என் மலர்
திருப்பூர்
- பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.
உடுமலை:
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு கோடை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக பயன் அளிக்கும் தென் மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இல்லை.இதனால் பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு முழுமையான சுற்றுக்கள் நீர் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.
பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 11ந் தேதி வரை, 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு மொத்தம், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதான கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாணதோடு கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட 6 நாட்கள் மீண்டும் நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேலும், 6 நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.
திருப்பூர் பிரிவு கால்வாய்க்கு மட்டும் நேற்று முன்தினம் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. 135 நாட்கள் மண்டல பாசன காலமாகக்கொண்டு 5 சுற்றுக்கள் வரை நீர் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால் பாசன காலம் உயிர்த்தண்ணீர் சுற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.வட கிழக்கு பருவ மழையும் தற்போது துவங்கியுள்ளதால், 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை பொருத்து, நவம்பர் மாதத்தில் கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
- சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது.
குடிமங்கலம்,:
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மொச்சை, சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிவு தாமதம், பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால் மானாவாரி சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைப்பதில்லை. எனவே இத்தகைய சிறுதானிய சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. புரட்டாசி மாத துவக்கத்திலும் மழை இல்லை. இதனால் மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
இந்நிலையில் கடந்த வாரம் உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இதையடுத்து மானாவாரி சாகுபடிக்கு முன்னோட்டமாக உழவுப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், மானாவாரி சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். இந்தாண்டு தாமதமாகவே விதைப்பு செய்யும் நிலை உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது. பருவமழை கைகொடுத்தால் இந்தாண்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.
- மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
- பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்,:
ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்து பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளுக்கு அனைத்து பொருட்களும் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவதில்லை. தொடர்ந்து பல மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியன மாத இறுதி நாட்களிலேயே வழங்கப்படுகிறது.இதனால் ரேஷன் விற்பனையாளர் - பொதுமக்களிடையே வீண் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மிகுந்த மன உளைச்சலுக்கு ரேஷன் பணியாளர் தள்ளப்படுகின்றனர். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. இந்நிலையில், இம்மாதமும் குடோன்களில் துவரம்பருப்பு, பாமாயில் இல்லாமலேயே, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. பி.எச்.எச்., கார்டுகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஊழல் தடுப்பு வாரமாக கொண்டப்படுகிறது.
- ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.
திருப்பூர்,அக். 26-
கல்லூரிகளில் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்ேததி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த தினத்தையொட்டி, ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தலைப்பின் கீழ் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கல்லூரிகளில் கடைபிடிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
அதில், ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, இ மெயில், வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன.
- ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
திருப்பூர்,அக்.26-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் உள்ளன. இங்கு மட்டும், தினசரி ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தியும், 50 கோடி ரூபாய் அளவுக்கு வரவு, செலவு கணக்கும் நடைபெறுகிறது. இதில் 80 சதவீத துணிகள் மதிப்பு கூட்டப்பட்டு உள்நாட்டிலேயே குறைந்த விலையில் பயன்படுத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும் போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும்.
- சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது
- சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை.
அவிநாசி:
சேவூர் சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் ஒரு உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடுகோரி இப்பகுதி விவசாயிகள் கடந்த வாரம் அவினாசி வந்த மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
இது குறித்து சேவூர் பகுதி நிலக்கடலை விவசாயிகள் கூறியதாவது:-
சேவூர், குட்டகம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், தாமரைக்குளம், பாப்பான்குளம், முறியாண்டாம்பாளையம், கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் என 30 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை விவசாயம் நடந்து வருகிறது. வறட்சியை தாங்கி வளர்வதால் இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த நிலக்கடலை சாகுபடி உள்ளது. மழை பெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை. குறிப்பாக செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது. அதேபோல் விளையும் கடலைச்செடியிலும் பருப்புகள் மிகவும் உருப்படியாகவும், தரமாகவும் மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாக இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு ஏக மவுசு. அதேபோல் கடலை பருப்பி, கடலை எண்ணெய் மற்றும் வறுகடலைக்கு இந்த கடலைகள் நன்கு சுவையாகவும், இயற்கையாகவும் விளையும் தன்மை கொண்டதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அதேபோல் சுவையுடன், சத்தும் சேர்ந்திருப்பதால் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதேபோல் கடலை எண்ணெய்யை பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனம் மூலம் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். மானாவாரி விவசாயம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறையும், கிணற்று பாசனம் என்றால் ஆண்டுக்கு இருமுறையும் விளைவிப்போம். 100 நாட்கள் தான் இதன் அறுவடை காலம். எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் விளையும் சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சேவூர் நிலக்கடலை இந்த பகுதியில் 4600 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ மூட்டை 60 கிலோ ஆகும். நல்ல தரமான, சுவையான, சத்தான பருப்பாக இங்கு விளையும் கடலை இருப்பதால் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல்களின் படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.
