என் மலர்
தூத்துக்குடி
- கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தூத்துக்குடி:
வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.
இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.
- விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த மருத்துவ மாணவர்களான சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
- பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை திடீரென திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ராமசாமிபுரம், நாலு மூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், காயாமொழி, தளவாய்புரம், வீரபாண்டிய பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.
திருச்செந்தூரில் பெய்த கனமழையால் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பரமன்குறிச்சியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்தது. திடீரென காலை 8.30 மணிக்கு மேல் சுமார் 1மணி நேரமாக கனமழை பெய்தது. 9 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர். சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஒடியது. இதனால் பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
திருச்செந்தூர் காய்-கனி மார்க்கெட் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் குளம் போல் காணப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
- பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்தது
- உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
- நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.
கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று பரவலான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உட்பட்ட சிவன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
- கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.
- பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.
- தென்காசி, கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றார்.
- விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடக்கிறது.
இதற்கிடையே, தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அங்கு நூலகத்தையும் திறந்துவைத்தார்.
இதில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில், மின்வாரிய அலுவலகம் எதிரில், 3 சென்ட் இடத்தில் நகர தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2 தளங்களை கொண்ட இந்த அலுவலகத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரத்தில் பீடம், 8 அடி உயரத்தில் சிலை என மொத்தம் 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மேலும், இந்த அலுவலகத்தில் தரைதளத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் வைப்பதற்காக, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன.
அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நூலகத்திற்கு வந்து அங்குள்ள புத்தகங்களை வாசிக்கலாம்.
புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் வருகையை ஒட்டி, கனிமொழி எம்பி., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் கோவில்பட்டிக்கு வந்து, புதிய தி.மு.க., அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் வழிகாட்டுதலின்படி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளருமான (மேற்கு) கருணாநிதி, நகர (கிழக்கு) பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
- சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட் களால் அபிஷேகம் நடை பெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான இன்று மாலையில் கடற்கரையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் தலையா கடல் அலையா? என கூறும் வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, விநாயகர் போன்ற வேடங்கள் அணிந்து வந்தும் வழிபாடு செய்தனர்.
பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராத னைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாரா தனை நடைபெற்று 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், யானை, சிங்க முகத்தில் வந்த அசுரனை முருகன் வதம் செய்தார். தொடாந்து, சூரனை வேலால் முருகப் பெருமான் வதம் செய்தார்.
பின்னர், 3வதாக தன் முகத்தோடு போரிட வந்த சூரப்மனையும் வதம் செய்தார்.
அப்போது, விண்ணை பிளக்கும் அளவில் பக்தர்களின் அரோகரா கோஷம் இருந்தது.
- சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 5-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.
பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்ட பத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனைக்கு பின் மதியம் 2மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமும், மூன்றாவதாக தன்முகம் (சூரன்), நான்காவது சேவலாக மாறிய சூரனை வதம் செய்கிறார்.
பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்கு பிறகு சுவாமி, அம்பாள் கிரிப் பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாளை சூரசம்ஹாரத்தை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளிக்கிறது.
சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரலை செய்யப்பட உள்ளது.
7-ம் திருவிழாவான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். அங்கு மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






