சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை - உறவினர்கள் சாலை மறியல்

கொலை குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுடலைமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபர் ஓடஓட விரட்டி  படுகொலை - உறவினர்கள் சாலை மறியல்
Published on

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சுடலை முத்து (வயது 25). கூலி தொழிலாளி.

இவர் இன்று காலை தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் திடீரென சுடலைமுத்துவுடன் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில் 2 பேரும் மீண்டும் அதே பகுதிக்கு வந்து சுடலை முத்துவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்த சுடலைமுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

ஆனாலும் 2 பேரும் துரத்தி சென்று ஓட ஓட விரட்டி சுடலை முத்துவை வழிமறித்து தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுடலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனே அவரை வெட்டிய வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

கொலை குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அங்கு சுடலைமுத்துவின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் சுடலைமுத்து உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை அங்கிருந்து எடுக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் (பொறுப்பு) டி.எஸ்.பி. ராமச்சந்திரன், திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்துவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட சுடலைமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தான்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சாத்தான்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com