search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insist"

    • சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
    • விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.

    கருமத்தம்பட்டி,

    கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிரந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். தொடர்ந்து ஊராட்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கிராமத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்து உள்ளது. இதற்கான சவால்களும் அதிகமாக உள்ளன. இருந்தபோதிலும் அதை நோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    கோவையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரை சேமிக்க ஏதுவாக மழைநீர் பாதுகாப்பு திட்டங்கள் மேம்படுத்த ப்பட்டு வருகிறது. தனியார் கட்டிடமாக இருந்தாலும் அரசு கட்டிடமாக இருந்தாலும் மழை நீரை கட்டாயம் சேமிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மையை பொருத்தவரை மக்கும்-மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பைகளை அகற்றி வருகிறோம்.

    இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு பயிர் கடன் வாங்குவதற்கான பல்வேறு பயன்கள் கிடைக்கும். மேலும் எந்தவிதமான அடமானமும் இன்றி ரூ.60 ஆயிரம் வரை கடன் பெற இயலும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு கோடை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளுக்கு அதிக பயன் அளிக்கும் தென் மேற்கு பருவ மழையும் ஏமாற்றியதால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர்இருப்பு இல்லை.இதனால் பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு முழுமையான சுற்றுக்கள் நீர் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.

    பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 11ந் தேதி வரை, 21 நாட்களுக்குள் ஒரு சுற்றுக்கு மொத்தம், 2 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரதான கால்வாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வீணாணதோடு கால்வாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட 6 நாட்கள் மீண்டும் நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேலும், 6 நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் நிறைவு செய்யப்பட்டது.

    திருப்பூர் பிரிவு கால்வாய்க்கு மட்டும் நேற்று முன்தினம் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. 135 நாட்கள் மண்டல பாசன காலமாகக்கொண்டு 5 சுற்றுக்கள் வரை நீர் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால் பாசன காலம் உயிர்த்தண்ணீர் சுற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.வட கிழக்கு பருவ மழையும் தற்போது துவங்கியுள்ளதால், 4ம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் இருப்பை பொருத்து, நவம்பர் மாதத்தில் கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி ரூ.1,657 கோடி செலவில் நடந்து முடிந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம், காலிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, வெளியேறும் உபரிநீர் தான் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை நம்பிதான் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

    இது குறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென் மேற்கு பருவமழையை கணக்கிட்டு திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில் தென் மேற்கு பருவமழை பொய்த்தது. வட கிழக்கு பருவமழையின் போது போதிய மழை பெய்து, நீர் வரத்து இருக்கும் போது தான் திட்டத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வர முடியும் என்றனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறுகையில், கடந்த ஆண்டே இத்திட்டம் 90 சதவீதம் முடிந்துவிட்டது.கடந்த நான்காண்டாக நீலகிரி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து பவானியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கடந்தாண்டு 620 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அப்போதே வெள்ளோட்டம் முடித்து திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கும் அளவுக்கு பெய்யாது. நீலகிரி மலைத்தொடரில் பெருமழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே உபரி நீர்வெளியேறும். அதன் வாயிலாக திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறுகையில், நீலகிரி மலையில் பெய்யும் மழையை நம்பியே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இடைபட்ட நேரத்தில் திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
    • மதியம் 2 மணிக்கு பணி முடிந்த பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.இம்மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது.சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் விவசாயப்பணிகளை மேற்கொள்வதுடன் அருகிலுள்ள நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்து திரும்பிய பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றியமைத்தால், மருத்துவமனைகளின் செயல்பாடு பயனற்றதாகி விடும்.

    ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரிவாக்கம், திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் செல்வது வழக்கம்.கால்நடை மருத்துவமனைகளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, யாராவது ஒருவர் பணியில் இருந்தாலும், முதலுதவி போன்ற உதவிகளை செய்ய முடியும்.மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிந்தால் மறுநாள் காலை 8மணி வரை, அதாவது, 18 மணி நேர இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ சேவையும் கிடைக்காது.கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ளதால் நோய்த்தாக்குதல், அடிக்கடி ஏற்பட்டு பரவி வருகிறது.

    இவ்வகை கால்நடைகளை கட்டி வளர்க்கும் நிலையில், மருத்துவ ஊழியர்களை, விளைநிலங்களுக்கே அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே தனியார் டாக்டர்களை நாடும் நிலை உள்ளது.எனவே கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது. அவசர கதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக நடமாடும் மருத்துவ வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர். மேலும் பணி நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

    • பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
    • பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியன் சார்பில் 3-ம் பேரவை கூட்டம் திருப்பூர் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். திருப்பூர் கூட்டுறவு கட்டிட சங்க செயலாளர் செல்வி வெங்கடாசலம் வரவேற்றார். பொதுச்செயலாளர் சக்திவேல் கனகரத்தினம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் நாகராஜ் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

    பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி தமிழ்நாடு அரசு பணியா–ளர்–கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளம், பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால நிதிப்பயன்கள் வழங்க வேண்டும். புதிய கடன்களை வழங்க வேண்டும். மாற்றுப்பணி, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு தள்ளுபடி திட்டங்களால் சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொகையை வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி தர வேண்டும். வீட்டுவசதி சங்கங்கள் மூலமாக பொது இ-சேவை மையம் அமைக்க அனுமதிக்க வேண்டும். அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×