search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்கக்கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்கக்கூடாது - விவசாயிகள் வலியுறுத்தல்

    • கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
    • மதியம் 2 மணிக்கு பணி முடிந்த பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கால்நடைத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றியமைக்க, அரசு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.இம்மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது.சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலங்களில் விவசாயப்பணிகளை மேற்கொள்வதுடன் அருகிலுள்ள நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். மதியம் 2 மணிக்கு பணி முடிந்து திரும்பிய பிறகே, கால்நடைகள் பராமரிப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள்.இந்நிலையில் கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என மாற்றியமைத்தால், மருத்துவமனைகளின் செயல்பாடு பயனற்றதாகி விடும்.

    ஆய்வுப்பணிகள், அவசர சிகிச்சை, விரிவாக்கம், திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க, டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் செல்வது வழக்கம்.கால்நடை மருத்துவமனைகளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, யாராவது ஒருவர் பணியில் இருந்தாலும், முதலுதவி போன்ற உதவிகளை செய்ய முடியும்.மதியம் 2 மணியுடன் வேலை நேரம் முடிந்தால் மறுநாள் காலை 8மணி வரை, அதாவது, 18 மணி நேர இடைவெளியில் எவ்வித கால்நடை மருத்துவ சேவையும் கிடைக்காது.கலப்பின கால்நடைகள் அதிகமாக உள்ளதால் நோய்த்தாக்குதல், அடிக்கடி ஏற்பட்டு பரவி வருகிறது.

    இவ்வகை கால்நடைகளை கட்டி வளர்க்கும் நிலையில், மருத்துவ ஊழியர்களை, விளைநிலங்களுக்கே அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. அவசர தேவைகளுக்கு தற்போதே தனியார் டாக்டர்களை நாடும் நிலை உள்ளது.எனவே கால்நடை மருத்துவமனைகளின் பணி நேரத்தை மாற்றக்கூடாது. அவசர கதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக நடமாடும் மருத்துவ வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர். மேலும் பணி நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

    Next Story
    ×