search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தால் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்
    X

    கோப்புபடம்

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தால் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்

    • குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    திருப்பூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000-ம் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்களுக்கு மேல் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் பலரும் பயன்பெறவே புதியதாக குடும்ப அட்டைகளை பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், அதேசமயம் உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், குடும்ப அட்டை விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து வட்ட வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: -

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டன. அப்போது தொடங்கி தற்போது அக்டோபர் மாதம் வரை புதிய குடும்ப அட்டைகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய குடும்ப அட்டைக்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக குடும்ப அட்டை அச்சிடப்படவில்லை.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பலர் இனி வரும் நாட்களில் விண்ணப்பிக்க இருப்பதால், ஒரே கதவு எண்ணில் பலர் புதியதாக விண்ணப்பிப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் உரிய விசாரணைகள் முடிந்த பின்னர்தான், உரியவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க இயலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1500 முதல் 2000 குடும்ப அட்டைகள் புதியதாக விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    சென்னையில் இது பல மடங்கு அதிகமாக இருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஒரு வார காலமாக தான் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை தொடங்கி வழங்கி வருகிறோம். இன்னும் புதிய குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கும் பணி தொடங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இது நிலுவையில் இருப்பதால், விரைவில் அரசு இது தொடர்பாக தெளிவான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×