என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • நீளமான காய், அதிக மகசூல் கொடுக்கும் புளிப்பு சுவை மிக்க புளிய மரக்கன்றுகளை, மரபுப்பண்ணையில் உருவாக்கி வைத்துள்ளோம்
    • சாதாரண புளிக்கு, கிலோவுக்கு, 20 ரூபாய் மட்டும் தான் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

    திருப்பூர்:

    இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள், அதிக மகசூல் தரும் இனிப்பு, புளிப்பு, சிவப்பு ஆகிய புளிய மரக்கன்றுகளை உருவாக்கியுள்ளனர். இவை அடுத்தாண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து கோவை, இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானி, முனைவர் மாயவேல் கூறியதாவது:- இனிப்பு புளி, புளிப்பு புளி, சிவப்பு புளி என, மூன்று வகை புளிய மரங்கள் உள்ளன.நாடு முழுதும் நடந்த 30 ஆண்டு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு பின், அதிக மகசூல் கொடுக்கும் புளிய மர நாற்றுகள், மரபு பண்ணையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், அழியும் தருவாயில் உள்ள இவ்வகை மரங்கள் இனி காப்பாற்றப்படும்.

    நீளமான காய், அதிக மகசூல் கொடுக்கும் புளிப்பு சுவை மிக்க புளிய மரக்கன்றுகளை, மரபுப்பண்ணையில் உருவாக்கி வைத்துள்ளோம். ஐந்து முதல், ஆறு ஆண்டுகளில் காய் பிடிக்க துவங்கும். பொது இடங்களில் நட்டு வளர்த்தால், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையோரம் நட்டு, இரண்டு ஆண்டுகள் மட்டும் பராமரித்தால் போதும். நிலையான வருவாய் கொடுக்கும். ஒரு மரம், 100 கிலோ அளவுக்கு புளியை மகசூல் செய்யும். 100 கிலோ காயில், 42 கிலோ புளி கிடைக்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 4,500 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.

    இனிப்பு புளி மகசூல் குறைவாக இருந்தாலும், அதிக வருவாய் கிடைக்கும். இவ்வகை புளி, ஓட்டுடன், கிலோ 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சாதாரண புளிக்கு, கிலோவுக்கு, 20 ரூபாய் மட்டும் தான் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

    சிவப்பு புளி சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு கோவில்களில், சிவப்பு புளிய மரங்களை முன்னோர்கள் வளர்த்துள்ளனர். ஆந்திராவில் உள்ள சர்ச், டில்லியில் உள்ள மசூதிகளிலும் சிவப்பு புளிய மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. மரங்களை பாதுகாக்க வேண்டி, வழிபாட்டு தலங்களில் நட்டு வளர்த்துள்ளனர்.

    இதேபோல், அதிக எண்ணெய், கசப்பு தன்மை உள்ள, நிலையான காய்ப்பு தன்மையுடன் கூடிய வேப்பமரக்கன்றுகளையும் உருவாக்கியுள்ளோம். தற்போது உருவாக்கப்பட்டுள்ள நாற்றுகளை சோதனை அடிப்படையில் திருப்பூரில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் வாயிலாக நட்டுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவன்- மனைவி இருவரும் பனியன் நிறுவனத்தில் டெயிலர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
    • மோகனப்பிரியாவின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோடு கரையான்புதூர் பகுதியில் வசித்து வருபவர் முருகேஷ். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 33). கணவன்- மனைவி இருவரும் பனியன் நிறுவனத்தில் டெயிலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மோகனப்பிரியா வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதனைப் பார்த்து அலறி துடித்த அவரது கணவர் முருகேஷ், இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், மோகனப்பிரியாவின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான இடுபொருட்கள் உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு மானியம் வந்துள்ளதாகவும், இடுபொருட்களும் கையிருப்பில் உள்ளதாகவும் வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சான்று பெற்ற உளுந்து, சோளம், நிலக்கடலை விதைகளும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் நெல் விதை 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 25 சதவீத உரச் செலவை குறைக்கக்கூடிய ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியம் போக ரூ. 225-ல் பெற்றுக் கொள்ளலாம். உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.

