பீடுதாரர் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் காப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் பெறலாம்.

      வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள், ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம். அவரது வங்கி கணக்கில் இருந்து பிரிமியம் பிடித்தம் செய்யப்படும். ஏழை மக்கள், வங்கி கணக்கு இருந்தால் இத்திட்டங்களில் பயன்பெறலாம்.கிராமப்புற மக்களுக்கு முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பீடு செய்ய அறுவுறுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

      அதன்படி, 31ந் தேதி வரை, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

      • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
      • ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

      திருப்பூர்,அக்.24-

      தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருப்பூா் கோட்டம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

      பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி கிராமத்தில் உயா்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அருகே, 8 தளங்களுடன், 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பயனாளிகள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

      பயனாளிகள் திருமணமானவராகவும், நகராட்சி பகுதிக்குள் வசிப்பவராகவும், ஆண்டு வருமானம், ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். பயனாளி மற்றும் குடும்ப உறுப்பினருக்கு சொந்த வீடு, வீட்டுமனை இருக்கக் கூடாது. குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, பயனாளியின் புகைப்படம், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் நவம்பா் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

      மேலும், இது குறித்து தொடா்புக்கு 9626727628 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது

      ×