என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன
    • உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் பிரிந்து செல்லும் கொழுமம் ரோட்டில் அகல ெரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக எஸ்.வி.புரம், கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பான் குளம், பெருமாள் புதூர், சாமராய பட்டி, குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் உடுமலையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி ெரயில்கள் கடந்து செல்வதால் கேட் மூடப்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உடுமலையிலிருந்து தளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் போதே கொழுமம் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அகல ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் உடுமலை- கொழுமம் ரோட்டில் ெரயில்வே மேம்பாலம் கட்டவும் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார்.
    • காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரித்திடுக! பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசை கண்டித்தும், ஐ.நா. சபையே போரை நிறுத்து எனக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் கே.கே.ராசுக்குட்டி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுக்கா செயலாளர் வி.ஏ.சரவணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, காங்கிரஸ் நகர தலைவர் வேலன்(எ)ரங்கசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    • இரவு 10 மணியளவில் உணவகத்தில் வேலை முடித்து வேல் முருகன், அவரது நண்பர் குணசேகரன் ஆகியோர் வீடு திரும்பிகொண்டிருந்தனர்.
    • 24-ந் தேதி வேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 41). பல்லடம் -தாராபுரம் ரோட்டில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தெற்கு பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவருக்கும், இவரது நண்பர் ஜெயமணி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் கடந்த 24-ந் தேதி தெற்கு பாளையம் பிரிவு அருகே வேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து அன்று இரவு 10 மணியளவில் உணவகத்தில் வேலை முடித்து வேல் முருகன், அவரது நண்பர் குணசேகரன் ஆகியோர் வீடு திரும்பிகொண்டிருந்தனர். அப்போது பல்லடம் அருகே தெற்கு பாளையம் பிரிவில் 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்து தாக்கினர். இது குறித்து பல்லடம் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு பாளையம் பகுதியை சேர்ந்த அருட்செல்வன் ( 25), புவனேஸ்வரன் (25), கோபாலகிருஷ்ணன் (23), தாமரை சந்திரன் ( 20), மற்றும் பனப்பாளையத்தை சேர்ந்த ராஜு (25) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சிறிய சரக்கு வேன், அரிவாள், பட்டாக்கத்தி மற்றும் இரும்பு குழாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அரிசி ஆலை நீண்ட காலமாக செயல்பாடு இன்றி பூட்டி கிடந்தது.
    • சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த அரிசி ஆலை நீண்ட காலமாக செயல்பாடு இன்றி பூட்டி கிடந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அரிசி ஆலையில் இரவு நேரங்களில் மட்டும் ஆட்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. வேலைக்கு செல்பவர்கள் யாராவது தங்கி இருப்பார்கள் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் கருதி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு உள்ளே சென்று பார்த்த போது வேஸ்ட் காட்டன் என்று சொல்லப்படும் துணிகளை கொண்டு வந்து அதற்கு சாயம் ஏற்றும் தொழில் நடைபெற்று வருவதை கண்டு பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் சாயக்கழிவு நீரை அங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் விடுவதும் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தொழிற்சாலையால் சேமலைக்கவுண்டபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த தொழிற்சாலைக்கு எந்த அடிப்படையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய மின் இணைப்பில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
    • முகாமில் சுமார் 120 பசுக்கள், 250 ஆடுகள்,25 நாய்கள், 200 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளையம் பகுதியில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    மேலும் இந்த முகாமிற்கு கால்நடைபராமரிப்பு துறை திருப்பூர் சரக உதவி இயக்குனர் பரிமள்ராஜ்குமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மேனகா பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்முருகன், அர்ச்சுனன், கால்நடை ஆய்வாளர் சுதாபிரியா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழுநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் மற்றும் சினை பரிசோதனை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது .இம்முகாமில் சுமார் 120 பசுக்கள், 250 ஆடுகள்,25 நாய்கள், 200 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இறுதியாக கால்நடைகளை தாக்கும் நோய்கள் , அதன் தடுப்பு முறைகள் குறித்து உதவி இயக்குனர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சிறந்த கிடாரி க்கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • பழைய குடியிருப்பு பகுதியில் 2 ஆசிரியைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் துரிதமாக செயல்பட்டு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. தற்போது தாராபுரம் நகராட்சி முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது . இந்தநிலையில் 14வது வார்டு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பழைய குடியிருப்பு பகுதியில் 2 ஆசிரியைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து 14வது வார்டு பகுதி மக்கள் கூறுகையில்:-

    தாராபுரம் 14-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் மற்றும் கழிவுநீர்களை அகற்றாமல் இருந்த காரணத்தினால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஆகவே நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் துரிதமாக செயல்பட்டு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர்.  

    • கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 1300 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் சொந்த வீடில்லாதவர்கள் விண்ணப்பித்து வீடுகளை பெற்றுள்ளனர்.

    கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமானம் சரியில்லை எனவும் கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் செய்யப்படாமல் உள்ளதால் டிரைனேஜ் கழிவுநீர் பொதுமக்கள் செல்லும் பாதையிலேயே வழிந்து ஓடுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் வீடுகளில் நீர்க்கசிவு அதிக அளவில் இருப்பதால் சுவர்கள் சேதம் அடைவதாகவும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருவதால் வாடகை வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட பாதுகாப்பான உணர்வு கூட தற்போது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் பேசியதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலி எவ்வளவு வழங்கப்படுகிறது. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் ரூ.10, ரூ.20 வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்துக்கு காரணம் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனா். இது மிகவும் தவறானதாகும்.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் வழங்கக்கூடாது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தில் சோ்த்து அடையாள அட்டையின் எண்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். கா்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மாநில தூய்மைப் பணியாளா் ஆணையம் உள்ளது.

    இந்த மாநிலங்களில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, தமிழகத்திலும் மாநில தூய்மை பணியாளா் ஆணையத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

    ஒப்பந்த முறையால் சரிவர ஊதியம் வழங்குவதில்லை.பி.எப்., இ.எஸ்.ஐ.கட்டுவது, காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஆகவே ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும்போது அவா்களது வாழ்வாதாரம் உயரும். அனைத்து தொழிலாளா்களையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று அரசு நினைத்தால் கா்நாடகம், ஆந்திரத்தில் உள்ளது போன்று அரசு சாா்பில் நேரடியாக அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். உதாரணமாக திருப்பூா் மாநகராட்சியே ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை இல்லாவிட்டால் தொழிலாளா்களுக்கு சரியான முறையில் ஊதியம் சென்றடைவதுடன், தூய்மைப் பணியாளா்க ளுக்கான பிரச்னைகளும் தீரும். ஆகவே, தமிழக அரசு இத்தகைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றாா்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாநகராட்சி உதவி ஆணையா்கள், நகராட்சி ஆணையா்கள், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, பேரூராட்சி செயல் அலுவலா்கள், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளா்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
    • கண்காட்சியில் உலகின் 1,300 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் திருப்பூரின் வளங்குன்றா பின்னலாடை உற்பத்தி முறைகள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    வளங்குன்றா உற்பத்தி கோட்பாடுகளை துரிதமாக அமல்படுத்த ஐரோப்பிய, அமெரிக்க உள்ளிட்ட வளா்ந்த பொருளாதார நாடுகள் பெரும் முனைப்புகளை முன்னெடுத்துள்ளன. இதன் மூலமாக வரும் 2030- ம் ஆண்டுக்குகள் இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களில் 50 சதவீதம் வளங்குன்றா வளா்ச்சிக் கோட்பாட்டினின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையை கருத்தில் கொண்டு திருப்பூா் பின்னலாடை உற்பத்தியின் பின்னணியில் உள்ள பல்வேறு வளங்குன்றா உற்பத்திக் கோட்பாடுகள் குறித்த விவரங்களை உலக அளவில் எடுத்து செல்லும் விதமாக பல்வேறு முயற்சிகளை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூட்டமைப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக உறுப்பினராக சோ்ந்தது.

    இந்த அமைப்பு கடந்த 21 ஆண்டுகளாக சூழலியல் பாதிக்காத உற்பத்தி குறித்தான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளா்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வோா் ஆண்டும் ஏதாவது ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நகரங்களில் 5 நாள் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சியினை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லண்டன் நகரில் கடந்த அக்டோபா் 22 ந் தேதி முதல் 26 ந் தேதி வரையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. எனது அறிவுறுத்தலின்பேரில் இந்த கருத்தரங்கில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் என்.திருகுமரன், இணைச்செயலாளா் குமாா் துரைசாமி ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.