சேவூர் கடலை மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெகு பிரசித்தம். இதனை நாடும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். புவிசார் குறியீடு கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இதனை அரசு தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.
- புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம்.
உடுமலை:
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் விவசாயத்துக்கு சவாலாகவும், விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அமராவதி, உடுமலை, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட இரை விலங்குகளிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்திலும், இரைகளை தேடியும் அடிவார பகுதிகளுக்கு வந்த காட்டுப்பன்றிகள் அங்கேயே தங்கி விட்டன. அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் இடம் பெயர்ந்து பரவியுள்ளன.மேலும் அந்த பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விளைநிலங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் பயிர்களைத் தின்றும் மிதித்தும் வீணாக்கி வருகின்றன. அத்துடன் கால்நடைகளை தாக்குவதுடன் மனிதர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.காட்டுப்பன்றிகளை விரட்டும் நோக்கத்தில் தாக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை.இதனால் காட்டுப்பன்றிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாற்று வழி தேட வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் விளைநிலங்களை சுற்றி சேலைகளை கட்டி விட்டால் அவை காற்றில் அசையும் போது அச்சத்தில் காட்டுப்பன்றிகள் ஓடி விடும். ஆனால் தற்போது சேலைகளை கிழித்து உள்ளே நுழைந்து பயிர்களை சேதப்படுத்துமளவுக்கு அவற்றின் வாழ்வியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம். சந்தையில் கிடைக்கும் அந்த திரவத்தை கயிறுகளில் நனைத்தோ அல்லது பாட்டில்களிலோ விளைநிலத்தைச் சுற்றி தொங்க விட வேண்டும்.அதிலிருந்து வெளிவரும் விரும்பத்தகாத வாசனையால் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களை நெருங்குவதில்லை.
ஆனால் சற்று கூடுதல் செலவு பிடிக்கும். இந்த திரவத்தை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன
- திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. அவர்களிடம் தகவல் தரலாம்
திருப்பூர்:
தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன.எனவே இதனை தடுக்க திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., 94450 - 48880, இன்ஸ்பெக்டர் 94981 - 02078, 0421 - 2482816 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எண்:40, ஆஷர் நகர், 2வது வீதி, எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம், அவிநாசி ரோடு, திருப்பூர் என்ற முகவரியில் நேரில் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர்.
- நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்., மேட்டுக்கடை பஸ் நிலையம் அருகே அன்னை கார்டனில் உள்ள அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு மாணவர்களுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி முதல்வர் இரா.அம்சமுத்து, குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை எல்.கே.ஜி. அசிரியருடன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு நோட்டு- புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகளை வழங்கினர். நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
- டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அபரிதமாக உயர்த்தப்பட்ட மின்சார நிலைக்கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16-ந் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அந்த போராட்டத்துக்கு பிறகும் முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக அடுத்த மாதம் 6-ந் தேதி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தொழில் நிலைமை குறித்து முறையிடுவது, டிசம்பர் மாதம் 4-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்று அறிவித்தனர்.
அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் டீமா தலைவர் முத்துரத்தினம், நிட்மா இணை தலைவர் கோபிநாத் பழனியப்பன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவர்களிடம் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாக்க சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும், தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
- திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்.
- முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.76 லட்சத்து 30 ஆயிரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி மொய்யாண்டபாளையம் பகுதியில் ரூ.2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திலும், தட்டான்குட்டை, ஜே.நகர் பகுதியில்22 லட்சத்து 80 ஆயிரத்திலும், புதிய தார்சாலை, அப்பியாபாளையம் ரங்காநகர் பகுதியில் ரூ.21 லட்சத்திலும்புதிய தார்சாலை, எஸ்.எஸ்.நகர் ஆரம்பப்பள்ளி அருகில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
இதில் திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் சேர்மன் தங்கராஜ், ஒன்றிய பொருளாளர் சிவசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், ஊராட்சி துணைத்தலைவர் ராஜாமணி கந்தசாமி, நிர்வாகி ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு சித்ரா, சொசைட்டி முன்னாள் தலைவர் கிட்டுசாமி, வார்டு உறுப்பினர்கள் முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், மு.தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம் மற்றும் பழனிகவுன்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.