    எனவே மானிய விலையில் உள்ள நுண்ணூட்டக் கலவைகள் ஒரு கிலோ வீதம் நெல் நுண்ணூட்டம் ரூ. 57.04, கரும்பு நுண்ணூட்டம் ரூ. 64.94, தென்னை நுண்ணூட்டம் ரூ102.54, பயறு நுண்ணூட்டம் ரூ.132.80, சிறுதானிய நுண்ணூட்டம் ரூ.101.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தேக்கு, மகாகனி, சவுக்கு, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு எக்டேர் பரப்பளவில் வேம்பு சாகுபடி செய்ய மானியம் ரூ. 21 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.மேலும் தென்னங்கன்றுகள் நெட்டை குட்டை ரகம் ரூ.125 க்கு விற்பனைக்கு உள்ளது. பேட்டரி தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மை அலுவலரை 9344737991 என்ற எண்ணிலும், துணை வேளாண்மை அலுவலரை 7904087328 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    திருப்பூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் பலரும் பயன்பெறவே புதியதாக குடும்ப அட்டைகளை பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், அதேசமயம் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து வட்ட வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: -

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது அக்டோபர் மாதம் வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பலர் இனி வரும் நாட்களில் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதியதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1500 முதல் 2000 குடும்ப அட்டைகள் புதியதாக விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    சென்னையில் இது பல மடங்கு அதிகமாக இருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஒரு வார காலமாக தான் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை தொடங்கி வழங்கி வருகிறோம். இன்னும் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இது நிலுவையில் இருப்பதால், விரைவில் அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பூஜையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • ஆயுதபூஜை விழா உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உடுமலை:

    அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், கட்சியின் மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அனைத்துலக எம்ஜிஆர்., மற்றும் துணை செயலாளர் வக்கீல் மனோகரன், மாவட்ட சார்புஅணி துபாய் ஆறுமுகம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பர் ராஜன், முருகேசன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி , பெரிய கோட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஸ்வநாதன், சரண்யா தேவி, வனிதாமணி , யூசி செல்வராஜ், சின்ன வீரம்பட்டி காளிமுத்து, வக்கீல் கண்ணன் , கர்ணசேகரன் ,கவுன்சிலர் சௌந்தர்ராஜன் , சந்தை வேலாயுதம், சரவணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட சார்பு அணி நிர்வாகிகள் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.
    • கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தை துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பதன் காரணமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.

    இதையடுத்து அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றமும், வளமும் பெற்று என்றும் சிறப்புடன் விளங்க பெற்றோர்கள், பள்ளித்தலைவர் மோகன் கே. கார்த்திக், தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு விருக்சா சர்வதேசப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி தாளாளர் ராஜலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் முன்னிலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் அமர்ந்து சரஸ்வதி ஸ்லோகம் கூறியும் அரிசியில் ஓம், அ, A ஆகியவற்றை எழுதியும் புதிதாக தங்கள் கல்வியை வித்யாரம்பம் மூலம் தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் உள்ள கே. எம். சி. சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது. நவராத்திரியையொட்டி கே.எம்.சி., பொதுப்பள்ளி வளாகத்தில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது . விஜயதசமி தினத்தையொட்டி பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையில் புதிதாக சேர்ந்த மழலையர் மற்றும் மாணவ மாணவிகளை நவராத்திரி கொலுவுக்கு முன் பெற்றோர்களுடன் அமர வைத்து, தானியத்தில் அ, ஆ உள்ளிட்ட எழுத்துக்களை எழுத பழகும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமாக பள்ளி தாளாளர் மனோகரன் கூறினார். பள்ளித்தலைவர் கே. சி. சண்முகம் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விழாவில் பள்ளி முதல்வர் சீனிவாசன் கற்றல் இனிது என்பது குறித்து பேசி, மாணவர்களை பாராட்டினார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். 

    திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விஜயதசமி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி பொருளாளர் ராதாராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். அவினாசி குருக்கள் காமாட்சி தாசர் சாமிகளால் வித்யாரம்பம் பூஜைகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.
    • முகமது மீரானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் சாலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பல்லடத்தை அடுத்த அருள்புரம்- திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் நேற்று காலை சாலையில் நடந்து சொல்லும்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.

    இது குறித்து பல்லடம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் மகன் முகமது மீரான்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது மீரானை போலீசார் கைது செய்து, பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
    • உழவர் சந்தைகளில் ஆயுத பூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் ஆயுத பூஜையையொட்டி காய்கறி விற்பனை களைகட்டியது. முதலில் பூசணிக்காய், பின்னர் பூ, பழம், காய்கள் வரத்து அதிகரித்தது. கடந்த 20-ந் தேதி முதல் வாழை இலை, கரும்பு, மஞ்சள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    காய்கறி விளைச்சல் அதிகரிப்பால் சந்தைகளில் காய்கறி வரத்தும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக விற்பனை சூடுபிடித்தது. கடந்த 22-ந்தேதி வடக்கு உழவர் சந்தை வரத்து 31 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 86 டன்னும் விற்பனைக்கு வந்தது.

