என் மலர்
தூத்துக்குடி
- நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பரிகார பூஜைகள் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

இதற்கிடையே அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் முதலே கடல் உள்வாங்கி காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக சுமார் 80 அடி வரை கடல் உள்வாங்கி இருந்ததது. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்பாசிகள் வெளியே தெரிந்தது.
- தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது.
- உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங்குக்கு நன்றி.
சென்னை, நவ.29-
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடிதம் வழங்கியிருந்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங்குக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
- உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி:
தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டபிடாரத்தில் 20 மில்லி மீட்டரும், சூரன்குடியில் 18 மில்லி மீட்டரும், வைப்பாரில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், காடல்குடி, மணியாச்சி, வேடநத்தம், கீழ வைப்பார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கொடுமுடியாறு பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது. 55.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று 40 அடியாக உள்ளது. இதேபோல் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 88.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 88.35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியாகவும் உயர்ந்துள்ளது.
நெல்லை, பாளை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்தது.
கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவர்கள் 29-ந் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3 வது நாளாக விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூந்தங்குடி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட மீனவ பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
- நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை போதிய மழை இல்லாத நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே இலங்கை அருகே கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த தகவல் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள ஆலய ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், தோமையர்புரம் பகுதியில் கட்டுமரத்தில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்பதால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்று 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 300 விசைப் படகுகள் மீன்பிடி துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதே போல கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை, கொம்புத்துறை, புன்னக்காயல் பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- வாலிபர் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தேவிகலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (26) என்பது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பருப்பு கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்.
- 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ ரேசன் துவரம் பருப்பை பறிமுதல்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் அத்தியாவசிய பொருட்கள் கடத் தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் உணவுப் பாொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பகுதிக்கு வெளியூரில் இருந்து ரேஷன் அரிசி மற்றும் பருப்பு கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அருப்புக் கோட்டையில் குடிமை பொருள் தனி வட்டாட்சியர் அறிவழகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடியாக வாகனத் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் மூட்டை, மூட்டையாக ரேசன் துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரியவந்தது. வாகனத்தை ஒட்டி வந்த டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் குதித்து தப்பி சென்ற நிலையில், அந்த வாகனத்தில் இருந்த 60 மூட்டை 3 ஆயிரம் கிலோ எடையுள்ள ரேசன் துவரம் பருப்பை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த ரேஷன் துவரம் பருப்பானது, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் இருந்து விருதுநகர் தனியார் மில்லிற்கு கொண்டு செல்ல இருந்ததாக தனி வட்டாட்சியர் அறிவழகன் கூறினார்.
இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- இறந்த இடத்தையும், தெய்வானை யானையையும் பார்வையிட்டார்.
- முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கி யதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.
இந்த துயர செய்தியை கேட்டவுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார்.

அதை யானை வாங்கி சாப்பிட்டு தலையை அசைத்தது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகர் சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து அவர் சிசு பாலன் மகள் அஷ்யாவிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3லட்சம் என ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-
யானை பாகன் இறந்த 10 நிமிடத்தில் யானை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. யானை பாகன் உயிரிழப்பு பாதிப்பில் இருந்து இன்னும் அது மீள வில்லை. யானை சரிவர உணவை உட்கொள்வதை தவிர்க்கிறது. தற்போது யானை நலனுடன் உள்ளது. 5 துறை சார்ந்த அதிகாரிகள் குழு யானையின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவில் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. யானைகள் குளிப்பதற்கு பிரத்யேக நீச்சல் குளம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
யானைகளுக்கு தேவையான அனைத்தும் செய்யக்கூடிய நிலையில் ஆண்டுதோறும் நடக்கும் புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பாக வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை செய்து முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவதற்கான பரிந்து ரைகள் வந்தால் அந்த பணி மேற்கொள்ளப்படும். கோவிலில் நடந்த சம்ப வத்தில் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுளளது.துறை சார்ந்த குழு தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது.
கால்நடை, வனத்துறை மருத்துவர்கள் குழு தொடர்ந்து அங்கேயே இருந்து கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பணிகள் முடிந்த உடன் அடுத்தகட்ட நடவடிக்கை முதல்-அமைச்சரின் ஆலோ சனை படி எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 28 கோவில்களில் யானைகளுக்கு தேவையான அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணி மருத்துவர்களின் பரிந்து ரைப்படி உணவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளது
யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் சேகர் பாபுவுடன் கோவில் தக்கார் அருள் முருகன், இந்து சமய அறநிலைய முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வன கால்நடை மருத்துவர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்
- இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
- வழக்கம் போல பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. எனினும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கம் போல் ஏராளமானவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினர்.
