search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தொடக்கம்
    X

    கோப்பு படம்.

    திருப்பூர் நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தொடக்கம்

    • கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.
    • தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.கடும் குளிரில், இரை தேடி வாழ முடியாது என்பதால், 4முதல் 6மாதங்கள் வரை நஞ்சராயன் குளத்தில் வந்து தங்கி செல்கின்றன.

    ஒரு வார பயணமாக இங்கு வந்தடையும் பறவைகள், மிதவெப்ப சூழலில் தங்கி இரையெடுத்து, தங்கள் உடலை வலுவாக்கி கொள்கின்றன. கோடை வெப்பம் துவங்கும் போது, மீண்டும் தாய் நாட்டுக்கு சென்று கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

    குளிர்பருவம் துவங்கும், அக்டோபர் மாதத்தில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், தற்போது நஞ்சராயன் குளத்தில் தலைகாட்ட துவங்கியுள்ளன. ஏற்கனவே, ஏராளமான உள்நாட்டு பறவைகளும், கூட்டம், கூட்டமாக தங்கியிருப்பதால், பறவைகள் சரணாலயம் இப்போதிருந்தே களைகட்ட துவங்கிவிட்டது.

    திருப்பூர் வரும் பறவைகள், கூட்டம் கூட்டமாக தங்கியிருந்து மார்ச் மாதம் வரை குளத்தில் இளைப்பாறும்.அதற்கு பிறகு, தாய்நாடுகளுக்கு திரும்பி செல்லுமென, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

    பருவநிலை மாற்றம் காரணமாக, பறவைகள் வலசை வருவது சில ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில், சைபீரியா மற்றும் வட ஐரோப்பிய நாட்டு பறவைகள் திருப்பூர் வரும். திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் கடந்த 14ல் கணக்கெடுப்பு நடத்தினோம்.

    தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன. உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும், 286 வகையான பறவைகள், நஞ்சராயன் குளம் வந்து செல்வது வழக்கம்.

    இம்மாத இறுதியில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×