    வழக்கமாக வடக்கு உழவர் சந்தையில் 24 டன்னும், தெற்கு உழவர் சந்தையில் 75 டன்னும் விற்பனைக்கு வரும். காய்கறி வரத்து அதிகமாக இருந்த போதிலும் விற்பனையும் அதிகரித்தது. காய்கறிகளின் விலையும் உயரவில்லை. கடந்த வார விலையே தொடர்ந்தது.

    • இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது.
    • மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல்வேறு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை, அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்குள்ள பெரிய வர்த்தகர்கள், உலக நாடுகளில் உள்ள சில்லரை வர்த்தகர்களுக்கு, ஆடைகளைவிற்கின்றனர்.

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், சங்கிலி தொடர் போல பல்வேறு நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன்காரணமாக, சங்கிலி தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் தாக்கம், தொடர்புள்ள நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது.

    கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்துவந்த ஆண்டில் மீண்டும் சூடுபிடித்தது. இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே துவங்கிய போரால், திருப்பூருக்கு புதிய ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பது அரிதாக மாறியுள்ளது.

    புதிய வளர்ச்சி இல்லாவிட்டாலும், வழக்கமான ஆர்டர்களை பெற முடியாமல், ஏற்றுமதியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடரும் போராட்டத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும், நூற்பாலைகள் மற்றும் தொடர்புடைய ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எப்படியும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய போர் திருப்பூர் ஏற்றுமதியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இஸ்ரேல் போர் சூழல் காரணமாக நேரடி பாதிப்பு திருப்பூருக்கு இருக்காது. இருப்பினும் சங்கிலி தொடராக உள்ள வர்த்தக தொடர்புகள் பாதிக்கும். இதன்காரணமாக, மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் இழுபறி ஏற்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கொப்பரை வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்ததுடன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
    • அரசு கொள்முதல் மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் கொப்பரை விலையை ஆதாரமாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் கொப்பரை விலையில் மந்தநிலை நிலவுகிறது. தென்னை சாகுபடியில் வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் போன்ற காரணங்களால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்த நிலையில் தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    கடந்த சில மாதங்களாக ஒரு தேங்காய் விலை ரூ.10 க்கும் குறைவாக இருந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் அதிக உற்பத்தி இருக்கும் சீசனில் தேங்காய் விற்பனை செய்யாமல் தோட்டங்களிலேயே இருப்பு வைத்தனர். இவ்வாறு பல லட்சம் தேங்காய்கள் உடுமலைப் பகுதியில் விற்பனையாகாமல் இருப்பு செய்யப்பட்டது. கொப்பரை உற்பத்திக்கான உலர் கலங்களிலும் உற்பத்தி குறைக்கப்பட்டு வர்த்தகம் பாதித்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கொப்பரை வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்ததுடன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காங்கேயம் சந்தை அடிப்படையில் கொப்பரை விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் இருப்பு வைத்த தேங்காய்களை விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக வர்த்தகத்தில் நிலவிய தொய்வு காரணமாக தேங்காய் விற்பனை செய்யவில்லை. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இதனால் உலர் களங்களுக்கு தேவை அதிகரித்து தேங்காய் விலை பல மடங்கு ஏறும். ஆனால் நடப்பாண்டு அதிக காய்கள் இருப்பு வைக்கப்பட்டதால் கொப்பரை தேங்காய் விலையில் உடனடியாக மாற்றம் ஏற்படாமல் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக துவங்கி உள்ள பருவமழையால் தேங்காய் பாதிப்பதை தவிர்க்கவும் விற்பனைக்கு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளோம். இந்த ஆண்டு வறட்சியால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகி தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    அரசு கொள்முதல் மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல் தென்னை நார் உற்பத்தி தொழிலை "ஆரஞ்சு" வகைப்படுத்திய உத்தரவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் நார் உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்திக்கு மூலப்பொருளான தேங்காய் மட்டைக்கும் விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்வாறு தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயர்வுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஊத்துக்குளி

    ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது
    • செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர்கள் நிறைந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அவைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×