அப்போது அங்கு புனித நீராடிய காரைக்குடியை சேர்ந்த சிவகாமி (வயது50), சென்னையை சேர்ந்த கீர்த்தனா (40) என்ற 2 பெண்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து 2 பேரையும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக கடலுக்குள் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பாகன் இறந்த இடத்தையே பார்த்தவாறு பாகன் நினைவிலே உள்ளது.
- யானையை பக்தர்கள் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெய்வானை யானையை பராமரிக்க 3 பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பாகன் உதயகுமார் என்பவர் இருந்தார்.
அப்போது அவரது உறவினரான சிசுபாலன் என்பவர் யானை முன்பு வெகு நேரம் செல்பி எடுத்ததால் தெய்வானை யானை ஆத்திரமடைந்து சிசுபாலனை தாக்கியது.
அப்போது பின்னால் இருந்து சிசுபாலனை காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரை பாகன் என்று தெரியாமல் துதிக்கையால் தள்ளியது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்தது பாகன் என்று தெரிந்ததும் யானை அவரை துதிக்கையால் தட்டி எழுப்பி உள்ளது.
உதயகுமார் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் யானை மண்டியிட்டு அவரையே பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. மேலும் போலீசார் உதயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க முற்பட்ட போதும் எடுக்க விடாமல் தடுத்துள்ளது.
அப்போது மற்ற பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில் குமார் இருவரும் வந்து யானையிடம் அதற்குரிய பாஷையில் பேசி சமாதானப்படுத்திய பிறகே உடலை எடுத்துள்ளனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த நேற்று முன்தினம் மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணிவரை பாகன் உதயகுமார் நினைவிலே இருந்த யானை உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளது. மற்ற பாகன் இருவரும் சமாதானம் செய்த பின்பு வழக்கமாக கொடுக்கும் மெனுவில் உள்ள உணவு கொடுத்த போது சிறிதளவே சாப்பிட்டுள்ளது.
சம்பவம் நடந்து இன்று 3-வது நாள் வரை சரிவர அதாவது இயல்பான உணவை உட்கொள்ளாமல் பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வருகிறது. மேலும் பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று பார்த்தவாறு பாகன் நினைவிலே உள்ளது.

தற்போது யானையை பக்தர்கள் யாரும் பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ரேவதிரமன் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
5 நாட்களுக்கு பின்னர் தான் யானையை வழக்கமான பணிக்கு பயன்படுத்தலாமா? அல்லது முகாமிற்கு அனுப்பலாமா? என முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இறந்துபோன உதயகுமார் உடலுக்கு கோவில் தக்கார் அருள்முருகன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் சம்பவம் நடந்த இடம் மற்றும் யானை கட்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
- யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் 26 வயது தெய்வானை யானை உள்ளது. இந்த கோவில் யானையை பராமரிக்க பாகன்களாக அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 46), ராதாகிருஷ்ணன் (57), செந்தில்குமார் (47) ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை யானை பராமரிப்பு பணியில் பாகன் உதயகுமார் மட்டும் இருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பலுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன் (59) வந்துள்ளார்.
நேற்று மாலை யானை அருகே சென்றபோது சிசு பாலனை யானை தாக்கியது. அப்போது அதனை பார்த்த பாகன் உதயகுமார் அதனை தடுக்க சென்றபோது அவரையும் யானை தாக்கியதில் 2 பேரும் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். இதற்கிடையே சக பாகன்கள் யானையை சாந்தப்படுத்தி கூடுதல் சங்கிலிகள் கொண்டு அதனை கட்டி போட்டனர். சிசுபாலன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் வங்கியில் பணி யாற்றி வருகிறார்.
இவரது தந்தை திருச்செந்தூரில் யானை பாகனாக இருந்ததால் சிறு வயது முதலே சிசுபாலன் யானைகளை பார்க்க வருவது வழக்கமாகும்.தெய்வானை யானை தங்குவதற்கு ராஜகோபுரம் பகுதியில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த குடிலின் பின் வாசல் வழியாக சிசுபாலன் சென்றுள்ளார். அப்போது அவர் யானையின் துதிக்கையில் முத்தம் கொடுத்தும், யானையின் முன்னால் நின்று தனது செல்போனில் 'செல்பி'யும் எடுத்துள்ளார்.