    இந்த இருவரும் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூட்டமைப்பு நிபுணா்களுடன் திருப்பூரின் வளங்குன்றா உற்பத்தி முறைகள் குறித்து எடுத்துக்கூறி அதற்கான ஆவணங்களையும் சமா்ப்பித்தனா். அதிலும் குறிப்பாக பூஜ்ய முறை சாயக்கழிவு நீா் சுத்திகரிப்பு, காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி, திருப்பூரில் 8 ஆண்டுகளில் 17 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், மழைநீா் சேகரிப்பு, கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் மறு சுழற்சி, துணிக்கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரித்தல், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் நெகிழி மற்றும் இதர அக்சஸரிஸ், குளங்களை தூா்வாரி பராமரித்தல், கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக பங்களிப்பில் திருப்பூா் தொழில் சமூகத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தனா்.இந்த கண்காட்சியில் உலகின் 1,300 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வாலிபர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேவராயம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்த வாலிபரின் தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் அவிநாசி பகுதியில் சுற்றி திரிந்து வந்ததுடன், பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் அவிநாசி பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிட செல்வது வழக்கம்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் இறந்து கிடந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர், நேற்று அந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்றதும், அப்போது அங்கு ஒரு பெண், 2 வாலிபர்கள் தட்டிக்கேட்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதும், பின்னர் 3பேரும் சேர்ந்து வாலிபரை அங்கிருந்து வெளியேற்றியதும் தெரியவந்தது. இந்த தகராறு காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    எனவே இந்த பிரச்சனையில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வாலிபர்கள் 2பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் சாப்பிட சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான கழிவுநீர் மேலாண்மை முறைபடுத்துதல் சட்டம் 2022-ஐ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி செப்டிக் டேங்க் கழிவுநீரினை திறந்த வெளியிலோ, நீர்நிலைகளிலோ, இதர பகுதிகளிலோ சுத்திகரிக்கப்படாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை அடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கண்ட துறையின் அரசாணை வெளியிடப்பட்டதில் திருப்பூர் மாநகர பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் வாகனங்கள் திருப்பூர் மாநகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களின் தினசரி செயல்பாட்டினை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் மேற்கண்ட கருவியினை பொருத்திக்கொள்வது கட்டாயமாகும். மேலும் மாநகராட்சி அனுமதி பெறாத வாகனங்கள் 30.6.2023 முதல் மாநகராட்சி எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. தவறும் பட்சத்தில் மேற்படி அனுமதி பெறாத வாகனங்கள் மாநகராட்சிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரினை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரேற்று நிலையத்தில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் மட்டுமே கழிவுநீரினை விட வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை இயந்திரங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பணியாளர்களை உள்ளே இறக்கி பணி மேற்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், மாநகராட்சி மைய அலுவலகத்தில் கழிவுநீர் மேலாண்மை திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களுக்கென்று "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் கால்வாய்களில் எற்படும் அடைப்புகள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகள் தொடர்பான புகார்கள் இவ்வழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு தங்கள் பதிவுகள் மற்றும் புகார்களை பதிவு செய்து கொள்ளவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கசடு கழிவுநீர் சுத்தம் செய்ய பெறப்படும் அழைப்புகள் இம்மாநகராட்சியில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகளில் ஈடுபடும் கள பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்து தருவது சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் பொறுப்பாகும். வாகனங்கள் கழிவுநீரேற்று நிலைய வளாகத்திற்குள் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொது மக்கள் தங்கள் சந்தேகங்களை இம்மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 14420 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தி க்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்

    திருப்பூர்:

    நுகர்வோரிடம் வசூலிக்கும் வரி முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், வரி ஏய்ப்புகளை குறைப்பதற்காகவும், மத்திய அரசு, மேரா பில் மேரா அதிகார் அதாவது என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோரில் பிரத்யேக செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மொபைல் செயலியில் நுகர்வோர், தங்கள் பெயர், மொபைல் எண்ணை அளித்து எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் போது ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்ததற்கான பில்லை போட்டோ எடுத்து இந்த ஆப் ல் அப்லோட் செய்ய வேண்டும். ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 பில்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

    ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவி க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.திட்டம் துவங்கிய 51 நாட்களிலேயே இந்த செயலி மூலம் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 972 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ளன.

    இம்மாதம் மட்டும் குஜராத்தில் 93,576, அசாம் - 15,850, ஹரியானா - 35,429, புதுச்சேரி - 8,677, டாமன், டையூ, தாத்ரா நகர் - 1,351 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 883 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர்கள் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தடுப்பதற்கான புதுமையான முயற்சியாக, மேரா பில் மேரா அதிகார் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது. வணிகர் வழங்கும் ஜி.எஸ்.டி., பில், இந்த திட்டத்தில் மொபைல் ஆப் வாயிலாக நுகர்வோரிடமிருந்து அரசுக்கு சென்றடைந்து விடும்.

    இதனால் குறிப்பிட்ட வணிகர் முறையாக வரி செலுத்துகிறாரா, வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அதனடிப்படையில் வரி ஏய்ப்பு தடுப்பு, ஏய்ப்பு வரியை வசூலிப்பது போன்ற துறைசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

    வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு வரி வருவாய் இன்றியமையாததாக உள்ளது. இந்த திட்டம் மூலம் தாங்கள் செலுத்தும் வரி, முறையாக அரசுக்கு சென்றடைய வேண்டும் என்கிற பொறுப்பு நுகர்வோர் மத்தியில் அதிகரிக்கும். திட்டம் நடைமுறையில் உள்ள 3 மாநிலங்களில் நுகர்வோர் ஆர்வமுடன் ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை மத்திய அரசு விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×