இதற்கிடையே ஏற்கனவே அந்த யானையிடம் சிசுபாலன் விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவர் மீது யானை கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் நீண்ட நேரம் 'செல்பி' எடுத்ததால் ஆத்திரம் அடைந்த யானை அவரை துதிக்கை யால் சுற்றி வளைத்து தாக்கி யது. இதனை யானையின் பின்னால் நின்ற உதயகுமார் பார்த்து அதிர்ச்சியடைந்து சிசுபாலனை மீட்க சென்றுள்ளார்.

அப்போது பின்னால் இருந்து வேறு யாரோ வருகிறார்கள் என நினைத்து துதிக்கையால் அவரையும் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாகனும், சிசுபாலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னால் வந்த நபர் பாகன் உதயகுமார் என்பது தெரிந்ததும் பாகனை தாக்கி விட்டோமே என்று நினைத்து யானை வருந்தியது.
சி.சி.டி.வி.காட்சிகள்
எப்போதும் யானை பாகன் மீது மிகுந்த பாசத்தில் இருந்து வருமாம். இந்நிலையில் கோபம் தணிந்ததும் பாகனை தாக்கியதை அறிந்த யானை குழந்தைபோல் கண்ணீர் விட்டு தன்னை கட்டிப்போட்ட இடத்தில் இருந்து மண்டியிட்டு உதயக்குமாரை துதிக்கையால் தூக்கியவாறு அவரை எழுப்ப முயன்றது.
பலமுறை இவ்வாறாக செய்தும் பாகன் எழுந்திருக்காததால் யானை கண்ணீர் விட்டபடி சோகத்தில் மூழ்கியது. அப்போது யானையை சாந்த படுத்திய சக பாகன்களை பார்த்து தெய்வானை யானை கண் கலங்கி நின்றது. இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
பாகன் உதயகுமார் தெய்வானை யானையுடன் மிகவும் அன்பாக பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே யானை அவருடன் வளர்ந்ததால் எப்போதும் அது அன்யோன்யமாக நடந்து கொள்ளும். தினமும் நடைபயிற்சியின் போதும், பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போதும் உதயக்குமாருடன் யானை விளையாடி கொண்டி ருக்கும்.
தொட்டியில் குளிக்கும்போதும், முகாம்களுக்கு சென்றி ருக்கும்போதும் யானை உதயக்குமாருடன் நெருங்கி பழகி விளையாடுமாம்.
பாகனை தாக்கிய வருத்தத்தில் யானை சோகமாக இருந்ததுடன் இரவு வரை சாப்பிடாமல் இருந்தது. சம்பவம் நேற்று மாலை 3 மணி அளவில் நடந்த நிலையில் இரவு 10 மணி வரை யானை உணவருந்தவில்லை. அதற்கு பின்னர் பாகன்கள் முயற்சியால் சிறிதளவு பச்சை ஓலையை சாப்பிட்டது.
இதுகுறித்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் கூறும்போது,சிசுபாலன் யானையின் முன்பு நின்று 'செல்பி' எடுத்தவாறு துதிக்கையில் முத்தமிட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது ஆத்திரத்தில் இருந்த யானை அவரை தாக்கி உள்ளது என்றார்.
தொடர்ந்து யானைக்கு மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், வனத்துறை மருத்துவர்கள் மனோகர், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து யானை குடிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் தெய்வானை யானையை பராமரிப்பதற்காக நெல்லையப்பர் கோவில் யானை பாகன் ராமதாஸ் என்பவரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் யானை இதுவரை பாகன்களையோ, பக்தர்களையோ தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. நேற்றும் அங்கு சென்ற பிற பாகன்களையோ மற்றவர்களையோ தாக்காத யானை சிசுபாலனை மட்டும் தாக்கியதன் காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடைசியாக பாகன் உதயகுமார் தெய்வானை யானை மீது தண்ணீர் காட்டும் காட்சி களும், தன்னை அறியாமல் பாகனை தாக்கியதை அறிந்த தெய்வானை யானை குழந்தை போல் கண் கலங்கிய காட்சிகளும் தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அது பார்ப்பவர்கள் கண்களை கலங்க செய்யும் வகையில் உள்ளது.
- திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உள்பட இருவர் உயிரிழப்பு.
- கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை மிதித்து யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஆகியோரை மிதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது.
பிறகு, கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவில் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
- இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருச்செந்தூரில் கோவில் யானை தெய்வானை பாகன் மற்றும் அவரது உறவினரை மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஒருவரை யானை மிதித்து தாக்கியது.
இதில், படுகாயமடைந்த யானை பாகன் மற்றும் பக்தர் ஆகியோரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை முன்பு உறவினர்கள் கதறி அழுதனர்.






